ஜித்தா: “நாங்கள் இராமநாதபுரம் தொகுதியைக் கேட்கவில்லை. எங்கள் முதல் கோரிக்கையில் இருப்பது மயிலாடுதுறை மற்றும் மத்திய சென்னைதான்” என்று தமுமுகவின் மாநிலத் தலைவர் மவ்லவி J.S. ரிஃபாயி ரஷாதி கூறியுள்ளார்.
தற்போது சவூதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், கடந்த 14.2.2014 வெள்ளி மாலை ஜித்தா நகரில் ஸரபிய்யா இம்பாலா ஆடிட்டோரியத்தில் “இன்றைய அரசியலில் மனித நேய மக்கள் கட்சி” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
ஆளுங்கட்சியில் கூட்டணியில் இருந்த சமயம் சமுதாய மக்களுக்கு ஆதரவாக பல்வேறு கோரிக்கைகளை சட்டசபையில் எழுப்பிய போதும் அதனை ஆளுங்கட்சி நிறைவேற்றவில்லை. நாடாளுமன்ற கூட்டணியில் தொடர வேண்டுமெனில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்த போது அது சம்பந்தமாக சாதகமான பதில்கள் வரவில்லை.
ஆனால் தமது கோரிக்கைகளை திமுகவிடம் வைத்த போது அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து திமுகவிடம் கூட்டணி ஏற்பட்டது. இவ்வாறு அவர் தனது உரையில் கூறினார்.
பின்னர் அவர் கலந்துகொண்டோரின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அன்றைய பத்திரிகையில் வெளிவந்த செய்தி குறித்து ஒருவர், “இராமநாதபுரம் தொகுதியை மமகவுக்கு ஒதுக்கியிருப்பதாகவும் வேட்பாளர் ஹைதர் அலீ எனவும் செய்தி வந்துள்ளதே… SDPI கட்சி சென்ற மாதமே அத்தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதே… ஒருவேளை இருவரும் அத்தொகுதியில் போட்டியிட்டால் அது BJPக்கு சாதகமாய் மாறிவிட வாய்ப்புள்ளதே?” என்று வினா எழுப்பினார்.
அதற்கு அவர் பதிலளிக்கையில், “பத்திரிகையில் முன்னுக்குப் பின் முரணான செய்திகள் வர வாய்ப்புண்டு. அதனை நம்ப வேண்டாம். நாங்கள் இராமநாதபுரம் தொகுதியைக் கேட்கவில்லை. எங்கள் முதல் கோரிக்கையில் இருப்பது மயிலாடுதுறை மற்றும் மத்திய சென்னைதான். எனவே அதுபோன்றதொரு நிலை ஏற்படாது” எனக் கூறினார்.
“மமக எத்தனை இடங்களில் போட்டியிட வாய்ப்புள்ளது?” என்ற கேள்விக்கு, “நாங்கள் ஐந்து தொகுதிகள் கோரிக்கை வைத்துள்ளோம். அதிகப்படியாக இரு தொகுதிகள் கிடைக்க வாய்புள்ளது” என்று கூறினார்.
ஜித்தாவிலிருந்து அபூ முஸ்அப்
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக