Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 7 அக்டோபர், 2014

முஸ்லிம் இளைஞர்கள் அவ்வளவு மோசமானவர்களா என்ன?‏

கல்லூரி படிப்பை நிறைவு செய்துவிட்டு பன்னாட்டு நிறுவனமொன்றில் வேலைக்கு சேர்ந்தேன். முதல் நாள், முழுக்கை சட்டையும் கருமை நிற நீட் காற்சட்டையும் உடுத்தி அலுவகத்திற்கு புறப்பட்டேன்.
கல்லூரியில் படித்த நாட்களில் நான் அப்படி ஆடை அணிந்ததில்லை. உடை வழக்கம் மாறவிருக்கிறது, வேறு என்னவெல்லாம் மாறுமோ!

‘மாணவன் என்ற படிநிலையை கடந்துவிட்டோம்! இனி வாழ்க்கை பாணி எப்படி இருக்குமோ?’ – என என்னுள் கேள்வி எழுப்பிக்கொண்டேன். என்றைக்கும் உணராத வித்தியாசமான உணர்வு அன்று என்னுள் நிறைந்திருந்தது.
அலுவலகத்தினுள் நுழைந்தேன். பரிச்சயமான நபர்கள் யாருமில்லை. அங்கு யாரை அணுக வேண்டும்? எப்படி நம்மை அறிமுகப்படுத்தி கொள்ளவேண்டும் என எதுவும் தெரியவில்லை.
வரவேற்பறையில் ஒருவன் விழி பிதுங்க அலுவலக அமைப்பை பார்த்துகொண்டிருந்தான்.
இவனும் நம்மை போன்று புதிதாக இங்கு சேர்ந்திருப்பவன் என்பதை புரிந்துகொண்டு அவனருகில் சென்றேன்.
சுயவிவரங்களை பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொண்டோம். ‘முறைப்படியாக (Formalities) சிலவற்றை முடித்துவிட்டு வேலை பார்க்குமிடத்திற்கு செல்லவேண்டும்’ – என்றான்.
அருகிலிருந்த அறைகளில் அமர்ந்து முறைப்படி செய்யவேண்டியதை செய்துவிட்டு வேலை பார்க்குமிடத்திற்குள் நுழைந்தோம். எங்களை பற்றி சக பணியாளர்களிடம் அறிமுகப்படுத்தும்படி மேலாளர் சொன்னார்.
இருவரும் எங்களைக் குறித்து அறிமுகப்படுத்திக் கொண்டோம்.
எனது பெயர் நான் ஒரு முஸ்லிம் என்பதை அடையாளப்படுத்தியது.
எனக்கென்று ஒதுக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்தேன். எதிரில் இருந்த பெண்களில் ஒருத்தி என்னை ஏதோ கேலி செய்து நகைத்தாள். நான் எதுவும் பேசவில்லை. லேசாக சிரித்தபடி அமர்ந்திருந்தேன்.
அப்போது ஒருத்தி சொன்னாள், “இந்த தம்பி அமைதியான பையனா தெரிகிறான்”
அதை செவியுற்ற இன்னொருத்தி “முஸ்லிம் பசங்க பார்க்கத்தான் கம்னு இருப்பாங்க, ஆனா மோசமானவங்க” – என்றாள் நகைப்புடன்.
வெளிப்படையாக மனதில் பட்டதை சொல்லிவிட்டாள். அவள் மனதில் கபடமில்லை. முஸ்லிம் சமூகம் மீதான தனிப்பட்ட வெறுப்பு எதுவும் இல்லை.
அந்த சமயம் நான் எதுவும் பேசவில்லை. அவள் கூறிய வார்த்தைகள் என் காதருகில் மீண்டும் மீண்டும் ஒலித்துகொண்டிருந்தன.
அன்று முழுவதும் அது பற்றி மட்டுமே யோசித்தேன்.
‘ஏன் முஸ்லிம் வாலிபர்களை இப்படி நினைக்கிறார்கள்?’
‘நாம் அப்படி என்னதான் தவறு செய்துவிட்டோம்?’ – என்று உட்கிரகித்துக் கொண்டிருந்தேன்.

பள்ளி, கல்லூரிகளில் சந்தித்த நிகழ்வுகள் தான் அவள் மனதில் ஆழப் பதிந்திருக்க வேண்டும். நான் பயின்ற பள்ளிகளிலும் முஸ்லிம் மாணவர்களுக்கு இப்படியான அவப்பெயர் தான் இருந்தது.
மாணவர்கள் தவறு செய்வது வழமைதான் எனினும், முஸ்லிம் அடையாளத்தோடு ஒரு மாணவன் தவறு செய்து ஆசிரியர் முன் செல்லுகையில், ஆசிரியர்களின் முக பாவனை ‘இவங்க எப்போதுமே இப்படித்தான்’ என்று சொல்வதாக இருப்பதை கண்டிருக்கிறேன்.
இரவு தூங்கும்வரை இப்படித்தான் யோசித்தவாறே இருந்தேன். நான் பள்ளி பருவத்தில் செய்த சில தவறுகளும் என் மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன. இந்நிலைமையை எண்ணி மிகவும் வருந்தினேன்.
மறுநாள் அலுவகம் செல்லும்போது முஸ்லிம் இளைஞர்கள் குறித்து வெளிப்படையாக பேசிய பெண்ணுக்கு ஒரு சாக்லேட் வாங்கிகொண்டேன். வேலையின் நடுவே தேநீர் இடைவெளிக்கு செல்லும்போது அந்த சாக்லேட்டை அந்த சகோதரியிடம் கொடுத்தேன்.
அவள் அதை பெற்று கொள்ளும் முன் வியப்புடன், “என்ன இது! உனக்கு பிறந்த நாளா?” – என்றாள்.
“இல்லை, சும்மா தான். வாங்கிக்கோ” என்றேன்.
அவள் அதை வாங்கிக் கொண்டதும் சொன்னேன் “நீ நேற்று சொன்னதுபோல முஸ்லிம் பசங்க எல்லோரையும் மோசமானவங்கனு நினைக்காதே, எல்லோரும் அப்படி கிடையாது. நல்லவன்-கெட்டவன் எல்லா சமூகத்திலும் இருப்பான்தானே!’
“நேற்று நான் சொன்னது சும்மா விளையாட்டுக்குத்தான். உன்னை அப்படி சொல்லல. நான் பார்த்த முஸ்லிம் பசங்க அப்படி இருந்தாங்க அதான்…பெரிசா எடுத்துக்காதே!” என்றாள். அவளது குரலில் குற்ற உணர்வு தெரிந்தது.
நான் தொடர்ந்தேன்: ”முஸ்லிம் சமூகத்தில பெரும்பாலான மக்கள் படிப்பறிவு இல்லாதவங்க. மேற்படிப்பு படிச்சி நல்ல வேலைக்கு போகும் முதல் தலைமுறை இதுதான். பெத்தவங்க படிச்சிருந்தால்தானே பிள்ளைங்கள வழிநடத்த முடியும்? அது நான் இருக்கிற சமூகத்தில இல்ல”
“ஆமாம் நீ சொல்றது சரிதான். நான் ஏதும் தவறா பேசிருந்தா மன்னிச்சிடு..”
“நான் எதுவும் தப்பா நினைக்கல. உன் மனசுல பட்டத நீ சொன்ன மாதிரி எனக்கு தோன்றியதைத்தான் சொன்னேன்” என்று புன்முறுவலுடன் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.
முஸ்லிம் இளைஞர்கள் குறித்து அந்த சகோதரி கொண்டிருக்கும் கருத்து தவறென்பதை உணர்ந்திருப்பாள் என்றும் சமய பேதமின்றி நல்லவர்கள்-கெட்டவர்கள் வியாபித்திருக்கிறார்கள் என்பதை புரிந்திருப்பாள் என்றும் நம்புகிறேன்.
கல்வியில் பின்தங்கியதால் பல முஸ்லிம் வாலிபர்களின் நடத்தையில் பிரச்சினை உள்ளது. முஸ்லிம்களின் கல்வியின்மைக்கு காரணம் இங்கிருக்கும் நெருக்கடிதான். கல்வி நிலையங்களில் முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்சினைகளும் ஏராளம்.
எழுத்தாளரும் மனித உரிமை ஆர்வலருமான அ. மார்க்ஸ் அவரது கட்டுரை ஒன்றில் இப்படி குறிப்பிட்டார்: “பாடத் திட்டங்களில் வரலாற்றுத் திரிபுகள், தினம் சரஸ்வதி துதி பாடச் சொல்லிக் கட்டாயப் படுத்துதல் முதலியன பள்ளிக் கூடங்களை முஸ்லிம் குழந்தைகளிடமிருந்து அந்நியப்படுத்தி விடுகின்றன. சமூகத்தில் வேகமாகவும் ஆழமாகவும் பரவும் ‘வெறுப்பு-அரசியல்’, ஆசிரியர்களிடம் ஆழமாக வேரூன்றும்போது அவர்கள் முஸ்லிம் குழந்தைகளை வேறுபடுத்திப் பார்க்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது.”
இதுபோல் மேலும் பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றையும் களைய முற்படவேண்டும்.
படிக்காததற்கு கடந்த கால நிகழ்வுகளையும், சமகால நெருக்கடிகளையும் சுட்டிக் காட்டினாலும் தற்போதும் கூட முஸ்லிம் சமூகம் விழித்து கொண்டபாடில்லை என்றே தோன்றுகிறது.
இருபாலாரும் கல்வி கற்று, ஒழுக்க மாண்புகளோடு அடுத்தடுத்த தலைமுறையை சிறப்பாக உருவாக்க பாடுபட வேண்டிய தருணம் இது.
-நாகூர் ரிஸ்வான்.
தொடர்புக்கு: ahammedrizwan93@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக