கட்டாய திருமணப்பதிவு சட்டத்திலிருந்து இஸ்லாமியர்களுக்கு விலக்களித்து பள்ளிவாசல்களில் செய்யும் பதிவையே அரசு பதிவாக ஏற்க தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சபையின் மாவட்ட தலைவர் சய்யித் அஹ்மத், செயலாளர் அய்யூப்கான், பொருளாளர் ரசூல்முகைதீன் உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் டிஆர்ஓ சுரேஷ்குமாரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
முஸ்லிம் தனியார் சட்டம் வழங்கிய திருமண சட்டத்தின் அடிப்படையில் பெண்கள் பருவத்தை அடைந்துவிட்டாலே திருமணம் செய்வதற்கு தகுதி பெற்று விடுகிறார். இது இஸ்லாமிய வாழ்வியல் சார்ந்த அடிப்படை உரிமையாகும். ஆனால் சமீப காலமாக குழந்தை திருமண தடைச்சட்டம் என்ற பெயரில் பருவமடைந்த 18 வயது பூர்த்தியாகாத முஸ்லிம் பெண்களின் திருமணத்தை சில கலெக்டர்கள் மூலம் தடுத்து நிறுத்தப்படுகிறது என்ற புகார்கள் பரவலாக தமிழகம் முழுவதிலிருந்தும் இச்சபைக்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய வாழ்வியல் அடிப்படை உரிமையை சட்டத்தின் காவலர்களே அலட்சியம் செய்வது வேதனையளிக்கிறது. இந்த சட்டமீறல் செயல் இனியும் தொடரக்கூடாது என்று அனைத்து கலெக்டர்களுக்கும் ஆணையிட்டு இந்திய அரசியல் சாசனம் சிறுபான்மையினருக்கு வழங்கிய உரிமையை பாதுகாக்குமாறு தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம். இதுசம்பந்தமான அரசாணையை வெளியிட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இஸ்லாமிய குடும்பங்களில் நடைபெறும் திருமணங்கள் இஸ்லாமிய பள்ளிவாசல்களில் ஊரார் முன்னிலையில் பதிவுசெய்யப்படுகிறது. எனவே இந்த கட்டாய திருமணப்பதிவு சட்டத்திலிருந்து இஸ்லாமியர்களுக்கு விலக்களித்து நாங்கள் பள்ளிவாசல்களில் செய்யும் பதிவையே அரசு பதிவாக ஏற்று அரசாணை வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
நன்றி தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக