இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர்தான் “மூன்றாவது உலகம்” என்ற பதம் உருவாகிறது. இரண்டாம் உலகப் போர் என்பது காலனியாதிக்க நாடுகளிலிருந்து உருவான நேச நாடுகளைக் குறிக்கும்.
காலனியாதிக்கக் காலத்திற்குப் பின்னர் நிறுவப்பட்ட உலக ஒழுங்கு என்பது ஏகாதிபத்தியமாகவும், சுரண்டல் அமைப்பைக் கொண்டதாகவுமே இருந்தன.
அந்தச் சுரண்டல் அமைப்பில் வளங்கள் பெருமளவில் இடமாற்றம் செய்யப்பட்டன. பணக்கார நாடுகள் மேலும் வளம் கொழிக்கும் நாடுகளாயின. ஏழை நாடுகள் இன்னும் ஏழ்மையாகிப் போயின.
1820ல் பணக்கார நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கும் உள்ள பொருளாதார வளங்களிள் வேற்றுமை விகிதாச்சாரம் 3.1 என்ற அளவில் இருந்தது. அதாவது, மொத்த உலகின் பொருளாதார வளங்களில் இரண்டு பகுதி பணக்கார நாடுகளிடமும், ஒரு பகுதி எழை நாடுகளிடமும் இருந்தது.
1992ல் இந்தப் பொளுளாதார வளங்களின் வேற்றுமை விகிதாச்சாரம் 721 ஆக மாறியது.
இப்பொழுது நாம் இந்த விகிதாச்சாரத்தைக் கணக்கிட்டால் அது இன்னும் அதிகரித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இப்படி உலக நாடுகளைச் சுரண்டி தங்களை வளமாக மாற்றிக் கொண்ட இந்தச் சுரண்டல் பேர்வழி நாடுகள் இன்று “மரியாதைக்குரிய” நாடுகளாக விளங்குகின்றன. ஆனால் சுரண்டப்பட்ட நாடுகளை இந்த உலம் இகழ்கிறது; அலட்சியப்படுத்துகிறது.
“மூன்றாம் உலகம்” என்ற பதம் வந்ததே மூன்றாந்தர, மூன்றாம் வகுப்பு நாடுகள் என்று எழை நாடுகளை இழிவாகக் குறிப்பிடத்தான்.
சுரண்டுவதையெல்லாம் சுரண்டிவிட்டு, தங்களை வளமாக்கி உலகத்தின் ஒரு பகுதி மக்களை வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளி, பசி பட்டினியில் உழல விட்டுள்ள மேலை நாடுகள் தங்கள் தகிடுதத்தங்களை மறைப்பதற்கு இவ்வாறு கூறுகின்றன:
“இந்த நாடுகள் முன்னேறாமைக்குக் காரணம் அவை தங்களது பழைய மரபுகளைப் பின்பற்றுவதுதான். தங்கள் மரபுகளைப் பின்பற்றுவதில் பிடிவாதம் காட்டாமல் இந்த ஏழை நாடுகள் மேலை நாடுகளைப் போன்று “முன்னேற்றப் பாதையைத்” தேர்ந்தெடுக்க வேண்டும்.”
இப்படிச் சொல்லி இதுதான் ஏழை நாடுகள் முன்னோறாமைக்குக் காரணம் என்று இந்த மேலை நாடுகள் பழி போடுகின்றன; பலரை நம்ப வைத்துள்ளன.
தங்களது ‘மரபுகளைப்’ பின்பற்றாமல்’ நவீனத்துவத்திற்கு வாருங்கள் என்று அழைக்கின்றன.
எல்லா முஸ்லிம் நாடுகளும் இந்த ‘மூன்றாவது உலகத்’ தரத்தில்தான் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் வியப்பதற்கு ஏதும் இல்லை.
பல ‘படித்த’ முஸ்லிம் பரம்பரையினர் இந்த மேலை நாடுகளின் சொற்களைத்தான் நம்பியுள்ளனர். நமது நாடுகள் முன்னேற வேண்டுமென்றால் நவீனத்துவம் வேண்டும் என்கின்றார்கள் இவர்கள். அதாவது, நவீனத்துவம் என்றால் மேலைநாட்டு மயமாக்கம் என்று பொருள்.
அதனால் இந்த முஸ்லிம் நாடுகளின் படித்தவர்கள் தங்கள் நாடுகளுக்கு ஏதாவது பிரச்னை என்றால் மேலை நாடுகளின் உதவிகளையும் வழிகாட்டுதல்களையுமே நாடுகின்றனர்.
அவர்கள் தங்கள் சொந்த சமுதாயங்களையே தவறிய, குற்றமிழைத்த சமுதாயமாகப் பார்க்கின்றனர். மரபுகளைப் பின்பற்றுவதாலும் மதத்தோடு பிணைந்திருப்பதாலும்தான் இந்த அளவுக்குப் பின்தங்கிப் போயுள்ளோம் என்று அவர்கள் எண்ணுகின்றனர்.
பெரும்பாலான முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்கள் இந்தச் சிந்தனையில்தான் இருக்கின்றார்கள்.
இந்த நயவஞ்சகத்தனத்தைக் கைவிட்டு, தங்களது சமூகங்களை நல்ல கண்ணோட்டத்தோடு அவர்கள் பார்ப்பதற்கு நாம் அழைப்பு கொடுக்க வேண்டிய தருணம் இது.
அவர்கள் அப்படி நல்ல கண்ணோட்டத்தோடு தங்கள் சமூகங்களைப் பார்க்க ஆரம்பித்தால், தங்கள் சமூகங்களுக்கு நல்லவை இஸ்லாத்திலிருந்து வருவதையும், நயவஞ்சகத்தனத்திலிருந்தும் இஸ்லாத்தைப் பின்பற்றாமையிலிருந்தும் தீயவை வருவதையும் அவர் கண்டு கொள்வார்கள்.
இஸ்லாம் இந்த உலக பலாபலன்களை நோக்கமாகக் கொண்டு வாழ்வதைச் சொல்லவில்லை. மாறாக, இந்த உலகின் ஒவ்வொரு மணித் துளியையும் இறப்பிற்குப் பின்வரும் மறுமையில் நற்கூலி கிடைப்பதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறது.
இஸ்லாம் முஸ்லிம்களை நேரந்தவறாமையைக் கடைப்பிடிக்க வலியுறுத்துகிறது. காலத்தை வீணாக்குவதைக் கண்டிக்கிறது. அதனை நடைமுறைப்படுத்தியும் காட்டுகிறது.
இந்தப் பரந்து விரிந்த முஸ்லிம் உலகில் குறித்த நேரத்தில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செய்யப்படுவது ‘அதான்’ எனும் தொழுகைக்கான அழைப்பு. பெரிய நகரங்களாயினும் சிறிய கிராமங்களானாலும், ஒரு நாளைக்கு ஐந்து தடவை, தவறாமல் இந்த அழைப்பொலி கேட்டுக் கோண்டே இருக்கும், இந்த அழைப்பொலியைக் கேட்டவுடன் மக்கள் பள்ளிக்கு வந்து குறித்த நேரத்தில் கூட்டுத் தொழுகையை நிறைவேற்றுவர் இந்த புனிதக் கடமையிலிருந்து அவர்களைத் தடுப்பது எதுவும் இல்லை
இந்த நேரத்தைக் கடைப்பிடிக்கும் பழக்கம் எந்த அரசாலும் கட்டுப்படுத்தப்படவில்லை எந்தப் பெரிய வியாபாரங்களாலும் முறைப்படுத்தப்படவில்லை
அதிகமான மக்கள் தங்கள் படுக்கையில் கிடக்கும்பொழுது அவர்களுக்கு அருகிலிருக்கும் பள்ளியிலுள்ள முஅத்தின் தொழுகைக்கான அழைப்பொலியை விடுத்து அவர்களை எழுப்புவார். “அஸ்ஸலாத்து ஃகைரும் மினன் நவ்ம்” - “தூக்கத்தை விட தொழுகை மேலானது “ என்று அவர் அறைகூவல் விடுவார்.
ஒரு முஅத்தினும் கொஞ்சம் மக்களும் கூட்டுத் தொழுகைக்கு வந்து கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் அனைத்து மக்களும் இந்தக் கடமையைச் செய்தால்…
கற்பனை பண்ணிப் பாருங்கள். அனைவரும் இந்தக் கடமையில் கண்ணும் கருத்துமாய் இருந்தால் அவர்களது பொறுப்புணர்வு இந்தக் கடமையான தொழுகைகளுக்கு அப்பால் சென்று உயர்ந்து நிற்கும். வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் அந்தப் பொறுப்புணர்வு மிளிர்ந்து நிற்கும்.
இந்த உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் சமுகத் தீமைகளை ஒழிப்பதற்கு ஈடு இணையற்ற இஸ்லாத்தின் சக்தியால் மட்டுமே இயலும்!
ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும் இன்று வரை தீமை எனும் மகா சமுத்திரத்தில் நன்மை எனும் தீவுகளாக விளங்குவது முஸ்லிம் நாடுகள்தான்.
மதுப் பழக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவில் ஒரு வருடத்திற்கு 250 கோடி டாலர்கள் மதுப் பழக்கத்திலும், போதைப் பழக்கத்திலும் புரளுகின்றன. இத்தோடு இது சமுகத்தின் அறநெறியில் ஏற்படுத்தும் பாதிப்புகள் வேறு.
இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு அமெரிக்காவில் ஒரு முயற்சி நடந்தது. 1917ல் அமெரிக்க காங்கிரஸ் 18வது சட்டத் திருத்தம் ஒன்றை நிறைவேற்றி மதுவைத் தடை செய்தது.
அங்கே இந்த மதுவிலக்கைக் கொண்டு வருவதற்கு ஒரு நூற்றாண்டு முயற்சி தேவைப்பட்டது. அடிமட்ட அளவில் எடுக்கப்பட்ட முயற்சிகள், மதுவிலக்குப் பிரச்சாரங்கள், சர்ச்சுகளில் பிரார்த்தனைகள் என்று ஒரு நூற்றாண்டிற்குப் பிறகே இது அமுலுக்கு வந்தது.
அமெரிக்க காங்கிரஸ் இந்த மதுவிலக்கை அமுல்படுத்தி மதுப் பழக்கமில்லாத நாட்டை உருவாக்குவதற்காக 50 லட்சம் டாலர்களை ஒதுக்கியது. சில வருடங்கள் கழித்து இத்தொகை 300 லட்சம் டாலர்கள் ஆனது.
13 வருடங்கள் கழித்து இந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட்டது. இதற்கு மாறாக, 14 நூற்றண்டுகளுக்கு முன் இஸ்லாம் மதுவைத் தடை செய்தது. மதுவிலேயே மூழ்கியிருந்த ஒரு சமுதாயத்தில் சில வருடங்களில் மூன்று கட்டங்களாக மது தடை செய்யப்பட்டது. அதன்பின் முஸ்லிம்கள் அந்தப் பழக்கத்தை முற்றாக மறந்து போயினர்.
இதேபோல் ஆஃப்கானிஸ்தானில் ஒரு சம்பவம். அபின் செடிகள் அங்கே பயிரிடப்பட்டிருந்தன. அங்குள்ள தாலிபான் அமீரின் ஒரு கட்டளையால் அங்கே அந்தச் செடிகளைப் பயிரிடுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டது.
நூற்றுக்கணக்கான அறிஞர்களோ, இலட்சக்கணக்கான டாலர்களோ செய்ய முடியாததை ஓர் அமீரின் கட்டளை நிறைவேற்றியுள்ளது. (மேலை நாடுகளின் ஆதரவோடு இங்கும் வடக்கு கூட்டணியின் கட்டுப்பாட்டிலுள்ள சில பகுதிகளில் மட்டும் இன்றும் அபின் செடிகள் பயிரிடப்படுகின்றன.)
விபச்சாரத்தின் அடிப்படையில் பெண்களைக் கொடுமை செய்யும் மிகப் பெரிய குற்றம் “முதல் உலகத்தில்” அரங்கேற்றப்பட்டது. மனித இனத்திற்கெதிரான, ஒழுக்கத்திற்கெதிரான இந்தக் கொடுமை, அது சட்டப் பூர்வமானதோ, இல்லையோ முதல் உலக நாடுகள் சென்ற இடங்களிலெல்லாம் நடந்தேறியது.
முதல் உலக நாடுகளின் இராணுவப் படையினர் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் இந்தத் தீமையை நடைமுறையாக்கினார்கள்.
முஸ்லிம் உலகம் இதிலும் விதிவிலக்கு பெறுகிறது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இந்த உலகிற்கு வருவதற்கு முன்னால் அவர்களுக்கு முன்னால் வந்த இறைத்தூதர்களின் போதனைகளை இந்த உலகம் மறந்திருந்தது. அல்லது சிதைத்திருந்தது. அதனால் மொத்த உலகமுமே இருளில் தத்தளித்தது.
எம்பெருமானார் முஹம்மது (ஸல) அவர்கள் இந்த உலகத்திற்கு ஒளியைப் பாய்ச்சினார்கள். “தவ்ஹீத்” என்னும் ஏக இறைக் கொள்கை, உலக சகோதரத்துவம், அன்பு, கருணை, சமத்துவம், நீதி, இறையச்ச உணர்வு, அறநெறிகள் ஆகியவற்றை அவர்கள் மக்களுக்குக் கற்றுத் தந்தார்கள்.
முஸ்லிம்கள் என்று இவைகளை மறந்தார்களோ அன்றிலிருந்து மிண்டும் இவ்வையகத்தை இருள் கவ்வத் தொடங்கியது. முதலாம், இரண்டாம், மூன்றாம் உலகங்களாக இந்தப் பூமி பிரிக்கப்பட்டது.
அராஜகங்களும், அறியாமையும் மீண்டும் அரங்கேறி விட்டன. நாம் மீண்டும் இஸ்லாத்தைக் கையில் ஏந்தினால் இவ்வுலகுக்கு ஓளி பாய்ச்சலாம். சரியான இடங்களை நோக்கி நமது பார்வைகளைத் திருப்பினால், நாம் விடைகளைக் கண்டறியலாம்.
ஆம்! இஸ்லாம் ஒன்றே அனைத்துக்கும் தீர்வு!
விடியல் வெள்ளி அக்டோபர் 2001 இதழில்
‘இம்பாக்ட் பக்கம்’ பகுதியில் இடம் பெற்ற கட்டுரை
நன்றி M.S.அப்துல் ஹமீது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக