அன்றாடம் மக்களின் அசைவுகள் நகரத் தொடங்குவதே பத்திரிகைகளிலிருந்துதான். ஒரு சாதாரண இந்திய குடிமகனிலிருந்து (Citizen), நாட்டின் தலைவர் (President) வரைக்கும் பத்திரிகை இல்லாமல், அன்று அவர்களுடைய வாழ்க்கை தொடங்காது.
இன்றைய நவீன காலக்கட்டத்தில் கூட, நம்முடைய அதிகாலை வேளையில் நாம் கேட்கக்கூடிய குரல் இதுவாகத்தான் இருக்கும்: “சார்! பேப்பர்.” அன்று பத்திரிகை வந்தவுடன், சிறுவர்கள் தங்களுடைய கல்வி தொடர்பாக தேடுவார்கள். இளைஞர்கள் தங்களுடைய வேலை தொடர்பான விஷயங்களை தேடுவார்கள். பெண்கள் தங்களுக்கு தேவையான நகைகள், புடவைகள் போன்ற பொருட்கள் மற்றும் சமையல் குறிப்புகள் தொடர்பானவைகளை தேடுவார்கள். இப்படி, ஒரு வீட்டில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த நபர்களுக்கும் தேவையான அனைத்து விஷயங்களையும், செய்திகளையும் ஒரே நாளிதழில் பெற்றுக் கொள்ளும் ஒரு வலிமையான காகிதமே பத்திரிகையாகும்.
பத்திரிகையை பொறுத்தவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அல்லாமல், ஈராக்கில் உள்ள பாக்தாத் நகரத்தில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியில் இருந்து, இந்தியாவில் ஒரு கிராமத்தில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகள் வரை செய்தியாக போய் மக்களிடம் கிடைக்கிறது. இதை, செய்தி (News) என்பார்கள். நார்த் (North), ஈஸ்ட் (East), வெஸ்ட் (West), சவுத் (South) என்றதன் சுருக்கமே News எனப்படும்.
அதாவது, நான்கு திசைகளிலும் நடைபெறக்கூடிய நிகழ்வுகளை தொகுப்பாக்கி மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதுதான் “நியூஸ்” எனப்படும். நியூஸ் என்பதைப் பல வகையாக பிரிக்கலாம். அன்றாடம் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டு நடப்புகளை எடுத்துரைப்பதன் நோக்கமே இதன் பொருள் ஆகும்.
சரி! நாம் இப்பொழுது செய்திகளின் வகைகளைப் பற்றிப் பாப்போம். செய்தி என்பது ஒற்றைச் சொல்லாக இருந்தாலும், அது வரக்கூடிய இடத்தைப் பொருத்து மாறுபடும் என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
செய்திகள் ஐந்து வகைப்படும்: 1. உள்ளூர் செய்திகள் (Local News) 2. வட்டாரச் செய்திகள் (Regional News) 3. மாநிலச் செய்திகள் (State News) 4. தேசியச் செய்திகள் (National News) 5. உலகச் செய்திகள் (International News) என்று செய்திகள் பிரிக்கப்படுகின்றன.
நாளிதழ்களிலும், தனித்தனித் தலைப்புகளிலேயே செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனால், மக்கள் இலகுவாக செய்திகளை பிரித்து தெரிந்து கொள்ள முடியும். இது பத்திரிகைத்துறையின் வளர்ச்சி என்றால், அது மிகையாகாது. அதே, வழிமுறையைத்தான், புத்தகங்கள் உட்பட அனைத்து விதமான செய்தித்தாள்களும் பயன்படுத்துகின்றன என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
1. உள்ளூர் செய்திகள்
நாளிதழ் வெளிவரும் பகுதியில் உள்ள, நாம் இருக்கக்கூடிய பகுதியில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகள், சம்பவங்கள், போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என்று அனைத்தையும் பற்றிய ஒரு சுருக்கமான தகவலை தருவது உள்ளூர் செய்திகள் ஆகும்.
இந்தச் செய்திகளுக்கு என்று தனியான நிருபர்கள் அந்தந்தப் பகுதிகளில் செயல்படுவார்கள். இவர்கள், அந்தப் பகுதி மக்களுடன் எப்பொழுதும் தொடர்பில் இருப்பார்கள். ஏதாவது, நிகழ்ச்சிகள் இருந்தால் இவர்களுக்கு தொடர்பு கொண்டு செய்திகளை கொடுத்து விடுவார்கள் என்பது கூடுதல் தகவலாகும்.
2. வட்டாரச் செய்திகள்
வட்டாரச் செய்திகள் என்பது நான்கு திசைகளிலும் உள்ள பகுதிகளை கருத்தில் கொண்டு வெளியிடப்படும். இந்தச் செய்திகள் நம்முடைய எல்லைக்குட்பட்ட பகுதிகளை உள்ளடக்கியதாகும். இதற்கு, மக்களிடம் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
ஏனென்றால், நாம் ஒரு வேலையை கருத்தில் கொண்டு செல்வதற்குமுன், நாளிதழ்களைப் பார்த்து தெரிந்து கொண்டு போகலாம். இதற்கு, தனியாக நிருபர்கள் இருந்தாலும், பெரும்பாலான நாளிதழ்களில் உள்ளூர் செய்திகளை சேகரிப்பவரே பார்த்துக் கொள்வர்.
3. மாநிலச் செய்திகள்
நாம் தமிழ்நாட்டில் இருக்கின்றோம். நம்முடைய மொத்த மாவட்டங்கள் 32 ஆகும். நம் மாநிலத்திற்குட்பட்டு நடைபறக்கூடிய நிகழ்ச்சிகள் அனைத்தும் வெளியிடப்படும் செய்திகளே மாநிலச் செய்திகள். உதாரணமாக நாம் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கின்றோம் எனில், நம்முடைய மாவட்டங்கள் அல்லாத, மற்ற மாவட்டங்களின் செய்திகள் அனைத்தும் வெளியிடப்படும். இதற்கு மாநிலச் செய்திகள் எனப்படும்.
4. தேசியச் செய்திகள்
நம் இந்தியாவை பொறுத்தவரை பல்வேறு மாநிலங்களில், பல்வேறு மொழிகள் பேசி வரும் சூழ்நிலையில், மற்ற மாநிலங்களில் நடைபெறக்கூடிய செய்திகளை எவ்வாறு தெரிந்து கொள்வார்கள்? அதற்குத்தான், தேசிய செய்திகள் பயன்படுகின்றன. மற்ற மாநிலங்களில் நடைபெறக்கூடிய செய்திகளை வெளியிடுவதையே தேசிய செய்திகள் என்கிறோம்.
5. உலகச் செய்திகள்
அமெரிக்க அதிபர் ஒபாமா கலிஃபோர்னியாவுக்கு சென்றார். இது இன்றைய தினத்தந்தியில் வெளிவந்த செய்தி. தினத்தந்தியில் ஏன் அமெரிக்காவைப் பற்றி செய்தி வர வேண்டும்? காலாத்திற்கேற்றவாறு, மக்களின் தேவைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதனால், நாட்டு நடப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே ‘உலக செய்திகள்’ முக்கிய இடம் வகிக்கின்றன.
இதுவே செய்திகளின் உட்பிரிவுகளாகும். இதுவெல்லாம், நம்முடைய தூரத்தை கணக்கிட்டு பிரித்தவை. இதுவல்லாமல், துறை சார்ந்த செய்திகள் என்று இருக்கின்றன. அவைகள், விளையாட்டுத் துறையில் இருந்து, தொல்லியல் துறை வரை பல வகைப்படும். இந்தத் பத்திரிகைத்துறையை “இதழியல்” (Journalism) என்று அழைப்பார்கள்.
இதற்கு ஓர் எல்லை என்பது கிடையாது. இதனுடைய முக்கிய பணி என்னவென்றால், “ஒரு செய்தியை பெறுவதும், மற்றவர்களுக்கு தருவதும்” ஆகிய பணியே இதழியல் எனப்படும். The art of collection and dissemination of current news and events என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இதுதான் உலகம் முழுவதும் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பத்திரிகைகள் இன்று பல வகைப்படுகின்றன. ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு வெளிவருகின்றன. எல்லாமே பயன் தரும் வகையில் இருக்கின்றது. இதன் மூலம் மக்களின் செய்திப் பரிமாற்றம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்தப் பத்திரிகைகள் தினசரிகள், வார இதழ்கள், வாரம் இருமுறை, மாத இதழ்கள், மாதமிருமுறை என்று வெளிவந்து கொண்டிருக்கின்றன. வெளிவரக்கூடிய அனைத்து பத்திரிகைகளுமே பயன்பெறும் வகையில் தான் இருக்கின்றன.
தினசரி பத்திரிகைகள் வாரத்திற்கு ஒரு முறை ஆன்மீக மலர், இளைஞர் மலர், குடும்ப மலர் என்று வெளியிட்டு வருகின்றன. இதற்கென்றே தனி ரசிகர்கள் இருக்கின்றார்கள். குழந்தைகள் மலரில் குழந்தைகள் விரும்பக்கூடிய சிறுகதைகள், கட்டுரைகள், படங்கள் வரைதல் என்று சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கும். குழந்தைகளும் பங்கேற்கும் விதமாக போட்டிகளும் வரும். இவர்களின் அறிவுக்கான பயிற்சியாக இது அமையும்.
அடுத்ததாக, பத்திரிகைத்துறையில் வேலை செய்பவர்களை பத்திரிகையாளர் (Journalist) என்று அழைப்பார்கள். விடுமுறையில்லாமல் உழைக்கக்கூடிய ஒரே துறை பத்திரிகைத் துறைதான். பத்திரிகையாளர்களுக்கு விடுமுறை நாட்கள் என்பது கிடையாது.
Shift என்ற முறைதான் பின்பற்றப்படுகிறது. இதன் மூலம், காலை ஷிஃப்ட், மாலை ஷிஃப்ட், நைட் ஷிஃப்ட் என்று பிரித்துக் கொள்வார்கள். இதன் மூலம் மாறி மாறி விடுமுறை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். இதுதான் இந்தியாவில் மட்டுமின்றி, உலக நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
பத்திரிகைத்துறை சேவையை அடிப்படையாக கொண்டது. ஆனால், அதற்கு நேர்மாற்றமாக சில பத்திரிகைகள் செயல்பட்டு வருகின்றன. யாருக்கும் அடிபணியாமல் சுயமாக இயங்க வேண்டும். தாங்கள் சொல்ல வேண்டிய கருத்துக்களை தைரியமாக எடுத்துரைக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டே இந்தத் துறை நாட்டின் நான்காவது தூணாக கருதப்படுகிறது.
நம் நாடு நான்கு முக்கிய துறைகளைக் அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகின்றது. அவையாவன: 1. சட்டத்துறை (Legislative Department) 2. நிர்வாகத்துறை (Administrative Department) 3. நீதித்துறை (Justice Department) 4. பத்திரிகைத்துறை (Journalism Department)
நாட்டின் வளங்களாக குடிமக்கள் இருக்கின்றார்கள். இந்தக் குடிமக்களுக்கு எதிராக நடைபெறக்கூடிய அநியாயங்களையும், அக்கிரமங்களையும் பத்திரிகைத்துறை சுட்டிக்காட்டி, மக்களின் சார்பாக கேள்விகள் கேட்க வேண்டும். இதுதான் பத்திரிகைத்துறையின் தலையாய பணியாகும்.
சட்டத்துறை நாட்டில் மக்களின் நலன் கருதி சட்டங்களை வகுக்க வேண்டும். இந்தச் சட்டங்கள் மக்களின் விருப்பப்படியே அமல்படுத்தப்பட வேண்டும். ஒரு வேளை இந்தச் சட்டங்கள் மக்களின் உரிமையையும், சுதந்திரத்தையும் பாதிக்கும் விதமாக இருந்தால் (தடா, பொடா, யு.ஏ.பி.ஏ. போன்ற கருப்புச் சட்டங்கள் போன்று) அதற்கெதிரான மக்களின் நியாயத்தை வெளிப்படுத்த வேண்டும். மக்களின் சார்பாக, மக்களின் நியாயமான கேள்விகளை சட்டத்துறைக்கு எதிராக எழுப்ப வேண்டும்.
பத்திரிகைத்துறை நாட்டில் நடைபெறக்கூடிய அநியாயங்களையும், சட்டமீறல்களையும், மனித உரிமை மீறல்களையும் கண்டித்து நீதியின் சார்பில் நிற்க வேண்டும்.
பத்திரிகையைப் பற்றி ஜவஹர்லால் நேரு அவர்கள் இவ்வாறு கூறினார்:
“பத்திரிகைகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி இருப்பதை விட, சுய கட்டுப்பாட்டில் இயங்குவதே சிறப்புடையது.”
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக