Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 3 பிப்ரவரி, 2014

“உறவுகள் மேம்பட… சமுதாயம் சீரடைய…!” – நெல்லை ஏர்வாடி முஸ்லிம் அறக்கட்டளை நடத்திய கட்டுரைப் போட்டியில் 3ம் பரிசு பெற்ற கட்டுரை!

இது நெல்லை ஏர்வாடி முஸ்லிம் அறக்கட்டளை நடத்திய கட்டுரைப் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்ற கட்டுரை. அபூதபியில் வசிக்கும் ஃபரினா அல்தாஃப் இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார்.
“உறவுகள் மேம்பட… சமுதாயம் சீரடைய…!”
மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும்.
அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (அல் குர்ஆன் 4:36)
முன்னுரை
அனைத்து புகழும் அல்லாஹ்விற்கே உரித்தாகட்டும். அன்றாடம் Machineகளோடும் Computerகளோடும் உறவாடும் இன்றைய இயந்திர மனிதர்களுக்கு அவசியமான தலைப்பு நம் கட்டுரையின் தலைப்பு. நம்மை படைத்து பக்குவபடுத்திய அல்லாஹ் தன்னை வணங்குமாறு கூறும் மேற்கூறிய வசனத்தில் அதற்கடுத்ததாய் உறவுகளைப் பேணுமாறு கூறுகிறான்.
இதிலிருந்தே உறவுகளின் முக்கியத்துவம் என்ன என்பதை உணர முடிகிறது. பிறந்த குழந்தை தன் ஆரம்ப பாடத்தை உறவுகளிலிருந்து கற்க ஆரம்பிக்கிறது. அன்பைக் கற்றுக் கொடுக்கும் தாய், அறிவை புகட்டும் தந்தை, விட்டுக் கொடுத்து வாழும் உடன்பிறப்புகள்… என தன் குடும்ப உறவுகளிலிருந்தே இந்த உலகத்தை புரிய ஆரம்பிக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்!
ஆனால் மாறி வரும் இன்றைய நவீன காலம் உறவுகளிடையே ஏற்படுத்திவிட்ட விரிசலையும் அதற்கு இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிவிட்ட தீர்வையும் இந்தக் கட்டுரையில் காண்போம் இன்ஷா அல்லாஹ் !
பொருளுரை
இன்றைய உறவுகளின் விரிசல்களுக்கு முக்கிய காரணங்கள்:
1. நவீன விஞ்ஞானத்தினால் மாறி வரும் உலகம்.
2. பொருளாதாரத்தைத் தேடும் மனிதனின் பயணம்.
3. உறவுகளிடையே புரிதல் இன்மை (Misunderstanding).
நவீன விஞ்ஞானதினால் மாறி வரும் உலகம்
நவீன கருவிகளின் வசதிகளினால் (Mail, Message) தூரங்கள் குறைந்து விட்டதோ என்னவோ? உறவுகளிடையே இடைவெளி அதிகமாகிவிட்டது உண்மை. அன்று நம் தாய்மார்கள் வானில் நிலா காட்டி சோறு ஊட்டினார்கள். ஆனால் இன்றைய குழந்தைகள் TVயிலும் Computerலும் Rhymes பார்த்து சாப்பிடுகின்றனர். தாய் சொல்லி கதை கேட்ட குழந்தை இன்று தானே Laptopலும் Mobileலும் கதை கேட்க, தாய்க்கும் பிள்ளைக்குமான முதல் இடைவெளி இங்கிருந்தே ஆரம்பித்து விடுகிறது.
இதுவே இயற்கையான நிலவிலிருந்து இயந்திரமான Computerக்கும் இடையே பரிணாம வளர்ச்சியின் ஆதிக்க ஆரம்பம். அன்று அக்கம் பக்கம் உறவுகளோடு தெருவில் ஓடி ஆடி விளையாடிய குழந்தைகள் இன்று வீட்டிற்குள் T.V.யும் Laptopமாக!
விளைவு – அறியப்படாத விஷயங்களும் புரியாத வயதில் தெரிந்து கொள்ள தூண்டபடுகின்றனர். அதனால் ஏற்படும் சமுதாய சீரழிவுகளை சொல்லி தெரிய வேண்டியதில்லை. அன்றாடம் தொலைக்காட்சியிலும், செய்தித்தாளிலும் வரும் செய்திகள் இவற்றையே பிரதிபலிக்கின்றன. நவூதுபில்லாஹ்!
அடுத்ததாக அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும் தந்தைக்கு அலுவலக வேலைகளையும் வீட்டிலேயே பார்க்க வசதியாக வந்துவிட்டது இன்று Smart Phoneகளின் ஆதிக்கம். மனைவியோடும், குழந்தைகளோடும் செலவிடவேண்டிய நேரத்திலும் I Phoneலும் Laptopலும் செலவிடுகின்றனர். உறவுகளோடு உறவாட முடியாத மனிதர்கள் முகம் தெரியாத நபர்களோடு FACE BOOKல் உரையாடுகிறார்கள். ஆனால் உறவினர்களிடமோ நேரமின்மையை காரணம் காட்டுகின்றனர்.
அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தனது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கபடுவதையும் வாழ்நாள் நீடிக்கப்படுவதையும் விரும்புகிறவர் தம் உறவைப் பேணி வாழட்டும்.” (அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி), நூல் : ஸஹீஹ் முஸ்லிம் – 4998)
ஆனால் உறவுகளோடு இணைந்து வாழாத மனிதர்கள் இன்று கருவிகளோடும் கணினிகளோடும் இணைந்து காலத்தையும் நம் உடல்நலனையும் வீணடித்துக் கொண்டிருக்கின்றனர்.
பொருளாதரத்தைத் தேடும் மனிதனின் பயணம்
இன்றைய சூழலில் மனிதனின் வாழ்வில் பொருளாதாரம் முக்கிய அங்கமாகிவிட்டது. தேவைகள் நிறைவேறாத போது மனிதன் பொருளாதாரத்தைத் தேடி அலைய நேரிடுகிறது. அதன் விளைவால் பலர் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலைகளுக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் பராமரிக்கபட வேண்டிய வயதில் பெற்றோர், சகோதரரின் கவனிப்பற்ற உடன்பிறப்புகள், தனிமைத் துயரில் மனைவி, தந்தையின் கண்டிப்பில்லாமல் குழந்தைகள் எனக் குடும்பமே சீர்குலைக்கப்படுகிறது.
இதனால் ஏற்படும் விளைவுகள் கொஞ்சமில்லை..! பெற்றோருக்கும், மனைவிக்கும் இடையேயான கருத்துவேறுபாடு. அவனோ பிரச்னைகளின் தீவிரத்தை அறியமுடியாத தொலைவில்! இதனால் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் பூதாகரமாகி பல இடங்களில் கணவன் – மனைவி இடையே மணமுறிவு வரை கொண்டு சென்று விடுகிறது.
சில இடங்களில் தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே உறவுச் சிக்கல் ஏற்பட்டு அதனால் முதியோர் இல்லங்கள் இன்று பெருகி வருவதை காணமுடிகிறது.
மனிதனின் முதல் உறவு கருவிலிருந்து ஆரம்பிக்கிறது. ஆம்! தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என நபி (ஸல்) கூறினார்கள். அப்படிப்பட்ட தாயை இத்தகைய பிரச்னைகளால் தள்ளி வைக்க எண்ணுகிறார்கள். பொருளாதாரத் தேடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததன் விளைவு உறவுகளின் உணர்வுகளை நிறைவேற்ற முடியாததால் தவறான வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுத்து அதனால் சீரழிந்து கொண்டு இருக்கும் குடும்பங்களை இன்று நாம் கண் முன்னே காணகிறோம்.
தந்தையின் கண்டிப்பில்லாமல் வளரும் குழந்தைகள் அதனையே தனக்கு சாதகமாக்கி இளம் வயதிலேயே சீர் கெட்டுப் போவதை காண முடிகிறது.
உறவுகளிடையே புரிதல் இன்மை (Misunderstanding)
நபி (ஸல்) கூறினார்கள்: “உற்றார் உறவினருக்கு செய்யும் சதக்காவின் நன்மையானது இரட்டிப்பாக கிடைக்கிறத.”
பொருளாதாரத்தைத் தேடி முன்னிலைக்கு வரும் மனிதன் தராதரம் (Status) பார்க்க ஆரம்பித்து விடுகிறான். தன் நெருங்கிய உறவினரே தேவையுடையவராய் இருக்க எங்கேயோ இயங்கிக் கொண்டிருக்கும் இயக்கங்களுக்கு, அமைப்புகளுக்கு தனது பொருளாதாரத்தை வழங்கி தனக்கு பெருமையையும் புகழையும் தேட விரும்புகிறான். தன்னுடைய நெருக்கமான உறவுகள் கூட தூரமாக்கபடுகின்றன.
முன்னேறிய மனிதன் தன் நிலைக்கு ஒத்தவர்களுடன் மட்டுமே உறவு பாராட்டுவது, சம்பந்தம் செய்து கொள்வது போன்ற செயல்களினால் தம் தாய் தந்தையரின் உடன்பிறப்புகள் கூட அன்னியமாக்கப்படுகின்றனர்.
தன் குடும்பத்தில் தன்னை விட யார் உயர்ந்துவிட்டாலோ அங்கு பொறாமை குடியேறிவிடுகிறது. இதனால் உறவுகளில் ஏற்படும் விரிசலானது அடுத்த தலைமுறைகளையும் பாதிக்கிறது. இப்படியே போனால் உறவு என்ற வட்டமானது தாய்-தந்தை-குழந்தை என்ற நிலைக்கு சென்றுவிடுமோ என்ற அச்சநிலை ஏற்படுகிறது.
இன்று வீட்டிற்கு ஒரு குழந்தை, இரு குழந்தை என்ற நிலை ஏற்பட்டு வருவதனால் எதிர்காலத்தில் அடுத்த தலைமுறைக்கு “சின்னாப்பா”, “பெரியாப்பா” என்ற உறவுகளே தெரியாமல் போய் விடுமோ என்று அஞ்சத் தோன்றுகிறது. அன்று உறவினர் வீட்டில் திருமணம் என்றால் 4 நாட்களுக்கு முன்னரே சங்கமித்து வேலைகளையும் பங்கிட்டுக் கொண்டன உறவுகள், இன்றோ மண்டபத்தில் கல்யாணம் – வலிமா விருந்து அதோடு விடை பெறுகின்றன உறவுகள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து முடித்தபோது ‘உறவு’ எழுந்து, (இறை அரியணையின் கால்களைப் பற்றிக்கொண்டு), “(மனிதர்கள் தம்) உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்” என்று கூறி (மன்றாடி)யது. அல்லாஹ், “ஆம். உன்னை (அதாவது உறவை)ப் பேணி நடந்துகொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்துகொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்து விடுபவனை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?” என்று கேட்டான். அதற்கு உறவு, “ஆம் (திருப்தியே) என் இறைவா!” என்று கூறியது. அல்லாஹ், “அது உனக்காக நடக்கும்” என்று சொன்னான்” என்றார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 4994)
உறவிற்கு அல்லாஹ் கொடுத்திருக்கும் மேன்மையைப் பாருங்கள். பதிலுக்கு பதில் உறவாடுபவர் உறவை பேணுபவரல்லர். வலிய சென்று உறவாடுபவரே உறவைப் பேணுபவராவார்.
முடிவுரை
உறவுகள் மேம்பட சமுதாயம் சீரடைய நாம் என்ன செய்ய வேண்டும்?
1. தத்தமது பொறுப்பை உணர்ந்து செயல்படல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. மேலும், உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளியாவார். தன் பிரஜைகள் குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளியாவான். அவன், தன் பொறுப்புக்குட் பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவளது பொறுப்புக்குட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் (அடிமை) தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவை பற்றி விசாரிக்கப்படுவான். (நூல்: புஹாரி 2558)
ஆகவே ஒவ்வொருவரும்  மறுமையில் தம் பொறுப்பு குறித்து விசாரிக்கபடுவோம் என்பதை உணர்ந்தாலே உறவுகள் மேம்படும். சமுதாயம் சீரடையும் இன்ஷா அல்லாஹ்.
2. நேரம்
நேரமும் நம்மிடம் ஒப்படைக்கபட்ட அமானிதமே! உலகில் இதுவரை வாழ்ந்த மனிதர்களில் அதிகமான பொறுப்புகளை ஏற்று குறைவில்லாமல் நிறைவேற்றிய நமது முன்மாதிரியான இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ஒரு சிறந்த வணிகராக, ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளுக்கு சிறந்த கணவராக, அல்லாஹ்வின் தூதராக, போர்த் தளபதியாக, சமுதாயத் தலைவராக, ஆட்சியாளராக… என்று இத்தனை பொறுப்புகளையும் நிறைவேற்ற தங்களுடைய நேரத்தை எவ்வாறு சிறப்பாக பங்கிட்டார்களோ மேற்கூறியவற்றில் 10% பொறுப்பு கூட இல்லாத நாம் அதிகமாக கூறும் காரணம் நேரமின்மையே.
நம்மை நாமே பரிசீலித்துகொள்வோம் இன்ஷா அல்லாஹ்…!
3. மனம் விட்டுப் பேசாமை
உறவுகளுக்குள் ஏற்படும் கருத்து வேற்றுமையே இன்று பல பிரச்னைகளுக்கு மூல காரணமாய் இருக்கின்றன. அவை தீர்க்கப்படாமல் மனதிலே வைக்ப்படுவதனால் Depression (மன அழுத்தம்), BP என்று உடல்நிலை மட்டுமல்லாது மனநிலையும் பாதிக்கபடுகிறது. பிரச்னைகளை மனம் விட்டு பேசுவதனால் அதற்கு தீர்வு கிடைப்பதோடு உறவுகளும் பலப்படும். வாழ்க்கையும் வளமாகும்.
4. சுற்றுலா செல்லுதல்
உறவுகள் அனைவரோடும் இன்பச் சுற்றுலா. இதனால் உறவுகளிடையே மனக் கசப்புகள் நீங்கி மகிழ்வோடு வாழ வழி வகுக்கும். உறவுகள் மேம்பட தெளிவான பார்வைகள் வேண்டும். தெளிவான பார்வைகள் அழகிய புரிதலை கொடுக்கும். அழகிய புரிதல் மனிதநேயம் கொண்ட சமுதாயத்தை சர்வ நிச்சயமாய் ஈன்றெடுக்கும் இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹ்வின் அருளைப் பெறும் நோக்கத்தில் அமைதியாகவும் பொருமையாகவும் குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் நடந்து உறவுகளை ஆதரித்து சமுதாயம் சீரடைய, ஈருலகிலும் நாம் வெற்றி பெற வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக… ஆமீன்.
எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர்வழியைக் காட்டிய பின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்! (அல் குர்ஆன் 3:8)

Mrs. Farina Althaf, Abu Dhabi
நன்றி தூது ஆன்லைன்

2 கருத்துகள்:

  1. அருமையான கட்டுரை அனைவரயும் சிந்திக்க தூண்டும் என நினைக்கின்ரேன்

    பதிலளிநீக்கு
  2. மாஷா அல்லாஹ்!

    நல்ல தரமான கட்டுரை! நடைமுறையில் உள்ள விஷயங்களை சிந்தித்து எழுதப்பட்டிருக்கின்றது.

    அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா இந்த கட்டுரை எழுதிய சகோதரிக்கு
    அருள்பாளிப்பானாக! இது போன்று இன்னும் சிறப்பான பணிகளை செய்வதற்கு அவர்களுக்கு உதவி செய்வானாக! ஆமீன்!

    பதிலளிநீக்கு