பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஸ் அகமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:இளம்பிள்ளைவாத நோயை முற்றிலும் ஒழித்திடும் வகையில், கடந்த ஜனவரி மாதம் 20ம்தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்தப்பட்டது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 51,172 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப் பட்டது. இதே போல, நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 7மணி முதல் மாலை 5மணி வரை பிறந்த குழந்தைகள் முதல் 5வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள் என மொத்தம் 349 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாமில் அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், ரோட்டரி கிளப், மருத்துவ பணியாளர்கள், தன்னார்வலர்கள், சத்துணவு பணியாளர்கள் என மொத்தம் 1,396 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் நாளை நடக்கும் போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு குழந்தைகளை அழைத்துச்சென்று சொட்டு மருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தரேஸ்அகமது தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக