முஸஃபர் நகர் கலவரத்தில் அனைத்தையும் இழந்து அனாதைகளாக அகதிகள் முகாம்களில் தங்கள் வாழ்க்கையைக் கழிக்கும் முஸ்லிம்களை பாக். உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அணுகுகிறது என்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு துரதிர்ஷ்டவசமானது என்று உத்தரப் பிரதேசத்தைச் சார்ந்த முக்கிய முஸ்லிம் அறிஞர்கள் கூறியுள்ளனர். காங்கிரஸ் தலைவரின் இந்தக் குற்றச்சாட்டு முஸ்லிம் சமுதாயம் மோசமான கண்களுடன் பார்க்கப்படுகிறார்கள் என்பது மட்டுமல்ல, அது வகுப்புவாத சக்திகளுக்கு அதிக பலம் சேர்க்கும் என்று ஷியா அறிஞர் மௌலானா ஸெய்ஃப் அப்பாஸ் நக்வி கூறினார்.
அமைதியை விரும்பும் தேசப்பற்றுள்ள லட்சக்கணக்கான முஸ்லிம்களுக்கு எதிரான மிகப் பெரிய அடிதான் இந்தக் குற்றச்சாட்டு. அகதிகள் முகாம்களில் அனைத்தையும் இழந்து வேதனையுடன் வாழ்ந்து வரும் முஸ்லிம்களின் வலியை உணர்வதற்குப் பதிலாக அதனை அரசியலாக்குவதற்க ராகுல் முயற்சி செய்கிறார் என்று மேலும் அவர் கூறினார்.
கடந்த வியாழக்கிழமை மத்திய பிரதேசத்தில் நடந்த பேரணியில்தான் ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்தார். முஸஃபர் நகர் கலவரத்தில் உறவினர்கள் கொல்லப்பட்ட சில முஸ்லிம் இளைஞர்களை பாக் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யைச் சார்ந்தவர்கள் அணுகியிருக்கிறார்கள் என்று ஒரு உளவுத்துறை அதிகாரி தன்னிடம் சொன்னதாக ராகுல் சொன்னார்.
ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டு மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று உத்தரப் பிரதேசத்தைச் சார்ந்த முக்கிய முஸ்லிம் அறிஞர்களான ஷஹர் காஸி, மௌலானா அபுல் இர்ஃபான், மியான் ஃபரன்கிமஹல்லி ஆகியோர் கூறியுள்ளனர். ராகுல் உடனடியாக இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
ராகுல் காந்தி நிபந்தனையின்றி உடனடியாக மன்னிப்புக் கோரவேண்டும். முஸ்லிம்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் வெளியிடப்படும் இத்தகைய அறிக்கைகளை வெளியிடுவது காங்கிரஸ் போன்ற தேசிய கட்சியின் தலைவருக்கு உகந்தது அல்ல. சிறுபான்மையினரின் தேசத்தோடு உள்ள பற்றினைப் பற்றி விமர்சிப்பவர்கள் தேசத்திற்கே அநியாயம் இழைப்பவர்கள் என்று அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத் (All India Muslim Personal Law Board) துணைத் தலைவர் மௌலானா கல்பே ஸாதிக் கூறினார்.
ராகுலின் குற்றச்சாட்டு குறித்து தங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை என்றும், ஆனால் இது குறித்து விசாரிக்கப்படும் என்றும் உ.பி. மாநில அரசு அறிவித்துள்ளது.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக