Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 10 ஜூன், 2013

வளர் பிறை – 1

வாழ்வில் வரும் கஷ்டங்களிலும் புன்னகைக்க பக்குவப்பட்ட மனிதர் காதர் பாய். அவருக்கு மூன்று குழந்தைகள். மூத்தவள் ஆயிஷா. அடுத்தவன் முஸ்தஃபா. இளையவள் சுமையா. அழகான குடும்பம். குறைந்த வருமானத்திலும் சிறப்பாக குடும்பத்தைக் கொண்டு செல்லும் அறிவான மனைவி ஹாஜரா. அழையா விருந்தாளியாக அடிக்கடி வந்து போகும் கடன் சுமை. இதுதான் அவரது உலகம்.
அவரைப் போலவே அவரின் மனைவி ஹாஜராவும், மூத்த மகள் ஆயிஷாவும் ஏழ்மை வாழ்க்கையைப் பொருந்திக் கொண்டதுதான் அவர்களின்  சிறப்பம்சம்.
அவருக்கு மிகவும் சிரமமான விஷயமே மகன் முஸ்தஃபாவைச் சமாளிப்பதுதான்.
முஸ்தஃபா சுட்டியான பையன். படிப்பறிவு இருந்தாலும் படிப்பில் ஆர்வம் காட்டமாட்டான். தனது நண்பர்கள் போலவே தனக்கும் விளையாட பொருட்கள் வேண்டும் என்று அடிக்கடி வீட்டில் அழுது அடம் பிடிப்பான். அன்றைக்குக் கூட வீடியோ கேம் வேண்டும் என்று கேட்டு அழுது கொண்டு இருக்கும்பொழுது ஹாஜரா வந்து, “முஸ்தஃபா… அழாம அமைதியா இருக்கியா இல்ல அடி வாங்குரியா” என்று கேட்டதும் அமைதியாக முணுமுணுக் கொண்டிருந்தான். முஸ்தஃபா பயப்படுவது உம்மா ஹாஜராவுக்கு மட்டும்தான்.
காதர் பாய் : அவன எதுக்கு திட்டுற? அவனும் சின்ன பையன்தானே… அவனுக்கும் மத்த பசங்க மாதிரி இருக்க ஆசை இருக்காதா?
ஹாஜரா : அதுக்கு நாம என்னங்க பண்ண முடியும்? வச்சிக்கிட்டா கொடுக்காம இருக்கிறோம். நம்ம குடும்ப சூழ்நிலையில அன்றாட செலவுக்கே கஷ்டமா இருக்கு. இதுல நாம எங்க மத்தவங்கள மாதிரி வாழ ஆசைப்பட முடியும்?
“அவன் சின்ன பையன். வாய தொறந்து கேட்டுட்டான். நீ கூட மனசுல நினைக்கலாம், இவர கல்யாணம் பண்ணிட்டு கஷ்டப்படறமேன்னு” என்று சிரித்துக்கொண்டே காதர் பாய் சொன்னார்.
“இப்படி சொல்லாதீங்கன்னு எத்தன முற சொல்லிருக்கேன்” என்று ஹாஜரா கோபத்துடன் சொல்லிவிட்டு அங்கே இருந்து நகரும்போது, “இறைவன் எனக்கு கொடுத்த அருமையான பொக்கிஷம் நீ” என்று காதர் பாய் சொல்ல, “இதச் சொல்லியே என்னை சமாதானம் பன்னுங்க” என்று சொல்லி சிரித்துக்கொண்டே சமைக்க உள்ளே சென்றாள்.
இப்படியே வருடங்கள் ஓடிப் போனது. கால ஓட்டத்தில் காதர் பாயின்  உடல்நிலை மோசமாகி அடிக்கடி மருத்துவச் செலவும் வந்து குடும்பம் முன்பை விட கஷ்டத்தை அனுபவித்தது. அவரால் வெளியில் சென்று தொழில் பார்க்க முடியாததால் காலத்தின் கட்டாயம் ஹாஜரா திருமணம் போன்ற விசேஷ வீடுகளுக்கு வேளைக்கு போகவேண்டியதாகியது.
ஆயிஷா 12ம் வகுப்பு முடித்து மேலே படிக்காமல் தெருவில் உள்ள குழந்தைங்களுக்கு டியூஷன் சொல்லி கொடுக்கிறாள். இளையவள் சுமையா ஆறாம் வகுப்பும், முஸதஃபா பத்தாம் வகுப்பும் படித்துகொண்டிருந்தார்கள்.
முஸ்தஃபா அன்றும் உம்மாவிடம், “எனக்கு சைக்கிள் வாங்கி தாரேன் தாரேன்னு சொல்லிக்கிட்டே இருக்கீங்க… வாங்கித் தந்தாதான் பள்ளிக்கூடம் போவேன்… என் கூட படிக்கிற எல்லோரும் சைக்கிள்லதான் வாராங்க” என்று சப்தம் போட்டு அழுதான்.
ஹாஜரா அவனிடம், “வாப்பா பாவம் உடம்புக்கு முடியாம படுத்துருக்காங்கல்ல.. சத்தம் போடாம போகணும். உம்மா இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா வாங்கி தருவேன்” என்று சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தாள்.
வாப்பா மீது பிள்ளைகளுக்கு அளவு கடந்த பாசம். அதனால் எதுவும் சொல்லாமல் முஸ்தஃபா அன்று பள்ளிக்கூடத்திற்கு நடந்து போனான்.
சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் வழக்கத்திற்கு மாறாக ஹாஜரா ஸுப்ஹு தொழுது முடிக்கும் வரை காதர் பாய் எழுந்திருக்கவில்லை. அவர் முதலில் எழுந்து பிள்ளைகளையும் எழுப்பி தொழ வைப்பதுதான் அவரது வழக்கம். தொழுகை விஷயத்தில் மட்டும்தான் அவர் பிள்ளைகளிடம் கண்டிப்பு காட்டுவார்.
ஹாஜரா அருகில் வந்து எழுப்ப கை வைக்கும் பொழுது காதர் பாயின் உடம்பெல்லாம் வேர்வையில் நனைந்து இருந்தது. “என்னாச்சுங்க… எந்திரிங்க” என்று குரல் கொடுத்தாள். பிள்ளைகளும் சுற்றி நின்று எழுப்பினர்.
அவரால் எழுந்திருக்க முடியவில்லை. ஒரு பார்வை பார்த்தார். அந்தப் பார்வையின் அர்த்தம் புரியும்பொழுது ஹாஜராவின் கண்கள் கண்ணீரால் குளமாயின. கைகள் நடுங்கியது. உள்ளம் படபடத்தது.
ஆம்! பாசமிகு மனைவியின் மடியில், பிள்ளைகள் சுற்றி நிற்கும்பொழுது அவரது ஆத்மா அவரை விட்டுப் பிரிந்தது. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
“என்ன செய்வேன்…? யா அல்லாஹ்! நான் என்ன செய்வேன்? இரண்டு பெண் பிள்ளைகளைப் பெற்ற நான் கணவன் இல்லாமல் என்ன செய்வேன்?” என்ற கேள்விகள் உள்ளத்தில் வேகமாய் பாய்ந்தன. உலகமே இருண்டு போனது போல் தோன்றியது.
“ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே தீரும்” என்ற இறைவசனம் மனதில் வந்து ரீங்காரம் அடித்தது. நாம் இடிந்து போனால் பிள்ளைகளுக்கு ஆறுதல் யார் சொல்வதென்று மனதைப் பலப்படுத்திகொண்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும், சொந்தங்களுக்கும் தகவல் தெரிவித்தாள். அன்றே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதுவரை துன்பத்தையும், துயரத்தையும் தாங்கி புண்பட்ட இதயம் இதையும் தாங்கும் அளவுக்கு பண் பட்டது. காதர் பாய் மரணிக்கும்பொழுது அவர் விட்டுச் சென்றது கொஞ்சம் கடனும், தான் பெற்ற பிள்ளைகளுக்கு தான் கற்றுக் கொடுத்த நல்லொழுக்கமும் தவிர வேறொன்றுமில்லை.
ஒட்டுமொத்த குடும்பத்தின் ஒருமித்த நம்பிக்கையாய் முஸ்தஃபா ஆனான்.
(இன்ஷா அல்லா தொடரும்…)
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக