அன்புள்ள சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்......
மரணம் எந்த நிமிடம் வேண்டுமானாலும் சம்பவிக்கலாம் அதற்கு முன் நாம் நம்முடைய தீனை பற்றி சரியாக தெரிந்து கொள்ளவேண்டும் . அல்லாஹ் சொல்வதை படித்து பாருங்கள் " மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்." என்பதை அல்லாஹ் அத்தியாயம் - 103 , ஸூரத்துல் அஸ்ரி (காலம்) சூராவில் சொல்லி தெளிவையும் தருகிறான் - நம்மில் சிந்திப்பவர் உண்டோ ?
ஏராளமான நன்மைகள் அடங்கிய குர்ஆனையும், ரசூல் (ஸல்) அவர்களின் வழிமுறையையும் இன்று நாம் சரியான முறையில் தெரிந்து கொள்ளாததால், கற்றுக் கொள்ளாததால் அல்லது நம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை உணரப்படாததால் சரியாக எந்த வழிமுறை உண்மையான நேரான வழிமுறை ? ஷிர்க் எது? ஏகத்துவம் எது? என அறியாமையில் விழி பிதுங்கி கருத்து வேறுபாடுகளோடு தீன் கல்வியை பின்னுக்கு தள்ளி காலத்தை விரயமாக்கி வருகிறோம் என்பதே நிதர்சனமானது . நமது இஸ்லாமிய மார்கத்தின் அடிப்படை விஷயங்களில் நாம் சந்தேகத்துடன் வாழ முடியுமா? நிச்சயமாக முடியாது சகோதரர்களே !
மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாகத்(செல்வத்தை) தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது. பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள். (அல்குர்ஆன்:102:1,2, 8)
நமக்கு என்னென்ன அருள்கொடைகள் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை ரசூல் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள் : அதாவது
நமது ஒய்வு நேரங்கள் ,
நமது வாலிப பருவம்,
நமது உடல் ஆரோக்கியம்,
நமது வயோதிக பருவம்,
நமது செல்வம் ,
நமது சிந்திக்கும் ஆற்றல்
,
போன்ற ஒவ்வொன்றையும் பற்றி நாளை மறுமையில் விசாரிக்கப்படுவோம். அன்று வாய் பேசாது ஆனால் மற்ற எல்லா உறுப்புகளும் சாட்சியாக பேசும் ஆகவே சகோதரர்களே இந்த அருள்கொடைகளை நாம் எப்படி செலவழித்தோம் என அல்லாஹ்விடத்தில் கணக்கு காட்டவேண்டுமே என்று நாம் என்றைக்காவது யோசித்து பார்த்திருக்கிறோமா ? இதை நாம் சரியாக புரிந்து கொண்டால் தீன் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்திருப்போம் முறையாக செயல்பட தாமதிக்க மாட்டோம், நேரமில்லை என சொல்ல மாட்டோம், நமக்கு என்ன? வயதாவிட்டது ? இன்னும் கொஞ்சம் நாள் கழித்து இது பற்றி யோசிக்கலாம் என்று அலட்சியமாக இருக்க மாட்டோம்.
அன்பிற்கினிய சகோதரர்களே ! .நாம் தொலைத்துவிட்ட விலை மதிக்க முடியாத பொருளை எப்படி எங்கெல்லாம், மூலை முடுக்கெல்லாம் தேடி கண்டுபிடிக்க முயற்ச்சிகள் செய்வோமோ அதே போன்று நாம் விலை மதிக்க முடியாத இந்த தீன் கல்வியை நாம்தான் தேடி கற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் சகோதரர்களே ! இது நமது கட்டாய கடமை சகோதரர்களே ! நமக்கு நேரம் இருக்கிறது ஆனால் மனதுதான் இல்லை , நாமாகவே சில, பல காரணங்களை சொல்லி ஞாயப்படுத்தி காலத்தை விரயமாக்கி கொண்டிருக்கிறோம் என்பதே கசப்பான நிதர்சனமான உண்மை.
அன்பு சகோதர சகோதரிகளே !
1. இஸ்லாமிய விஷயங்களை அறிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டுங்கள்,
2, உங்கள் பிள்ளைகளுக்கும் இந்த ஆர்வத்தை தூண்டுங்கள்.
3. மனிதனை மனிதனாக்கும் இறைமறையை தெரிந்து கொள்ளுங்கள்.
4. கண்மூடித்தனமாக எதையும் பின்பற்றாதீர்கள்.
5. நரகத்தை நெருக்கமாக்கும் செயல்களை அல்லாஹ்வுக்காக பயந்து தவிர்த்து கொள்ளுங்கள்
நாளை மறுமையில் நாம் ஒவ்வொருவரும் நமது செயல்களுக்காக கண்டிப்பாக அல்லாஹ்வுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆகவே
மரணம் நம்மை நெருங்குவதற்கு முன்
நாம் குர்ஆனையும், சுன்னாவையும் நெருக்கமாக்கி
கப்று நம்மை நெருக்காமல் இருக்க
எல்லாம் வல்ல அல்லாஹ் துணை செய்யட்டும்
* நன்மையிலும் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம். அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். (குர்ஆன் 5:2)
வஸ்ஸலாம்
சிந்திக்க தூண்டும் உங்கள் சகோதரன்
தக்கலை கவுஸ் முஹம்மது - பஹ்ரைன்
குறைகள் என்னை சாரும் நிறைகள் ஏக இறைவனை சாரும்………
மின்னஞ்சல் மூலமாக
சுல்தான் மொய்தீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக