பாஸ்போர்ட்டு விண்ணப்பத்தின் நிலையை 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் அறிந்து கொள்ளலாம் என பாஸ்போர்ட்டு அதிகாரி பாலமுருகன் கூறினார்.
திருச்சி மண்டல பாஸ்போர்ட்டு அதிகாரி கே.பாலமுருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருச்சி பாஸ்போர்ட்டு அலுவலகத்தின் மூலம் 2013 ஜனவரி 1-ந்தேதியில் இருந்து ஆகஸ்டு மாதம் இறுதி வரை ஒரு லட்சத்து 33 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இதே கால கட்டத்தில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பாஸ்போர்ட்டுகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளன.
ஆன்லைன் மூலம் கட்டணம்
பாஸ்போர்ட்டு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தும் முறை வந்த பின்னர் சேவை மையங்களில் வாடிக்கையாளர்களின் கூட்டம் குறைந்து விட்டது. திருச்சி தில்லைநகரில் உள்ள பாஸ்போர்ட்டு சேவை மையத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை கணினியில் பதிவு செய்து ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவதில் உதவிசெய்வதற்காக முன்னாள் ராணுவத்தினர் 3 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மரக்கடை பகுதியில் உள்ள மண்டல பாஸ்போர்ட்டு அலுவலக வளாகத்தில் முன்னாள் ராணுவத்தினர் 2 பேர் இதே பணியை செய்து வருகிறார்கள். இதற்காக அவர்கள் பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் தவிர ஒரு விண்ணப்பத்திற்கு சேவை கட்டணமாக 70 ரூபாய் வசூலிக்கிறார்கள்.
கட்டணமில்லா தொலைபேசி எண்
பாஸ்போர்ட்டு கேட்டு விண்ணப்பித்து இருப்பவர்கள் தங்களது விண்ணப்பத்தின் தற்போதைய நிலை என்ன என்பதை அறிய நேரில் வரவேண்டியது இல்லை. இதற்காக கட்டணமில்லா தொலை பேசி எண் சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 1800-258-1800 என்ற இந்த எண்ணில் 24 மணி நேரமும் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம். பாஸ்போர்ட்டில் புதிதாக பெயர் சேர்த்தல், திருத்தங்கள், முகவரி மாற்றங்கள் தொடர்பாக நேரில் வருபவர்கள் தங்களது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் பாஸ்போர்ட் உதவி அதிகாரிகளை சந்தித்து தெரிவிக்கலாம். அதன் பின்னரும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் உரிய அனுமதி பெற்று பாஸ்போர்ட் அதிகாரியை நேரில் சந்தித்தும் தனது குறைகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக