Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 15 நவம்பர், 2012

டீவியில் தனது இறுதிச் சடங்கை பார்த்த ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன்...


அது ஜூன் 21, 2009. காலையில் வழக்கம் போல அதிகாலையில் ஆபீசுக்கு போய்விட்டேன். கம்ப்யூட்டரில் இமெயில் அக்கவுன்டை திறந்ததும் ஆச்சரியப்பட்டேன். என் ஃபேஸ்புக் பக்கத்தில் சேர 67 பேர் நட்பு வேண்டுகோள் விடுத்திருந்தனர். அடுத்த சில மணி நேரங்களில் மேலும் 300 பேர் கோரிக்கை அனுப்பினர். 

உலகம் முழுவதும் டீவி சேனல்களிலும் பத்திரிகைகளிலும் இன்டர்நெட்டிலும் என் பெயரும் போட்டோவும் திரும்ப திரும்ப காட்டப்படுகிறது என்பது அப்போது எனக்கு தெரியாது. 
நான் பணியாற்றும் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் எல்லோரும் உள்ளிருப்பு போராட்டம், கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்தினார்கள். அதை எட்டிப் பார்க்கக்கூட எனக்கு நேரமில்லை. நிர்வாக போர்டிலும் நான் உறுப்பினராக இருந்ததால் அன்றைக்கு வேலை அதிகமாக இருந்தது. வழக்கமான நேரத்தில் வீட்டுக்கு கிளம்ப முடியவில்லை. அப்போது ஒரு இமெயில் வந்தது. அனுப்பியவரை எனக்கு முன்பின் தெரியாது.

நிடா சுல்தானி என்ற பெண் நேற்று டெஹரான் நகரில் நடந்த ஆர்ப்பாட்டதின்போது சுட்டு கொல்லப்பட்டார். அவரை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. ஃபேஸ்புக்கில் தகவல் கிடைக்கும் என்று நினைத்தேன். நிடா சுல்தானி என்ற பெயரில் பலர் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் மெயில் அனுப்புகிறேன். பதில் வந்தால் அவர்கள் பெயரை நீக்கிவிட்டு தேடுகிறேன்என்று மெயில் அனுப்பிய நபர் குறிப்பிட்டு இருந்தார். அவர் தேடும் நிடா நானல்ல என்று பதில் அனுப்பினேன்.

வீடு திரும்பியபோது எக்கச்சக்கமான போன் கால்கள் வந்திருந்ததை ரெக்கார்டரில் போட்டு கேட்டென். மாணவிகள், சக ஆசிரியைகள், நண்பர்கள், உறவினர்கள் எல்லாரும், ‘சிஎன்என், ஃபாக்ஸ் அது இது எல்லா சேனலிலும் உன் போட்டோ பார்த்தோம்என்று வாய்ஸ் மெயில் பதிவு செய்திருந்தார்கள். அப்புறம்தான் நானும் கவனித்தேன். நிடா சுல்தானி கொல்லப்பட்டார் என்ற செய்திக்கு ஃபேஸ்புக்கில் இருந்த என் படத்தை எடுத்து எல்லோரும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டேன். இறந்தவள் பெயர் நிடா ஆகா சுல்தான். அவள் படத்துக்கு பதில் நிடா சுல்தான் என்கிற என் படத்தை சர்வதேச சேனல்கள் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. 

வீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 26 வயது நிடாவை மார்பில் சுட்டு கொலை செய்துள்ளனர். அவள் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சாவதை யாரோ பதிவு செய்து அது இன்டர்நெட்டில் ஏற்றப்பட்டதால் உலகம் பூராவும் பார்த்து அதிர்ந்தது. மனிதகுல  வரலாற்றில் மிகவும் அதிகமானவர்கள் பார்த்த மரணம்என்று டைம் பத்திரிகை குறிப்பிட்டது. நிடாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அதிகாரிகள் அவள் பெற்றோருக்கு அனுமதி மறுத்து விட்டனர். 

அந்த கொலை சம்பவம் இரான் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்துக்கு ஒரு அடையாள சின்னமாகி போனதால் திரும்ப திரும்ப என் படம் உலகின் கண்களை நிறைத்தது. ஃபேஸ்புக்கில் என் ஃபிரண்டாக சேர விருப்பம் தெரிவித்தவர்கள் எண்ணிக்கை எகிறியது. புகழ் பெற்ற சர்வதேச செய்தியாளர்கள் பலரும் அதில் இருந்தார்கள். பிளாகர்கள் இருந்தார்கள். அத்தனை பேருக்கும் கன்ஃபர்ம் போட்டு சேர்த்துக் கொண்டேன். பின்னர் அவர்களுக்கு தெரியப்படுத்தினேன்: நீங்கள் பயன்படுத்தும் படம் கொல்லப்பட்ட நிடாவுடையது அல்ல; என்னுடையதுஎன்று.

சில பிளாகர்கள் நான் சொன்ன தகவலை அப்டேட் செய்தார்கள். ஆனால் பிரபலமான செய்தியாளர்கள் யாருக்கும் என் தகவலுக்கு பதில் அனுப்ப நேரமில்லை. எல்லா சேனல்களிலும் என் படம்தான் தொடர்ந்து காட்டப்பட்டது. என் மெயிலில் நிறைய ஹேட் மெசேஜ்களும் வர தொடங்கின. நீ இரான் அரசின் கைக்கூலி. நிடாவின் ஃபேஸ்புக் அக்கவுன்டில் புகுந்து அவள் படத்தை நீக்கிவிட்டு என் முகத்தை ஒட்டிவிட்டாய்என்று மக்கள் புரட்சியின் கதாநாயகிக்கு எதிரான வில்லனாக என்னை சித்தரித்து வசைபாடினார்கள். 

ஆகா சுல்தானின் குடும்பம் பெரும் சோகத்தில் இருந்ததால் இரண்டு நாள் கழித்துதான் அவள் படத்தை வெளியிட்டனர். அதற்குள் நான்தான் நிடா என்று ஊடகங்கள் தீர்மானித்துவிட்டதால், அவளுடைய உயிரற்ற உடலையும் என் முகத்தையும் அருகருகே காட்டி திரும்ப திரும்ப ஒளிபரப்பி அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுசேர்த்தன. உலகம் முழுவதும் இரான் அரசுக்கு எதிரான கன்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அவை அனைத்திலும் என் படம் பெரிதாக சுமந்து வரப்பட்டது. ஊர்வலம் நடத்தி அதன் முடிவில் என் படத்தை  அலங்கரித்து வைத்து மெழுகுவத்தி ஏற்றினார்கள். டீவியில் தனது இறுதிச் சடங்கை பார்த்த ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன். 

சர்வதேச அளவில் இந்த கொலை ஏற்படுத்திய பரபரப்பையும் கோபத்தையும் இரான் அரசால் ஜீரணிக்க முடியவில்லை. மூன்றாவது நாள் உளவு  அமைச்சகத்தில் இருந்து ஏஜென்டுகள் வந்தார்கள். விசாரிக்க வேண்டும், வா என்று என்னை அழைத்து சென்றார்கள். நிடா ஆகா சுல்தான் கொலைக்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்று சித்தரிப்பதால் மட்டுமே உலகின் கண்டனத்துக்கு தப்ப முடியும் என்று அதிகாரிகள் அறிந்திருந்தார்கள். அதனால் சுலபமான ஒரு திட்டத்தை தயாரித்து இருந்தார்கள்.

அதாவது, நிடா ஆகா சுல்தான் உண்மையில் கொலை செய்யப்படவே இல்லை. இரான் அரசுக்கு எதிராக நடக்கும் சர்வதேச சதியின் ஒரு பகுதியாக இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது. படம் என் ஃபேஸ்புக்கில் இருந்து எடுக்கப்படவில்லை. உண்மையில் ஐரோப்பிய யூனியன்தான் அதை வெளியிட்டது. இங்கிலாந்தும் அமெரிக்காவும் அந்த சதிக்கு உடந்தை. இதுதான் அதிகாரிகளின் திட்டம். இதற்கு ஒத்துழைப்பு தருமாறு என்னை கேட்டனர்.

 முடியாது என மறுத்து விட்டேன். நாடகத்தில் எனக்கு தந்த பாத்திரத்தை ஏற்க மறுத்துவிட்டதால் அடுத்த உத்தியை பயன்படுத்தினார்கள். எங்களுக்கு இந்த நாட்டின் பாதுகாப்புதான் முக்கியம். உன்னை போன்ற தனி நபர்கள் எங்களுக்கு பொருட்டே அல்லஎன்று பயமுறுத்தினர்.

அடுத்த முறை என்னை விசாரணைக்கு அழைக்க வந்தபோது, என்னுடன் யாரும் துணைக்கு வரக்கூடாது என்று அதிகாரிகள் தடுத்து விட்டனர். சொந்த நாட்டை காட்டிக் கொடுத்தவள் என்று எனக்கு பட்டம் சூட்டினர். அமெரிக்க ஒற்றமைப்பான சிஐஏயின் உளவாளியாக என்னை குற்றம் சாட்டினர். ஒப்புதல் வாக்குமூலம் கற்பனையாக தயாரித்து அதில் கையெழுத்திட சொன்னார்கள்.

அந்த குற்றச்சாட்டும் ஒப்புதல் வாக்குமூலமும் எனக்கு மரண தண்டனை பெற்றுத்தர வல்லது என்பது எனக்கு நன்றாக தெரியும். 
என்னை அரசின் எதிரி போல சித்தரிக்க நடந்த முயற்சியால், நண்பர்கள் பலரும் ஒதுங்க தொடங்கினர். உடன் வேலை செய்பவர்கள், உறவினர்கள் பயந்து என்னை தவிர்த்தனர். ஒவ்வொரு நாளும் மரண அவஸ்தையாக மாறியது. 

ஒரு போட்டோ இப்படி என் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப் போடும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. எல்லாம் 12 நாட்களில் நடந்த அலங்கோலம். டீசன்டாக வாழ்ந்து கொண்டிருந்த ஒரு ஆங்கில பேராசிரியை என்ற கவுரவத்தில் இருந்து நாட்டை விட்டே ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட அபலையாக மாற்றப்பட்டேன். 

நெருக்கமான நண்பர்கள்தான் ஏற்பாடு செய்தார்கள். விமான நிலையத்தில் ஒரு அதிகாரிக்கு ஏறத்தாழ 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. முதலில் சென்று இறங்கிய நாடு துருக்கி. ஐரோப்பிய நாடு எதிலாவது அரசியல் தஞ்சம் கேட்கலாம் என்ற எண்ணம் அங்குதான் உதித்தது. அங்கிருந்து கிரீஸ், அப்புறம் ஜெர்மனி. அங்கு ஒரு அகதி முகாமில் தங்க அனுமதி அளித்தனர். பின்னர் ஜெர்மன் அரசு எனக்கு அரசியல் அடைக்கலம் தர சம்மதித்தது. 

ஆனால் அகதியின் வாழ்க்கை காற்றில் மிதக்கும் காய்ந்த இலைக்கு சமமானது என்பதை சீக்கிரம் புரிந்து கொண்டேன். பூமி ஆகாயம் எதையும் சார்ந்திராத தொங்கல் அது. பிறந்து வளர்ந்த மண்ணில் இருந்து வேரோடு பிடுங்கப்பட்ட நான் வேற்று மண்ணில்கூட ஊன்றப்படவில்லை. 

நடந்தது அனைத்தையும் திரும்பி பார்க்கும்போது மேற்கத்திய ஊடகங்கள் மேல்தான் எனக்கு கோபம் வருகிறது. உண்மையானது அல்ல என்று தெரிந்த பிறகும் அவர்கள் என் போட்டோவையே காட்டிக் கொண்டிருந்தார்கள். அப்படி செய்ததன் மூலம் என்னை ஆபத்துக்கு உள்ளாக்கினார்கள். இனி நான் என்ன முயன்றாலும் பழைய நிம்மதியான வாழ்க்கை எனக்கு கிடைக்காது. 

அந்த நிதர்சனமே எனக்கு தாங்க முடியாத மன உளைச்சலை உண்டாக்குகிறது. என் பெற்றோருடன் குடும்பத்தினருடன் பேச முடியவில்லை. இன்றைக்கும் திடீர் திடீரென இரவில் கனவு கண்டு பீதியில் அலறுகிறேன். இன்னொரு பக்கம், காலப்போக்கில் எல்லாம் சரியாகி நாமும் ஒரு புதிய வாழ்க்கைக்கு திரும்புவோம் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது. அது போராடாமல் கிடைக்காது என்று தெரியும். போராட்டத்தை தொடங்கிவிட்டேன்.

நன்றி தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக