Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 27 மார்ச், 2013

குழந்தைகளைப் பாதுகாப்போம் ! அடுத்துக் கெடுப்பவர்களிடமிருந்து...


بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
நமது குழந்தைகள் சிறுவயதிலேயே பாலியல் வன்முறைகளுக்கு ஆட்படுத்தப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் குழந்தை கற்பழிக்கப் படுகின்றது.
பத்து குழந்தைகளில் ஒன்று பாலியல் வன்முறைக்கு பலியாகின்றது. இத்தனையும் இந்தியாவிலேயே நடைபெறுகின்றது. பாலியல் வன்முறை என்பது குழந்தைகளின் மறைவிடங்களை சில காம வெறியர்கள் தங்கள் வெறிக்குப் பயன்படுத்துவது. இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளுள் பாதிபேர் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள்.
உலகிலுள்ள இதர நாடுகளைவிட இந்தியா இந்த விஷயத்தில் முன்னே நிற்கின்றது. இந்த தகவலை ‘லூயிஸ்து இன்கல்பிரித்’ என்பவர் தருகின்றார். இவர் ‘பாலியல் வன்முறைகளுக்கு உள்ளான குழந்தைகளின் சிகிச்சை மையம்’ என்பதை நிறுவியவர்.  (Centre for the Prevention and Treatment of Child Sexual Abuse – CSA).

நாம் மேலே சொன்ன புள்ளிவிவரங்கள் அல்லது கணக்குகள் மிகவும் குறைவானவைதான். உண்மையான எண்ணிக்கை மிகவும் அதிகம். காரணம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் தங்களுக்கேற்பட்ட அவமானத்தை வெளியே சொல்வதில்லை. அப்படியே குழந்தைகள் சொன்னாலும் பெற்றோர்கள் குடும்பத்தின் தன்மானங்கருதி அதனை வெளியே சொல்வதில்லை. நிச்சயமாக அவர்கள் அவற்றை வழக்குகளாக மாற்றுவதில்லை.
குழந்தைகளைக் கெடுப்பவர்கள் யார்? 
இந்த பிஞ்சுகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குபவர்கள், பல நேரங்களில் அவர்களின் உறவினர்கள். இந்த உறவினர்களோடு குழந்தைகள் விளையாடும்போது அவர்களை யாரும் சந்தேகப்படமாட்டார்கள். அப்படியே குழந்தைகள் வெளியே சொன்னாலும் பெற்றோர்கள், தெரியாமல் கைபட்டிருக்கும். அதை ஏன் பெரிதுபடுத்துகின்றாய்? என்று உதறித்தள்ளிவிடுவார்கள். அதேபோல்
சில நேரங்களில் அண்டை அயலார்கள் – கண்ணியமானவர்கள் என மதிக்கப்படும் ஆசிரியர்கள் ஆகியோர்.

நமது இந்தியாவில் ஒரு நிறுவனம். அதன் பெயர் ‘இந்திய தன்னார்வ ஆரோக்கியக் கழகம்’ (Voluntary Health Association of India) இந்த நிறுவனம் ஒரு கணக்கை சொல்கிறது. அது, குழந்தைகளை வன்முறைக்கு உள்ளாக்குகின்றவர்களில் 85 சதவீதத்தினர் அந்தக் குடும்பத்தோடு நெருங்கி பழகுபவர்களே!
இவர்கள், அதாவது குடும்பத்தோடு நெருங்கி பழகுபவர்கள் இந்தப் பாதகத்தை எப்படிச் செய்கின்றார்கள் என்பதை ஒரு உண்மைச் சம்பவத்தைக் கொண்டு இப்படி விளக்கலாம். நமது பக்கத்து மாநிலம் ஆந்திரா. அதில் அழகியதொரு நகரம் விஜயவாடா. இங்கே காந்திநகர் என்றொரு குடியிருப்பு. இங்கே ‘அங்கிள் இரமணன்’ என்றால் குடியிருப்பில் அனைவருக்கும் தெரியும். வயது 35. இவர் அந்தப் பகுதியிலுள்ள பெயரும் புகழும் பெற்ற ஒரு பள்ளிக்கூடத்தின் ஆசிரியர். பள்ளியில் பாடஞ்சொல்லித் தருவதிலும் பள்ளியின் முன்னேற்றத்திற்கு உழைப்பதிலும் தன்னிகரற்று விளங்குபவர். அவரது குணத்தை யாரும் குறை சொல்லத் துணியமாட்டார்கள்.
குடியிருப்பில் வாழ்கின்றவர்களுக்கும் உதவி செய்து வாழ்பவர். படிப்பில் பின் தங்கி நிற்கும் குழந்தைகளுக்கும் உதவி செய்வார். இலவசமாக ‘டியூசன்’ பாடம் சொல்லி தருபவர். தன் மனைவிக்கும் நல்ல கணவராக நடந்து கொண்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள். இந்தக் குழந்தைகளுக்கும் சிறந்த அப்பாவாக நடந்துக் கொண்டார். இவரிடம் இலவசப்பாடம் பயின்ற குழந்தைகளில் ஒருத்தி தான் ‘பிரீத்தி’.
பிரீத்தி தன் பெற்றோர்களிடம் ‘அங்கிள் இரமணன் அடிக்கடி படுக்கச் சொல்கின்றார்’ என்று புகார் கூறியபோது பெற்றோர்கள் “உனக்கென்ன பைத்தியமா? உதை வாங்குவாய், இப்படியெல்லாம் பேசினால்” என அதட்டி வாயை அடைத்து விட்டார்கள்.
ஒரு வாரம் கடந்தது…
பிரீத்தி கட்டுப்படுத்த முடியாத பெண்ணாக அழுதுகொண்டே இருந்தாள். இந்த முறை பெற்றோர்களால் அதட்டி அடக்க முடியவில்லை பிரீத்தியை. அவர்கள் அவளின் குறையை அக்கறையோடு கேட்டார்கள். முன்னர் சொன்ன அதே புகாரைத்தான் அவள்
சொன்னாள். “இன்றும் வரச்சொல்லி இருக்கின்றார்” என்றாள். அன்று பெற்றோர்கள் அவளைப் போகச் சொல்லிவிட்டு மறைந்திருந்து பார்த்தார்கள். வல்லவர், நல்லவர், பெயர் பெற்றவர், அன்புள்ளம் கொண்ட ஆசிரியர் இரமணன் சிக்கிக் கொண்டார்.

இப்படி அடுத்துக் கெடுப்பவர்களால் தாம் குழந்தைகள் கெடுக்கப்படுகிறார்கள். இப்படிப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குபடுவர்கள்
பெண் குழந்தைகள் மட்டும் தான் என்றில்லை. ஆண் குழந்தைகளும் இதுபோல் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றார்கள்.

அங்கே பாலியல் வன்முறைக்கு ஆளாக்குகின்றவர்கள் ஆசிரியர்கள், அவர்களை கால்பந்து, கிரிக்கெட் (கோச்சுகள்) ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி தருபவர்கள் எனப் பட்டியல் நீளுகின்றது.
நம் குழந்தைகளை அடுத்தவர்களிடம் பழக விடக்கூடாது என்ற முடிவுக்கு யாரும் வந்துவிடவேண்டாம். தாராளமாகப் பழக விடுவோம். அதே நேரத்தில் கவனமாகவும் இருப்போம். குழந்தைகளை அடுத்துவருபவர்கள் கெடுத்து விடாமல் பார்த்துக்
கொள்ள வேண்டும்.

குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகுகின்றார்கள் என்பதை நாமாகவே அறிந்திட வேண்டும். அந்த அநியாயத்திற்கு உட்பட்ட குழந்தைகளை நாம் எப்படி கண்டுபிடிப்பது?
இதோ சில சமிக்ஞைகள்: 
குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகுகின்றார்கள் என்பதை கண்டுபிடிப்பது எப்படி?
1. அடிக்கடி படுக்கையில் சிறுநீர் கழித்து விடுவார்கள்.
2. தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்படுவது.
3. படுக்கையிலேயே மலம் கழித்தல்.
4. மனநோயாளி போல் எந்த விஷயத்தை எடுத்தாலும் எரிந்து விழுவது.
5. காரணமில்லாமல் கோபப்படுவது.
6. எடுத்தேன், கவிழ்த்தேன் என ஒரு ஆக்கிரமிப்பு மனப்பான்மையுடன் நடந்துக் கொள்வது.
7. மறைவான பகுதிகளில் வீக்கம்.
8. மலக்குடலிலிருந்து இரத்தம் கசிதல்.
9. மறைவான இடங்களிலிருந்து இரத்தம் வெளிப்படுதல்.
10. பள்ளியில் நன்றாகப் படித்துக்கொண்டிருந்த குழந்தைகளிடம் திடீரென ஆர்வக்குறைவு ஏற்படல்.
11. விரக்தி வயப்படல்.
12. குழந்தை தன்னுடைய மறைவிடங்களின் மேல் அதிகமாகக் கவனம் செலுத்துவது.
13. வாலிப பருவமுடையவர்களைக் கண்டால் ஒதுங்கி ஓடுவது.
14. அடிக்கடி அச்சப்படுவது, ஒரு வித நடுக்கம் ஏற்படுவது.
15. தற்கொலை முயற்சிகளை செய்வது.

ஒருமுறை ஒரு குழந்தை பாலியல் வன்முறைக்கு ஆளாகிவிட்டால் அந்த பாதிப்பு அந்தக் குழந்தையின் வாழ்நாள் முழுவதும் அதன் நெஞ்சை விட்டு அகலாது. அடிக்கடி நடுக்கம் போன்ற உடல் பாதிப்புக்களுக்கு ஆளாகும். இத்தனைக்கும் அந்தக் குழந்தை எந்தத் தவறும் செய்ததில்லை. சமுதாயம் அழுகிப்போனதற்கு அந்தக் குழந்தை தண்டனையை அனுபவிக்கின்றது!
தீர்வும், தண்டனையும்
குழந்தைகளைப் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்குகின்றவர்களை தண்டிப்பதற்கு சட்டத்தில் எதுவுமில்லை. உண்மையைச் சொன்னால் அதற்கான சட்டங்கள் இன்னும் இயற்றப்படவில்லை. இந்தக் குழந்தைகளைக் கற்பழிப்பு குற்றங்களாக மட்டுமே பதிவு செய்து விசாரிக்கின்றார்கள். சாதாரணமாகக் கற்பழிப்புச் சட்டங்களின் கீழ் வழக்குகள் விசாரிக்கப்படும்போது பாதிக்கப்பட்டவர்களை மூன்று விதமாக சித்திரவதைகளுக்கு ஆளாக்குகின்றார்கள்.

1. அவர்கள் பலர் முன் தாங்கள் எப்படியெல்லாம் கற்பழிக்கப்பட்டார்கள் என்பதை விளக்கிச் சொல்லிட வேண்டும்.
2. பின்னர் கடுமையான மருத்துவ பரிசோதனைகளுக்குத் தங்களை ஆளாக்கிக் கொள்ள வேண்டும்.
3. நீதிமன்றத்தில் பல நெருடலான, மானத்தை வாங்கும் கேள்விகளுக்கு ஆளாகிவிடவேண்டும்.

இஸ்லாம் காட்டும் பாதை
இப்படிக் குழந்தைகள் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாகிவிடும்போது ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் அது.
இதற்கு அந்தக் குழந்தைகள் செய்த தவறு எதுவுமில்லை. இந்தப் பிஞ்சு வயதிலேயே அவர்கள் தாங்கள் செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவிக்க வேண்டுமா? இதனால் வருமுன் காப்பதே நலம்!

குழந்தைகள் குறிப்பாகப் பெண் குழந்தைகளை சற்று முன்னெச்சரிக்கையுடனேயே வளர்க்க வேண்டும். குழந்தைகளை இந்த விஷயங்களில் எந்த அளவுக்கு கவனமாக வளர்க்க வேண்டும் என்பதை இஸ்லாம் இப்படி வலியுறுத்துகின்றது:
குழந்தை ஒன்பது வயதானவுடன் அவள் அன்னிய ஆடவர்களைப் பார்ப்பதும், பழகுவதும் கூடாது. அன்னிய ஆடவர்கள் என்பதில் அவளது தந்தை சகோதரர்கள் நீங்கலாக அனைவரும் அடங்குவார்கள். அவர்கள் ஆசிரியர்களாக இருக்கலாம் அல்லது அது போன்ற மற்றவர்களாகவும் இருக்கலாம். பத்து வயது நிரம்பிவிட்டால் சகோதரர்களையும் சகோதரிகளையும் கூட ஒன்றாய் தூங்க (ஒரே அறையில்) அனுமதிக்கக் கூடாது என்கின்றது இஸ்லாம்.
இங்கே ஒரு பெண் தனியாகச் சென்று ஒரு ஆண் ஆசிரியரிடம் பாடம் பயிலுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு குழந்தை விபரமறிந்த குழந்தையாக மாறிடும்போது அது சாதாரணமாக மறைக்கும் பகுதிகளைப் பார்க்க அனுமதிக்கக்கூடாது. அது
குழந்தையின் அம்மா, அக்கா போன்ற நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரியே.

குழந்தைகள் எதிர் பாலரை அடிக்கடி சந்திக்க அனுமதிக்க வேண்டாம். அவர்கள் ஒரே கல்விக்கூடத்தில் படிப்பவர்களாக இருந்தாலும் சரியே. ஒன்பது வயதை அடைந்ததும் அவள் பெண்மை குறித்து அறிந்திட வேண்டியவற்றை கற்றுக் கொடுத்து விடுங்கள்.
இறைவனைப் பற்றிய அச்சத்தை முன்நிறுத்தி, இஸ்லாம் கற்றுத்தரும் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதுதான், நாகரீகம் என்ற பெயரில் காட்டுமிராண்டிகளாக மாறிவிட்ட சமுதாயத்திடமிருந்தும் பாலியல் வன்முறைகளிலிருந்தும் விடுபட இருக்கும் ஒரே வழி.
இவர்களைத் தண்டிக்க சட்டங்கள் இல்லை எனும்போது இஸ்லாத்தின் வழிகாட்டுதல்களே ஒரே வழி.
குழந்தைகளுக்கே பாதுகாப்பில்லை. 50 சதவிகித குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றார்கள் என்கிறபோது, இங்கே பெண்கள் பர்தா போடக்கூடாது என கூப்பாடு போடுகிறவர்களைக் கண்டால் நம்மால் சிரிக்காமல் இருக்க முடிவதில்லை.
[Source: 1.Indian Express, November 9, 2003, 2. தப்ரானி நபிமொழித் தொகுப்பு, 3. Bringing-Up of Children in Islam]
                                                                                                                                      By M. குலாம் முஹம்மது (வைகறை வெளிச்சம்)

செய்தி உதவி தாருஸ்ஸலாம் தவ்ஹித் ஜமாத்

1 கருத்து:

  1. நமது சமூகம் பாதுகாக்கப் படனும் என்று கருதி, நல்ல வழிகாட்டல் பதிவை தேடிபிடித்து இங்கு பதிவு செய்த சகோதருக்கு எனது அன்பைச் சொல்லி, அவருக்காக ஏகனிடம் பிராத்திக்கின்றேன். மார்க்க ஞானம் பெற்ற இவர் பிறருக்கும் சொல்லுபவராக என்றும் திகழ அல்லாஹ் அருள் புரிவானாக.

    பதிலளிநீக்கு