Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 7 அக்டோபர், 2014

தமிழகத்தில் அரிதாகும் சுகப்பிரசவம் ! சிசேரியன் 15 % அதிகரிப்பு ...


தமிழகத்தில் சுக பிரசவங்கள் குறைந்து வருகிறது. ஒரே ஆண்டில் சிசேரியன் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது மருத்துவ வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 20 மருத்துவகல்லூரி, 26 தலைமை மருத்துவமனைகள், 240 வட்ட மருத்துவமனைகள், 1,751 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,706 துணை சுகாதார நிலையங்கள், 382 ஊரக குடும்ப நல மையங்கள், 110 பேறு கால பின் கவனிப்பு மையங்கள், 108 நகர்ப்புற குடும்ப நல மையங்கள் என 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மையங்கள் சுகாதார துறையின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. மருத்துவமனைகளில் மட்டுமின்றி ஆரம்ப சுகாதார மையங்களில் பிரசவங்களை நடத்த ‘லேபர் டேபிள்‘ உள்ளிட்ட வசதிகளை சுகாதார துறை செய்து வருகிறது. மாநில அளவில், நடப்பாண்டில் ஜூலை மாதம் வரை தனியார் மருத்துவமனைகளில் 34 சதவீத பிரசவங்களும், அரசு மருத்துவமனைகளில் 41 சதவீதம் பிரசவங்களும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 25 சதவீதம் பிரசவங்களும் நடந்துள்ளது.

2013-2014ம் ஆண்டு (ஜூலை வரை) அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் 2,38,860 பிரசவங்கள் நடந்தது. இதில் ஆபரேஷன் மூலமாக 11,435 பிரசவங்கள் நடந்துள்ளது. கடந்த 2012-2013ம் ஆண்டில் அரசு சுகாதார மையங்களில் 8,649 பிரசவம் மட்டுமே ஆபரேஷன் மூலமாக நடந்தது. கடந்த 2011-2012ம் ஆண்டில் சுகாதார மையங்களில் ஆபரேஷன் மூலமாக 8,320 பிரசவங்கள் நடத்தப்பட்டது. ஒரே ஆண்டில் சிசேரியன் பிரசவங்களில் எண்ணிக்கை 2,786 அதிகரித்துள்ளது. 
ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமின்றி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தலைமை மற்றும் வட்டார மருத்துவமனைகளிலும் சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் நல்ல நாள், நேரம் பார்த்து ஆபரேஷன் முறையில் பிரசவம் செய்யப்படுவதாக புகார் அதிகரித்து வந்தது. தற்போது அரசு மருத்துவமனை, சுகாதார மையங்களில் சிசேரியன் பிரசவம் அதிகரித்து வருவது மருத்துவ துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநில அளவில் மக்கள் தொகை 7.21 கோடியாக இருக்கிறது. கடந்த 10 ஆண்டு காலத்தில் 15.6 சதவீதம் அளவிற்கு மக்கள் தொகை அதிகரித்தது. 1000 ஆண்களுக்கு 996 பெண்கள் என்ற வகையில் ஆண், பெண் விகிதாச்சாரம் இருக்கிறது. 1000 குழந்தை பிறந்தால் அதில் 21 குழந்தைகள் இறந்து விடுவதாக தெரியவந்துள்ளது. தேசிய அளவில் 1000 குழந்தைகளுக்கு, 42 குழந்தை இறப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில், குழந்தை இறப்பு சதவீதம் வெகுவாக குறைந்துள்ளது. பேறு காலத்தில் தாய்மார்கள் இறப்பும் வெகுவாக குறைந்து விட்டது. 2013-2014ம் ஆண்டில் பேறு காலத்தில் 727 பேர் இறந்துள்ளனர். இது குறைந்துவிட்ட நிலையில், சுக பிரசவங்கள் நடப்பது அரிதாகி விட்டது. கர்ப்பிணி பெண்களுக்கு ரத்தசோகை, அதிக எடை, ரத்த அழுத்தம், உயரம் குறைவு, போதுமான நடைபயிற்சியின்மை, சத்துணவு இன்மை போன்ற காரணங்களினாலும், மன பதற்றம் காரணமாகவும் சுக பிரசவங்கள் நடக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. 

சுகாதார துறையினர் கூறுகையில், ‘‘குழந்தை பிறப்பு விகிதம் 15.7 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 7.4 சதவீதமாகவும் இருக்கிறது. நடப்பாண்டில் 2 மற்றும் 1 குழந்தைகளுடன் 77.2 சதவீதம் பேர் குடும்ப கட்டுபாடு ஆபரேஷன் செய்துள்ளனர். பெரும்பாலான குடும்பங்களில் ஒரே குழந்தை என்ற நிலை உருவாகி விட்டது. கர்ப்பிணி பெண்கள் தேவையான ஊட்டசத்து உள்ள உணவுகளை சாப்பிடவேண்டும். சத்துணவு இல்லாததால் கரு வளர்ச்சி மற்றும் சுக பிரசவங்கள் குறைந்து வருகிறது. பெண்கள் உரிய நேரத்தில் மகப்பேறு டாக்டர்களை அணுகி தங்கள் உடல் எடையை பரிசோதித்து அதற்கேற்ப செயல்படவேண்டும். சிலர் கர்ப்பம் அடைந்து 6 மாதங்களுக்கு பிறகு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு செல்கிறார்கள். முறையான பரிசோதனை செய்தால் மட்டுமே சுக பிரசவங்கள் அதிகமாக நடக்கும். அனைத்து அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் சுக பிரசவங்களை சிறப்பாக நடத்த தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது‘‘ என்றனர்.

கருத்தடை ஆபரேஷன் அதிகம்
மாநில அளவில் நடப்பாண்டில் 3.23 லட்சம் பெண்கள் கருத்தடை ஆபரேஷன் செய்தனர். 91,605 பேர் சுகாதார மையங்கள், மருத்துவமனைகளில் ஆணுறை (காண்டம்) பெற்றுள்ளனர். 3,97,152 பேர் கருத்தடை வளையங்களை பயன்படுத்தியுள்ளனர். 1.80 லட்சம் பேருக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆணுறை வழங்க சுகாதார துறை இலக்கு வைத்திருந்தது. ஆனால் இந்த இலக்கில் 10 சதவீதம் கூட நிறைவேறவில்லை. குழந்தை பேறு தடுக்க ஆணுறை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. அதே நேரத்தில் குடும்ப கட்டுபாடு ஆபரேஷன் இலக்கை காட்டிலும் வெகுவாக அதிகரித்து வருகிறது. பொருளாதாரம், குடும்ப சூழல் காரணங்களுக்காக ஒரே குழந்தையுடன் குடும்ப கட்டுபாடு ஆபரேஷன் செய்யும் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.

நன்றி தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக