Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 23 அக்டோபர், 2014

இடையனின் இறையச்சம்!

சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வலம் வந்த ஒரு காணொளிக் காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்தக் காலத்தில் இப்படியுமா நடக்கும் என்று அனைவரும் அதிசயித்தனர்.
ஸஊதி அரேபியாவில் ஒரு பாலைவனத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஓர் ஏழை ஆட்டிடையனைப் பற்றிய செய்திதான் அது. அந்த ஆட்டிடையன் வெறும் இரண்டரை நிமிட காணொளிக் காட்சி மூலம் தான் ஓரிரு நாட்களில் உலகம் முழுவதும் பிரபலமாவோம் என்று ஒருபொழுதும் எண்ணியிருக்கமாட்டார். மூன்று நாட்களில் 35 லட்சம் மக்கள் தன்னை அறிவார்கள் என்று கனவிலும் அவர் நினைத்திருக்கமாட்டார்.

அல் தய்யிப் யூஸுஃப் என்ற அந்த சூடான் நாட்டு ஏழையிடம், காரில் வந்த இரண்டு அரபிகள் அவரது ஆட்டு மந்தையிலிருந்து ஓர் ஆட்டை தங்களுக்குத் தருமாறு கேட்டார்கள். அவரோ, “இந்த ஆட்டு மந்தை என்னுடையது இல்லை. இன்னொருவருடையது. நான் எப்படி இதை உங்களுக்கு தர முடியும்?” என்று கேட்டார்.
ஆனால் அந்த அரபிகள் 200 ரியால் தருவதாக ஆசை காட்டினார்கள். “ஆடு தொலைந்து விட்டது” என்று உரிமையாளரிடம் பொய் சொல்லச் சொன்னார்கள். “இருநூறல்ல… இருநூறாயிரம் ரியால் தந்தாலும் அடுத்தவரின் ஆட்டை விற்க மாட்டேன்” என்று அவர் உறுதியாகக் கூறினார்.
அரபிகள் விடவில்லை. “இங்குதான் உரிமையாளரோ வேறு யாருமோ இல்லையே, பிறகு ஏன் பயப்படுகிறீர்?” என்று மீண்டும் பணத்தாசை காட்டினார்கள். அதற்கு அவர் யதார்த்தமாகக் கூறிய வார்த்தைதான் வரலாற்றில் வாகாய் பதிந்து விட்டது. “அல்லாஹ் எங்கு சென்றான்? அல்லாஹ் என்னை பார்க்கவில்லையா? அவன் உங்களையும் கண்காணிக்கிறானே…” என்று பொட்டிலறைந்தாற்போல் கேட்டு விட்டு ஆட்டை விற்க உறுதியாக மறுத்துவிட்டார்.
இது உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக இருந்தபொழுது நடந்த நிகழ்வை அப்படியே நம் கண் முன் கொண்டு வருகிறது. இரவு நேரத்தில் மாறுவேடத்தில் வலம் வந்த உமர் (ரலி) அவர்கள் ஒரு வீட்டில் தாய்க்கும், மகளுக்கும் நடக்கும் உரையாடலைக் கேட்டார்கள். தாய் தன் மகளிடம் பாலில் கொஞ்சம் தண்ணீரைக் கலக்கச் சொல்கிறார். ஆனால் மகளோ முடியாது என்கிறார். யாரும் பார்க்கவில்லையே என்று மீண்டும் தாய் வலியுறுத்திய பொழுது, “ஏன் அல்லாஹ் இல்லையா? அவன் பார்த்துக்கொண்டிருக்கின்றானே!” என்று பொட்டிலறைந்தாற்போல் கேட்டார் அருமை மகள்.
இதனைக் கேட்டுக்கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அந்த இடத்திலேயே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள். பின்னர் அந்தப் பெண்ணையே தன் மருமகளாகவும் ஆக்கிக் கொண்டார்கள் என்று வரலாறு கூறுகிறது.
இறையச்சம் என்பது இதுதான். இரும்புக் கோட்டைக்குள் இறுக்க மூடிக்கொண்டு இருந்தாலும் இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற இறையச்சம் இருந்தால் ஒருவரும் தவறிழைக்க மாட்டார்கள்.
அல்லாஹ் அருள்மறையில் இவ்வாறு கூறுகின்றான்:
மனிதர்களே! உங்கள் இறைவனுக்கு அஞ்சி ஒரு நாளைப் பற்றி பயந்து கொள்ளுங்கள். (அந்நாளில்) தந்தை பிள்ளைக்கு உதவ மாட்டான். பிள்ளையும் தந்தைக்கு யாதொரு உதவியும் செய்ய மாட்டான். ஒவ்வொருவரும் தன்னையே பாதுகாத்துக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கக்கூடிய நாளாகும் அது. நிச்சயமாக (அந்நாள் வருமென்ற) அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதாகும். ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி விட வேண்டாம். (ஷைத்தானாகிய) மாயக்காரனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கிவிட வேண்டாம். (திருக்குர்ஆன் 31:33)
அந்த ஒரு நாளைப் பற்றிய அச்சம் நம்மை நேர்வழியில் செலுத்திக்கொண்டே இருக்கும். அல்லாஹ்வுக்குப் பிடித்தமான குணமே இறையச்சம்தான். அல்லாஹ் அவர்களைப் புகழ்ந்து தன் அருள்மறையில் கூறுகின்றான். அவர்களைச் சிறப்பாக வர்ணிக்கின்றான்.
இறையச்சமுடையவர்கள் நன்மையான காரியங்களை விரைந்து செய்து முடிப்பார்கள். சுவனத்தின் உயர்தரமான இடத்தை அடைவதற்கு மிகவும் ஆர்வத்துடன் செயல்படுவார்கள். எந்த நேரத்திலும் நற்காரியங்கள் செய்வதில் முன்னணியில் நிற்பார்கள். தானதர்மங்களை தாமதமின்றி செய்வார்கள். இயன்றவரை இயலாதவர்களுக்கு உதவி செய்வார்கள். தங்களிடம் ஒன்றும் இல்லையென்றாலும் இனிய சொற்களைக் கொண்டு மற்றவர்களை மனம் குளிரச் செய்வார்கள்.
பிறரை மன்னிப்பதில் மகிழ்ச்சி கொள்வார்கள். இரக்க குணத்தை இயல்பாகவே பெற்றிருப்பார்கள். நன்மைகள் நடக்கும்பொழுது நா தழுதழுக்க அல்லாஹ்வைப் புகழ்வார்கள். சோதனைகள் வந்தாலோ சோர்ந்து போய் விடமாட்டார்கள். பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள். பாவமன்னிப்பு கேட்பதை அன்றாட வழக்கமாக்கிக்கொள்வார்கள். திக்ருகள், இஸ்திஃக்ஃபார் செய்வதில் கொஞ்சமும் சளைக்க மாட்டார்கள். ஒரு செயலைத் தவறு எனத் தெரிந்தால் உடனடியாக விட்டு விடுவார்கள். அதனை மீண்டும் எண்ணிக்கூட பார்க்கமாட்டார்கள்.
செல்வ நிலையிலும், வறுமையிலும் வல்லோனின் பாதையில் செலவிடுவார்கள். கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். இவர்களுக்குத்தான் அல்லாஹ் கீழ்க்கண்ட பரிசினை தயார் செய்து வைத்திருப்பதாகக் கூறுகின்றான்.
இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது இறையச்சமுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 3:133)
அத்தகையோருக்குரிய (நற்)கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும், சுவனபதிகளும் ஆகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும். அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர். இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது. (அல்குர்ஆன் 3:136)
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக