Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

போரினும் கொடியது மௌனம்....

ஒரு இப்தார் விருந்தில்..
இன்று மாலை ஒரு இப்தார் விருந்து நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பலரும் வந்திருந்தனர். சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் எஸ்.டி.பி ஐ கட்சியினர்.

இந்த ஆண்டு ரமலானை நினைத்துக் கொண்டேன். அநேகமாக இந்தியக் குடியரசுத் தலைவர் அளித்த இப்தார் விருந்தை முதல் முதலாக ஒரு இந்தியப் பிரதமர் புறக்கணித்தது இந்த ஆண்டுதான்... வழக்கமாக பிரதமர் அளிக்கும் இப்தார் விருந்து நிறுத்தப்பட்டதும்கூட இந்த ஆண்டுதான் என நினைக்கிறேன்.

ஒரு பல்லின, பல்மத மக்கள் வாழும் நாட்டில் சிறுபான்மையாக இருக்கும் மக்களுக்கு பெரும்பான்மை மக்கள் அளிக்கும் நம்பிக்கைகளில் ஒன்று இத்தகைய ஒன்று கூடல்கள். அன்று அவர்களின் உடைகளை அணிந்து கொள்வது, அவர்களோடு நடனமாடுவது, அவர்களோடு ஒன்றாக அமர்ந்து உண்பது என்பதெல்லாம் மனித மேன்மையின் சிகரங்கள்.
இந்தியக் குடியரசின் இந்த 65 ஆண்டு கால வரலாற்றில் அநேகமாக குடியரசுத் தலைவர் அளித்த இப்தார் விருந்தை ஒரு இந்தியப் பிரதமர் புறக்கணித்தது என்பது இதுதான் முதல் தடவை.
இந்தியப் பிரதமர்கள் அளிக்கும் இப்தார் விருந்தும் இந்த ஆண்டு இல்லை எனவும் ஊடகங்கள் எழுதுகின்றன.
குஜராத் முதல்வராக இருந்தபோது ஒரு சந்திப்பில். தம் துயரங்களை மட்டுமல்ல தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் அனைத்தையும் மறந்து அங்கு வந்திருந்த முஸ்லிம்கள் அன்புடன் அளித்த அந்த வெள்ளைக் குல்லாயை அணிய மறுத்த பெருமைக்குரியவர் இன்று அகில இந்திய அரசு கட்டிலில்..
அது மட்டுமா?
1947க்குப் பிந்திய இந்திய வரலாற்றில் மத்திய அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு உரிய இடமளிக்காத முதல் அமைச்சரவை இன்றுள்ளதுதான்.
அபுல் கலாம் ஆசாத், ஃபக்ருதீன் முகம்மது, எம்.சி.சாக்ளா முதலானவர்கள் மிக முக்கிய இடங்களில் அமர்த்தப்பட்டனர். அவ்வளவு ஏன் சென்ற காங்கிரஸ் ஆட்சியில் குலாம் நபி ஆசாத், சல்மான் குர்ஷித் முதலானவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன்.
இன்று?
சிறுபான்மை மக்கள் நலனுக்கான அமைச்சராகக் காங்கிரசிலிருந்து விலகி வந்து சேர்ந்துள்ள நஜ்மா ஹெப்துல்லா வந்தவுடன் சொன்னது இந்த நாட்டில் முஸ்லிம்கள் சிறுபான்மை இல்லையாம். 'பார்சிகளை' மட்டுமே சிறுபான்மையாகக் கருத முடியுமாம். பல முஸ்லிம் நாடுகளில் உள்ளதைவிட இங்குள்ள முஸ்லிம்கள் எண்ணிக்கையில் அதிகமாம்.
சட்ட அமைச்சராகப் பதவி ஏற்ற ஒருவர் ( பெயர் மறந்தேன்) முஸ்லிம்களுக்கு 4.5 சத இட ஒதுக்கீடு கிடையாது என முழங்கினார்.
"சிறுபான்மை" என்பதை வரையறுக்கும் பன்னாட்டுச் சட்டங்கள் அவர்கள் பெரும்பான்மையைக் காட்டிலும் எண்ணிக்கையில் குறைவாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கின்றன. எவ்வளவு குறைவாக இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை.இந்தியாவில் இந்துக்கள் சுமார் 80 சதம், அடுத்த நிலையில் உள்ள முஸ்லிம்கள் வெறும் 13.5 சதம் மட்டும். ஆனாலும் இவர்கள் சிறுபான்மை இல்லை என்கிறார் நஜ்மா.
ஆனால் பன்னாட்டுச் சட்ட வல்லுனர்கள் என்ன சொல்கின்றனர்? இப்படிச் சிறுபான்மை என்பதை வரையறுக்க "எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்க வேண்டும்" என்கிற நிபந்தனையே அடிப்படையில் தவறு என்கின்றனர்.
அதற்கு எடுத்துக்காட்டாக அவர்கள் ஒன்றாக இருந்த பாகிஸ்தானைச் சுட்டிக் காட்டுகின்றனர். அப்போது கிழக்கு பாகிஸ்தானின் (இன்றைய வங்க தேசம்) மக்கள் தொகை 54 சதம், அதாவது இன்றைய பாகிஸ்தானாக இருக்கும் பகுதியின் மக்கள் தொகையைவிட அதிகம். ஆனால் வங்காளிகள் என்கிற வகையில் அவர்கள் சிறுபான்மை மக்களாகக் கருதப்பட்டனர்.
ஆனால் 13.5 சதம் ரொம்ப அதிகம், உங்களைச் சிறுபான்மையாகக் கருத முடியாது என்கிறது பா.ஜ.க அரசு.
நேரு அமர்ந்த நாற்காலியில் அமர்ந்துள்ளார் இன்று இந்த மோடி.
அவருக்குத் தெரியுமா நேரு தன் திருமண அழைப்பிதழை ஆங்கிலத்திலோ, இந்தியிலோ அச்சிடவில்லை, உருது மொழியில் மட்டுமே அச்சிட்டார் என.
###################
அவர்கள் உறுதி செய்து விட்டனர். உங்கள் வாக்குகள், உங்கள் நல்லெண்ணங்கள், நீங்கள் அச்சமின்றி வாழும் நிலை எதுவும் தேவை இல்லை என. மக்களைப் பிளவுபடுத்துவது ஒன்றே போதுமென.
################
எல்லோரும் காஸாவில் நடக்கும் கொடுமைகள் குறித்து முழங்கினர். ஆனால் எனக்கு முன் பேசிய யாரும் இந்திய அரசு காக்கும் மௌனம் குறித்து ஒன்றும் கூறவில்லை.
தமிழியல் அறிஞர் டேவிட் ஷுல்மான் இன்றைய நிகழ்வுகளை நேரில் கண்டு எழுதியுள்ள கட்டுரை ஒன்றை நினைவுகூர்ந்தேன். காஸாவில் இஸ்ரேலியர் போடும் குண்டுகளை விடக் கொடியது உலக நாடுகள் காட்டும் மௌனம் என்கிறார் அவர்.
இந்தியா காட்டும் மௌனம்...?
பலஸ்தீனப் பிரச்சினையில் இந்தியா சுதந்திரமடைந்த நாள் தொட்டு (1990கள் வரை) முழுமையாக பலஸ்தீன மக்களின் நியாயங்களை ஆதரித்தது. 1974ல் பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்திற்கு (PLO) முஸ்லிம் நாடுகள் ஏற்பு வழங்கியபோது, ஏற்பு வழங்கிய முதல் அரபு அல்லாத, முஸ்லிம் அல்லாத நாடு இந்தியாதான். தொடர்ந்து பலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கு இந்தியா முழு ஆதரவு வழங்கியது.
1990களூக்குப் பின், சோஷலிச நாடுகளின் வீழ்ச்சிக்குப் பின், இந்தியா உலகமயப் போருளாதாரத்தை ஏற்றபின் 1992ல் முதன்முதலாக இஸ்ரேலுடன் அயலுறவவை ஏற்படுத்தியதாக அறிவித்தது. ஆம் கடைசியாக இப்படி இஸ்ரேலுடன் அயலுறவை ஏற்படுத்திக் கொண்ட முஸ்லிம் அல்லாத நாடு என்கிற "பெருமையையும்" இந்தியா பெற்றது.
ஆனாலும் காங்கிரஸ் கட்சி தனது பழைய பாரம்பரியத்தைக் காப்பாற்றும் கடமையில் PLO அமைப்பிற்குத் தூதரகம் கட்ட மதிப்புமிக்க இடம் ஒன்றை டெல்லியில் அன்பளிப்பாக அளித்து, புதிய கட்டிடத்தைத் திறந்து வைக்க அப்பாசும் வந்தார். நிதி உதவி, படைகளுக்குப் பயிற்சி உதவி முதலியவற்றையும் காங்கிரஸ் அரசு செய்தது, அமெரிக்க - இஸ்ரேல் ஆதரவு நிலை எடுத்த பின்னும்கூடக் காங்கிரஸ் அரசு இதைச் செய்தது.
பா.ஜ.க வைப் பொருத்த மட்டில் எதிரிக்கு (முஸ்லிம்களுக்கு) எதிரி என்கிற வகையில் யூதர்கள் எப்போதுமே அவர்களின் நண்பர்கள். 1978ல் ஜனதா ஆட்சியில் அவர்கள் பங்கேற்றபோது இஸ்ரேலின் அன்றைய பாதுகாப்பு அமைச்சர், இகழ் பெற்ற ஒற்றைக்கண் மோஷே தயான் இரகசியமாக இங்கு வந்து வாஜ்பேயியைச் சந்தித்துச் சென்ற கதையை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட இயலாது,
பலஸ்தீனியர், இஸ்ரேலியர் இருவருமே நண்பர்களாம். நாம் காசாவில் குண்டு மழை பொழிவதற்காகத் தீர்மானம் இயற்ற இயலாதாம்.கொல்பவர்களும், கொல்லப்படுபவர்களும் இருவருமே வேண்டியவர்களாம். நாம் மௌனம் காக்க வேண்டுமாம் சுஷ்மா சுவராஜ் சொல்கிறார். நாம் தலை ஆட்டுகிறோம். அல்லது அடையாளத்திற்கு ஒரு ஆர்பா ட்டம் நடத்தி ஓய்கிறோம்......
################
மனம் கனத்தது.
வீட்டிற்கு வந்து இதைத் தட்டிக் கொண்டிருக்கிறேன்...
போரினும் கொடியது மௌனம்....

முகநூலிருந்து
மார்க்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக