Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 9 டிசம்பர், 2013

ரியல் எஸ்டேட் மனைகளுக்கான அங்கீகாரமும் நிபந்தனைகளும்

ஒரு மனையை வாங்குவது பெரிய விஷயமில்லை. அந்த மனைக்கு அங்கீகாரம் உள்ளதா என்பதே முக்கியம். பலரும் அங்கீகாரம் இல்லாத மனையை வாங்கிவிட்டுப் பின்னர் அல்லல்படுவார்கள். ஒரு மனையை அரசும் அவ்வளவு சுலபத்தில் அங்கீகரித்து விடுவதில்லை. மனைகளை அங்கீகரிப்பதற்காகவே நிறைய வழிகாட்டு நிபந்தனைகளை வகுத்துள்ளது அரசு. அவற்றை மனை வாங்குபவர்களும் தெரிந்துகொள்வது பயன் தரும்.

யார் யாருக்கு அதிகாரம்?
பொதுவாகக் கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட லே அவுட்கள் பற்றிப் பொது மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்றே சொல்லலாம். கிராமப் பஞ்சாயத்துகளில்தான் அங்கீகாரம் இல்லாத மனைகள் அதிகளவில் விற்பனையாகின்றன. மனைகள் பஞ்சாயத்து அங்கீகாரம் பெற்றவை என விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், உண்மையில் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு மனைகளுக்கு அங்கீகாரம் அளிக்க அதிகாரம் இல்லை. மேலும், பஞ்சாயத்துப் பகுதிகளில் அங்கீகாரத்திற்கெனத் தனி அமைப்புகள் எதுவும் இதுவரை உருவாக்கப்படவில்லை. உள்ளூர் திட்டக் குழு மற்றும் டிடிசிபி தான் லே அவுட்களை அங்கீகரிக்கின்றன. 5 ஏக்கர் பரப்பளவுவரை உள்ளூர் திட்டக்குழுவின் அதிகாரத்துக்குள்ளும் 5 ஏக்கருக்கு மேற்பட்ட லே அவுட்டை அங்கீகரிக்கும் அதிகாரம் டிடிசிபியின் வரம்புக்குள்ளும் வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
நிபந்தனைகள் என்னென்ன?
மனை லேஅவுட்டுக்கு என்னென்ன நிபந்தனைகளின் அடிப்படையில் அரசு அங்கீகாரம் அளிக்கிறது என்பதைப் பார்ப்போம்…
#குறிப்பிட்ட நிலம் புறம்போக்கு இல்லை என்று தடையில்லாச் சான்று பெறுதல் அவசியம். நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான அரசு அறிவிக்கை எண் 4(1) இன் படியும், நிலச் சீர்திருத்தச் சட்டம் (1961), நில உச்சவரம்பு சட்டம் (1978) இன் கீழ் வராமல் இருக்க வேண்டும். பருவ மழைக் காலத்தில் மனைப் பகுதியில் வெள்ளம் வந்திருக்கக் கூடாது.
#தாசில்தாரிடமிருந்து நில அளவை புத்தகம்/ நகரச் சர்வே வரைபடம்; பட்டா/ சிட்டா/ நகர சர்வே நில ஆவணங்கள்; கிராம வரைபட நகல், நிலம் அமைந்திருக்கும் பகுதி வழியாகச் செல்லும் நீர்த்தடம் பற்றிய விவரங்களை அரசு ஆராயும்.
#2500 சதுர மீட்டருக்கு மேல் பரப்பளவுள்ள நிலத்துக்கு, திறந்த வெளி ஒதுக்கீட்டுக்காக 10 சதவீதத்துக்கு மேல் இடம் ஒதுக்க வேண்டும். அதை வரைபடத்திலேயே காண்பிக்க வேண்டியது அவசியம்.
#குறிப்பிட்ட நிலத்தின் வழியாக மின்சாரம் / தொலைபேசி இணைப்பு வழி இருக்குமானால் அதை மாற்றுவதற்கான அங்கீகாரத்துக்கு 20 ரூபாய் மதிப்புள்ள முத்திரைத் தீர்வையை (ஸ்டாம்ப் பேப்பர்)அளிப்பது முக்கியம்.
எங்கெல்லாம் என்.ஓ.சி. தேவை?
இன்று ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எங்கு வேண்டுமானலும் மனைப் பிரிவுகள் உருவாக்குவதைப் பார்க்க முடிகிறது. எனவே மனையோ நிலமோ கீழ்க்கண்ட இடங்களுக்கு அருகில் இருந்தால் எங்கெங்குத் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
1. குளமோ, ஏரியோ 15 மீட்டர் தூரத்தில் இருந்தால் பொதுப்பணித் துறை அல்லது தொடர்புடைய துறைகளிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.
2. ரயில்வே இருப்புப் பாதைக்கு 30 மீட்டர் அருகில் இருந்தால் ரயில்வே துறையிடம் தடையில்லாச் சான்றிதழ் பெறுவது அவசியம்.
3. குப்பைக் கிடங்கு அருகில் இருந்தால் உள்ளாட்சித் துறையிடம் தடையில்லாச் சான்றிதழ் பெறுவது முக்கியம்.
4. இடுகாடு / சுடுகாடு 90 மீட்டருக்கு அருகில் இருந்தால் சுகாதாரத் துறை அதிகாரியிடம் தடையில்லாச் சான்றிதழ் பெறவேண்டும்.
5. கல்குவாரிக்கு 300 மீட்டர் தூரத்தில் இருந்தால் சுரங்கத் துறையிடம் தடையில்லாச் சான்றிதழ் வாங்குவது கட்டாயம்.
6. விமான நிலையத்திலிருந்து 500 மீட்டர் தூரத்தில் நிலம் இருந்தால் விமான நிலைய ஆணையத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.
7. இவை மட்டும் போதாது. 30 ஆண்டுகளுக்கு வில்லங்கமில்லாச் சான்றிதழும் அரசு வழக்கறிஞரின் சட்ட ஆலோசனையும்கூடத் தேவை.
மலைப்பிரதேசங்களில்…
கிராம, நகரப் பகுதிகளில் மனைப் பிரிவுகளுக்கு அங்கீகாரம் பெற நிபந்தனைகள் இருப்பதைப் போலமலைப்பிரதேசங்களில் சிறப்பு நிபந்தனைகள் உள்ளன.
#வேளாண்மை பொறியியல் துறையிலிருந்து தடையில்லாச் சான்றிதழ்
#மாவட்ட வன அதிகாரியிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ்
#நிலவியல் மற்றும் சுரங்கத்துறையினரின் தடையில்லாச் சான்றிதழ் வாங்க வேண்டும்.
நன்றி கல்லாறு.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக