ஒரு காலகட்டம் வரை விளம்பரங்கள் மூலம் மக்களிடையில் செய்தியை கொண்டு போய் சேர்ப்பதில் நல்ல கருத்துகளையே முன் வைத்தார்கள். அதன் மூலம் ஒரு நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை பற்றிய விளம்பரத்தை தயார் செய்து வெளியிடுவார்கள். இந்த விளம்பரத்தில் பல்வேறு யுக்திகளை கையாண்டு மக்களை ஈர்ப்பார்கள். இதன் மூலம் அவர்களின் பெருட்களின் பயன்பாடும், அதன் சிறப்பும் மக்களிடம் சேரும்.
தொலைக்காட்சிகளில் விளம்பரம் என்பது ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் இடையில் வந்து செல்லும். விளம்பரம் என்றாலே மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால், இன்று வரக்கூடிய விளம்பரங்கள் அனைத்துமே ஆபாசங்களையே மூலதனமாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
எந்த விளம்பரத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குழந்தைகளையும், பெண்களையும் மையப்படுத்தியே இருக்கின்றன. குழந்தைகளுக்கு ஆபாச ஆடைகளை அணிந்து அவர்களை காட்சிப் பொருளாக பயன்படுத்துகின்றனர். இதை பார்க்கக்கூடிய குழந்தைகளுக்கும் அதைப்போன்றே ஆடை அணிய வேண்டும் என்ற எண்ணம் உருவாகின்றது.
சில வருடங்களுக்கு முன்பு சக்திமான் என்ற தொடர் வாரா வாரம் வெளிவந்து கொண்டிருந்தது. இந்தத் தொடர் குழந்தைகள் மட்டுமின்றி, ஓரளவு பெரியவர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். குழந்தைகளின் மனக்கண்ணில் எப்பொழுது ஞாயிற்றுக்கிழமை வரும், சக்திமானைப் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நாடகம் ஒரு ஹீரோயிஸத்தை பிரதிபலித்தது. எந்தப் பிரச்னை நடந்தாலும், சக்திமான் வந்து காப்பாற்றுவார் என்ற தவறான எண்ணத்தை சிறுவர்களிடம் உருவாக்கியது. இதில், துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால், ஒரு சிறுவன் சக்திமான் காப்பாற்றுவார் என்று மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்தான்.
சக்திமான் ஆடையை அணிவதில் சிறுவர்களின் அர்த்தமில்லாத ஆர்வமும் இருந்தது. ஸ்பைடர்மேன் படமும், அதற்கு பின்னாலுள்ள மேலைநாட்டவர்களின் உள் அரசியலையும், வியாபார யுக்தியையும் நாம் புரிந்து கொள்ள தவறிவிட்டோம்.
இதில், வளர்ந்து வரும் சிறுவர்களை ஒரு செயலில் அடிமைப்படுத்துவது பிரதான நோக்கமாகின்றது. மற்றொன்று வியாபார தந்திரமாகும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி வருமானங்கள் ஈட்டப்படுகின்றன என்பதை நாம் உணர வேண்டும். இதுவெல்லாம் ஒரு நிகழ்ச்சி மூலம் சாதித்தவை.
விளம்பரங்கள் தற்பொழுது அதையே பின்பற்றுகின்றன. அனைத்திலும் பெண்களை ஒரு போகப் பொருளாக காட்ட முயற்சி செய்கின்றன. அயோடக்ஸ் விளம்பரத்திருந்து, ஆண்ட்ராய்டு மொபைல் விளம்பரம் வரை இதே நிலையே பின்பற்றப்படுகின்றது.
அயோடக்ஸ் விளம்பரத்தில், ஒரு பெண்ணுக்கு இடுப்பு வலி ஏற்படுகிறது. பிறகு ஒரு ஆண் அதை தடவி விடுவது போன்ற காட்சிகள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. அது, நமக்கு சாதாரணமான விஷயமாக இருந்தாலும், அதற்கு பின்னால் உள்ள பாரதூரமான விஷயங்களை பார்த்தால், சக்திமான் போன்ற கதைதான்.
தற்பொழுது ஒரு விளம்பரம் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அதில், ஒரு குழந்தை எவ்வளவு நவீனமயமாகி உள்ளது, தற்கால அறிவியல் வளர்ச்சி எப்படி உள்ளது என்பதை விளக்கும் விதமாக அதை ஒளிபரப்புகின்றார்கள். இதில், நமக்கு ஆதங்கம் என்னவென்றால் “குழந்தை பிறப்பு” என்ற ஒரு முக்கியமான நிகழ்வையே கேவலப்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது அந்த விளம்பரம்.
அதில், ஒரு பெண்ணின் காலுக்கு அடியில் இருந்து குழந்தை கீழே விழுகின்றது. மறுபடியும் மறுபடியும் அதே மாதிரியே காட்சிகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த விளம்பரத்தை சாதாரணமாக பார்ப்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது. கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இதனுடைய உள்ளர்த்தங்கள் புரியும். இதுபோன்றுதான் ஏனைய விளம்பரங்களும்.
சினிமா பிரபலங்கள்
இந்த விளம்பரங்களுக்கு ஆபாசப் பண்ணையாக சினிமா நடிகர், நடிகைகளை பயன்படுத்தி வருகிறார்கள். பணங்களை வாரி இறைத்தால் வரும் காலங்களில் ஆடையின்றி கூட நடிப்பார்கள் என்றளவுக்கு காலங்கள் சென்று கொண்டிருக்கின்றன. பல்பொடி விளம்பரத்திலிருந்து, கார் விளம்பரம் வரைக்கும் இவர்களின் முகங்கள் இல்லை எனும் அளவுக்கு சென்றுவிட்டது.
இதற்கு ஒரு எல்லையை ஏற்படுத்த அரசுகள் முயற்சி செய்யவில்லை. இதில் வரும் வருமானங்களில் பாதி அவர்களுக்குத்தான். சில நல்ல விளம்பரங்களும் வரத்தான் செய்கின்றன. அது அதிகமல்ல. ஒன்று இரண்டுதான்.
அதில், ஒன்றை பகிர்ந்து கொள்ளலாம் என்று ஆசைப்படுகின்றேன். ஒரு சிறுவன் வீட்டின் உள்ளே சுவற்றில் கீறிக் கொண்டே இருப்பான். உடனே அந்தச் சிறுவனின் தாய், அவருடைய கணவரைப் பார்த்து, “என்னங்க… பார்த்துக்கிட்டே இருக்கீங்க” என்று சப்தம் போடுவார். ஆனால், அவர் குழந்தையின் மனம் போன போக்கிலே விட்டுவிடுவார். ஏனென்றால், அவ்வாறு கிறுக்கக்கூடிய அக்குழந்தையிடத்தில் ஒரு ஓவியராக வர ஆசை இருந்திருக்கலாம் என்று கூறி, அப்படியே விட்டுவிடுவார்.
இதுபோன்றுதான், குழந்தைகள் பற்றிய பல நல்ல கருத்துகளை பெற்றோர்களிடத்தில் ஏற்படுத்தக்கூடிய விளம்பரங்கள் சமூகத்தில் வரவேற்கக்கூடிய விஷயமாகும். ஆனால், இதுபோன்று வரும் விளம்பரங்கள் குறைவாகவே வெளிவருகின்றன. அரிதிலும் அரிதான விஷயமாகும்.
இன்றைய, பத்திரிகைகளில் அடிப்படையில் விளம்பரங்களே ஆபாசமாகத்தான் இருக்கின்றன. அதனால், பத்திரிகைகள் இதுபோன்றவைக்கு விமர்சனங்கள் எழுதுவதில்லை. நாம் இந்தப் பெண்கள் பற்றிய விளம்பரம் வருகின்றபோது, அதற்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுவதற்கான காரணங்கள் உண்டு. நீங்கள் கணக்கிட்டுப் பாருங்கள். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் இடையில் எவ்வளவு விளம்பரங்கள் வருகின்றன
நீங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு செலவழிக்கக்கூடிய நேரங்களில் கணிசமான நேரங்கள் விளம்பரங்களைப் பார்ப்பதில் செலவழிக்கப்படுகின்றன. இலங்கையில் தொலைக்காட்சி பார்க்கும் சிறுவர்கள் தமது வாழ்வில் இரண்டு வருடங்கள் விளம்பரம் பார்ப்பதில் கழிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஆக, மொத்தத்தில் இவ்வனைத்து விளம்பரங்களிலும், நுகர்வோரின் விருப்பு வெறுப்புக்கான வியாபாரப் பொருளாகவே பெண் காட்டப்படுகிறாள். ஜீன் கில்போன் என்பவர் தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “அதிகமான விளம்பரங்களில் பெண் என்பவள் ஒரு பாலியல் பொருளாகவே காட்டப்படுகிறாள். பெண் ஆடைக் கண்காட்சிக்காக வைக்கப்படும் பொம்மையாகவே நோக்கப்படுகின்றாள்.”
“பெண்கள் வீட்டு வேலைகளில் ஈடுபடுவதனாலேயே அவர்களை வைத்து விளம்பரம் செய்யப்படுகின்றது” என்ற வாதம் மாறி “பெண்ணின் உருவம் இருந்தால்தான் குறித்த பொருள் விற்பனையாகும்” என்ற எண்ணம் உருவாகியுள்ளது. அதனால்தான் பெண்களுக்கு எவ்விதத்திலும் சம்பந்தப்படாத அல்லது அவர்களால் பயன்படுத்த முடியாத ஒரு பொருளை விளம்பரப்படுத்தும்போது கூட அதனோடு ஒரு பெண்ணின் தோற்றத்தையும் சேர்த்து வருகின்றனர்.
இதுபோன்ற, பெண்களை ஆபாசப்படுத்தும் விளம்பரங்களிலிருந்து பெண் சமூகத்தை பாதுகாப்போம். ஆபாசமில்லாத இந்தியாவை உருவாக்குவோம்.
நன்றி துதூ ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக