Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 23 ஆகஸ்ட், 2014

தமிழகத்தில் முகநூலில் (Facebook) லைக் செய்தாலே குண்டாஸ்!


தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கொண்டுவந்திருக்கும் மாற்றம், அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியிருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், ஒரே நாளில் மொத்தம் 19 சட்ட மசோதாக்கள் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்று... குண்டர் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றம். இதன்படி, கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்கள், போலிமருந்துக் குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், மணல் கடத்துபவர்கள், இணையதளக் குற்றவாளிகள் போன்றவர்களை... அவர்கள் முதல்முறை குற்றம் செய்யும்போதே, குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வழி செய்கிறது இந்தப் புதிய மசோதா. இதில் பாலியல் மற்றும் இணையதளக் குற்றங்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

இதுவரை ஒருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும் என்றால், அவர் தொடர்ந்து குற்றம்புரிபவராக இருக்க வேண்டும். அவர் மீது ஒன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்க வேண்டும். இதைத் தளர்த்தி, முதல் குற்றத்துக்கே குண்டர் சட்டம் என்கிறது புதிய சட்டம். முதல் பார்வையில் இது கறாரான நடவடிக்கைபோல தோன்றலாம். ஆனால், நடைமுறையில் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கே இது வழிவகுக்கும். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களுக்கு ஓர் ஆண்டுக்கு ஜாமீன் கிடையாது; விசாரணையும் கிடையாது. வழக்குப் போடலாம்; அறிவுரைக் கழகத்தில் முறையிடலாம். ஆனால், அவற்றில் முடிவுதெரிய நீண்ட காலதாமதம் ஆகிவிடும். மொத்தத்தில் குண்டர் சட்டத்தில் கைதானால், ஓர் ஆண்டு சிறை நிச்சயம்!

தொடர்ந்து குற்றம்புரியும் சாத்தியம் உள்ள ஒருவர் வெளியில் இருந்தால், அவரால் பொது மக்களுக்கும், பொது அமைதிக்கும் கேடு ஏற்படும் என்பதால் அவர் கைது செய்யப்படுகிறார். இதுதான் குண்டர் சட்டத்தின் நோக்கம். விசாரணையின்றி ஓர் ஆண்டு சிறையில் வைப்பதும் அதனால்தான். இந்த நிலையில், முதல் முறை குற்றம் இழைக்கும்போதே, அவர் தொடர் குற்றம் புரியும் சாத்தியம் உள்ளவர் என்ற முடிவுக்கு எப்படி வர முடியும்? ''இப்போது பிரச்னை, குற்றவாளிகளைத் தண்டிக்க சட்டம் இல்லை என்பது அல்ல. இருக்கும் சட்டங்களை முறையாக அமல்படுத்துவது இல்லை என்பதுதான். ஆனால், இந்த அரசு குண்டர் சட்டத்தை மேலும் இறுக்கமாக்குகிறது. இது குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அப்பாவிகள் பழிவாங்கப்படுவதற்கே வழிவகுக்கும்'' என்கிறார் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசியத் துணைத் தலைவர் உ.வாசுகி.

அப்படி அப்பாவிகள் பழிவாங்கப்படுகிறார்கள் என்பதற்கு அதிகாரபூர்வ ஆதாரமே உள்ளது. உதாரணமாக, குண்டர் சட்டக் கைதுகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் தனபாலன், சொக்கலிங்கம் ஆகியோர் தலைமையில் சிறப்பு டிவிஷன் பெஞ்ச் ஒன்று அமைக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் இந்த பெஞ்ச் 220 வழக்குகளை விசாரித்து, அதில் 212 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டது. அதாவது 220 வழக்குகளில் வெறும் எட்டு வழக்குகளில் மட்டும்தான் குண்டர் சட்டம் சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதம் உள்ள 212-ல் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதான் நடைமுறை யதார்த்தம். காவல் துறையை அரசியல் அதிகாரம் பின்னிப் பிணைந்திருக்கும் நம் ஊரில், இத்தகைய சட்டங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதற்கே சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன.

தற்போதைய நிலையில் 354-டி சட்டப்பிரிவின்படி ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்து போனாலே குற்றம். இது இப்போது குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. யாரோ ஒரு பெண் வேண்டும் என்றே பொய்யாக, 'இவர் என்னைத் தொடர்ச்சியாகப் பின்தொடர்ந்து வருகிறார்’ என்று புகார் அளித்தால், எந்த விசாரணையும் இல்லாமல் சம்பந்தப்பட்டவரை ஒரு வருடம் உள்ளே தள்ள முடியும். அதேபோல, 'உன்னைக் கொலை செய்துவிடுவேன்’ என்று ஒருவரை நேருக்கு நேர் மிரட்டினால் அது 506 பார்ட் 2. இதையே 'உன்னைக் கொலை செய்துவிடுவேன்’ என்று மின்னஞ்சல் அனுப்பினால், அது சைபர் கிரைம். அது குண்டர் சட்டத்தின் கீழ் வரும். குறைந்தபட்சம் ஓர் ஆண்டு சிறைவாசம். அதாவது ஒருவரை நேருக்கு நேராகக் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவதைவிட, மின்னஞ்சல் அனுப்பினால் அதிக தண்டனை!

''முக்கியமாக புதிய சட்டத் திருத்தத்தின்படி, இணையதளக் குற்றங்களும் குண்டர் சட்ட வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. 'எவை எல்லாம் சைபர் கிரைம்?’ என்பதை முடிவு செய்யவே, இன்னும் முறையான அளவுகோல் நம்மிடம் இல்லை. அதற்குள் குண்டர் சட்டம் என்கிறார்கள். இதன்படி நீங்களே அவதூறாக எதையும் எழுதியிருக்க வேண்டும் என்பது இல்லை. யாரோ எழுதியதை ஷேர் அல்லது லைக் செய்தால்கூட நீங்களும் அந்த அவதூறை பரப்பிய குற்றவாளிதான். இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இத்தனை மோசமான அடக்குமுறை சட்டம் இல்லை. இது மிகவும் அபாயகரமான, கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல்!'' என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் கண்ணதாசன்.

லைக் செய்தால் குண்டர் சட்டமா? அய்யய்யோ!

நன்றி: ஆனந்தவிகடன், ஓவியம்: ஹாசிப்கான்

-பாரதி தம்பி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக