Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 30 அக்டோபர், 2014

இரண்டு நூல்கள் ...

இப்போதெல்லாம் நூல்களை படிப்பதற்கு நம்மில் பலருக்கு நேரம் கிடைப்பதில்லை. கிடைப்பதில்லை என்று சொல்வதை விட கிடைக்கும் நேரத்தை கண்டு கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. நானும் அதில் ஒருவன்.காலை முதல் மாலை வரை அலுவலகம். மாலை வீடு வந்து முகம் கை கால் கழுவி தேநீரைக் குடித்து தின்பண்டம் ஏதாவது இருந்தால் அதை வாயில் வைக்கும் போது அந்தி நேரத்து தொழுகை (மக்ரிப்) அழைப்போசை கேட்டு விடும். அப்புறம் தொலைக்காட்சி, இஷா தொழுகை, சாப்பாடு, தூக்கம் என இரவு கழிந்து விடும்.

நூல்களை படிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்ற எண்ணம் வெறும் எண்ணமாகவே இருந்து வந்தது. ரமலானும் வந்தது. “ரமலான் வந்தாச்சு. டிவிய எல்லாம் கொஞ்சம் மூட்ட கட்டி வைங்கப்பா. ஒரு மாசம் டிவி பாக்கலைன்னா ஒன்னும் குடி முழுகாது. சகோதரர் ஒருவர் யாருக்கோ சொன்னது தக்க சமயத்தில் செவிகளில் வந்து விழுந்தது.  அதை செயல் வடிவம் கொடுத்த போது பலன் தெரிந்தது.
ரமலானுக்குப் பிறகு தொலைக்காட்சிக்கு ஒதுக்கிய நேரத்தில் பாதியை குறைத்த போது அந்த நேரம் நூல்களை படிக்க உதவியது.
அப்படி சமீபத்தில் படித்த நூல்கள் இரண்டு. ஒன்று ரஹீக், மற்றொன்று இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள். இரண்டும் ஏற்கனவே படித்ததுதான் என்றாலும் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதுப் புது அனுபவங்களை தருகிறது.
சில நூல்கள் தொடர்ந்து மீள் வாசிப்புக்குரியவை. இருபது வயதில் படித்த நூல் முப்பது வயதில் வேறு பார்வையயை தரும். இந்த மீள்வாசிப்பு நூல்களில் முதலில் இருந்திட வேண்டியது திருமறை குர்ஆன் என்பதை தனியே சொல்லத் தேவை இல்லை.
ரஹீக் மற்றும் மைல்கற்கள் நூல்களுக்கு ஒரு ஒற்றுமை. படித்ததும் இரண்டும் ஒரே விதமான உணர்வை தருகின்றன. அந்த உணர்வு, இஸ்லாம்; இந்த இறைமார்க்கத்தை ஏற்று நிற்கும் முஸ்லிம்கள்; அந்த மார்க்கம் வழங்கும் அமைதியிலும் அபிவிருத்தியிலும் திளைக்கும் அவர்கள் அதை தங்களோடு முடக்கி போட மாட்டார்கள், மானிட நேசம் உந்தித் தள்ள அதை சக மனிதர்களுக்கும் எடுத்துச் சொல்வார்கள்.
அப்போது எதிர்ப்பு அலையென மலையென அவர்கள் மேல் திரும்பும். பொறுப்பார்கள். சகிப்பார்கள். நாடு துறப்பார்கள். எதிர்ப்பார்கள். வெற்றி தோல்வி பெருவார்கள். ஆனால் ஒரு போதும் இந்தப் பணியிலிருந்து பின் வாங்க மாட்டார்கள்.
அவர்கள் ஏற்று நிற்கும் அந்தக் கொள்கை, நம்பிக்கை அவர்களை பின் வாங்க விடாது. தளர்ச்சி, சோர்வு, சுதாரிப்பு இவை தற்காலிகமாக அவர்களிடம் வரும். மீண்டு எழுவார்கள். எதிர்ப்பாளர்களை அறைகூவி அழைப்பார்கள். அவர்கள் எவ்வளவு சிறிய கூட்டமாக இருந்தாலும் அவர்களை எதிர்த்து நிற்போர் எத்தகையதொரு பெரும் பட்டாளமாக இருந்தாலும் இதுதான் அந்த சமுதாயத்தின் நடைமுறை.
மைல்கற்களில் ஒரு செய்தி அழுத்தமாக சொல்லப்பட்டுள்ளது. அது, இறைமார்ககத்தை நிலை நாட்டிடும் பணியில் அவர்கள் உழைத்திடும்போது அவர்கள் அதற்குரிய பலனை இந்த உலகிலேயே எதிர்பார்க்க மாட்டார்களாம். மறுமைதான் அவர்கள் இலக்காம். ஏன் அவர்களின் எதிரிகள் தோற்க வேண்டும், அதை பார்த்து மகிழ வேண்டும் என்ற எண்ணத்தைக் கூட அவர்கள் விட்டு விடுவார்களாம்.
யாசிர்(ரலி) அவர்களின் குடும்பத்தார் பற்றிய செய்தி வருகிறது,
மக்கா குஃப்பார்களால் அவர்கள் கடும் சித்திரவதை படும் காட்சியை கண்ட போது பெருமானார்(ஸல்) அவர்கள், “யாசிரின் குடும்பத்தாரே, பொறுத்துக் கொள்ளுங்கள். சுவனம் உங்களுக்கு இருக்கிறது” என்று சொன்னார்களாம்.
அதே போல் நம்பிக்கை கொண்டதற்காக நெருப்புக் குண்டத்தில் எறியப்பட்டவர்களும், அவர்களை அவ்வாறு வதம் செய்தவர்கள் இவ்வுலகில் தண்டனை பெறாமல் தப்பித்த வரலாறும் வருகிறது.
இந்த விவகாரங்கள் இந்த உலகோடு முடிவதில்லை. வேறு கணக்கு இருக்கிறது, வேறு தீர்ப்பு இருக்கிறது என்பதை நம் சிந்தையில் ஆழமாக இந்த சம்பவங்கள் பதிக்கிறது.
ரஹீக்கில் வரும் அகபா உடன்படிக்கை இந்த கருத்தாக்கத்திற்கு மேலும் ஒரு உதாரணம்.
அகபாவில் நின்ற அன்சாரிகளை பார்த்து பெருமானார்(ஸல்) அவர்கள், நான் உங்களோடு வந்தால் உங்களுக்கு கடும் எதிர்ப்புகள் எல்லா திசையிலிருந்தும் வரும் என்று பாரதூரமான விளைவுகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறார்கள். அதற்கு அன்சாரிகள், “அதை நாங்கள் எதிர்கொண்டால் எங்களுக்கு என்ன கூலி கிடைக்கும்” என்று கேட்கிறார்கள். பெருமானார்(ஸல்) அவர்கள், “உங்களுக்கு சுவனம் கிடைக்கும்” என்று பதில் பகிர்கிறார்கள். வேறு எந்த உத்தரவாதமும் அங்கு கொடுக்கப்படவில்லை.
இஸ்லாத்தின் எதிரிகள் வெற்றி மேல் வெற்றி குவிக்கும் இன்றைய நாள்களில் இந்த நூல்களும், அது நமக்கு பிரத்யேகமாக தரும் செய்திகளும் நல்ல புத்துணர்ச்சியை அளிக்கிறது. படித்து பயன் பெற வேண்டுகிறேன்.
யா அல்லாஹ்! உன்னுடைய பாதையில் முயல்பவர்களாக எங்களை ஆக்கு. அதில் எங்களுக்கு உற்சாகத்தை தா. அமைதியை தா. வேறு எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல்  உன் திருப்தியை மட்டுமே இலக்காக ஆக்கு. உன் மேலான சுவனத்தை தா.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக