கல்வி தீபம் ஏற்றிய மௌலானா முஹம்மது பின் அலவி (ரஹ்)
(பெரம்பலூர் மௌலான அவர்களை பற்றிய கட்டுரை)
பிறப்பு:
தோன்றின் புகழோடு தோன்றுக என்பர். நம் மௌலானா அவர்கள் அதற்கு இலக்கணமாகத் தோன்றினார்கள். இந்தியத் திருநாட்டின் தென்மேற்கு மாநிலமான கேரள மாநிலத்தில் மலப்புரம் மாவட்டம் மன்னார்காடு தாலுக்கா வெட்டத்தூர் என்ற அழகிய மலைகள் சூழ் கிராமத்தில் 1896-ஆம் ஆண்டு மிக ஏழ்மையான குடும்பத்தில் அலவி, பாத்திமா பீவி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். முஹம்மது குடும்பத்தின் முதல் குழந்தையான இவருக்கு ஜெய்னுலாப்தீன் என்ற தம்பியும் உம்மாத்தம்மாள் என்ற தங்கையும் உடன் பிறந்தவர்கள் ஆவர். இவர்களின் குடும்பத்தை 'காராடன் குடும்பம்' என்று அப்பகுதி மக்கள் அழைத்து வந்தனர்.
இளமை காலம்:
வறுமை தலை விரித்தாடிய இவரது இளமை பருவத்தின் ஆரம்பத்திலேயே தந்தையை இழந்துவிடுகிறார். தாயார் பாத்திமாபீவி அரவணைப்பில் வளர்ந்த மௌலானா அவர்கள் குடும்பத்தின் பொருளாதார தேவையை கருதி பள்ளி
செல்வதை விட்டுவிட்டு கூலி வேலைக்கு அனுப்பப்பட்டார். இவரின் கல்வி ஞானத்தை உணர்ந்த ஆசிரியர் மௌலானவின் அம்மாவிடம் நேரடியாகச் சென்று அவர் கூலிக்குச் சென்று சம்பாதிக்கும் பணத்தை தான் முழுமையாக வழங்கிவிடுவதாக உறுதியளித்த பின் மௌலானா பள்ளிக்கு மீண்டும் அனுப்பப்பட்டார். மிகத் திறமையான மாணவராக மௌலானா மிளிர்ந்தார். பகலில் பள்ளிக்கூடத்திற்கும் மற்ற நேரங்களில் நெல்வயல் காவல் காப்பது போன்ற பணிகளையும் செய்து வந்தார்.
செல்வதை விட்டுவிட்டு கூலி வேலைக்கு அனுப்பப்பட்டார். இவரின் கல்வி ஞானத்தை உணர்ந்த ஆசிரியர் மௌலானவின் அம்மாவிடம் நேரடியாகச் சென்று அவர் கூலிக்குச் சென்று சம்பாதிக்கும் பணத்தை தான் முழுமையாக வழங்கிவிடுவதாக உறுதியளித்த பின் மௌலானா பள்ளிக்கு மீண்டும் அனுப்பப்பட்டார். மிகத் திறமையான மாணவராக மௌலானா மிளிர்ந்தார். பகலில் பள்ளிக்கூடத்திற்கும் மற்ற நேரங்களில் நெல்வயல் காவல் காப்பது போன்ற பணிகளையும் செய்து வந்தார்.
மாப்பிளா கிளர்ச்சியும் தலைமறைவு வாழ்க்கையும்
1920-ல் மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை பிரிட்டிஷாருக்கு எதிராக துவங்கிய போது கிலாபத் இயக்கமும் இந்திய முஸ்லிம்களால் தொடங்கப் பெற்றது. இதன்பின் கேரளாவில் ஏற்ப்பட்ட மாப்பிள்ளைமார்கள் புரட்சியில் மௌலானா அவர்கள் பங்கேற்றார்கள். இவருடன் சேர்ந்த 10 பேர் கூட்டணி ஒரு பிரிட்டிஷ் அதிகாரியை கொலை செய்தது. இதன் காரணமாக மௌலானா உட்பட 10 பேர் கொண்ட குழுவைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பித்தது. ஆங்கில ஏகாதிபத்திய போலிசாரால் அவர்கள் தீவிரமாக தேடப்பட்டு வந்தனர்.
இவர்கள் 10 பேரும் மலைப்பகுதிகளில் பதுங்கி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இரவு நேரங்களில் மலையை விட்டு இறங்கி ஊருக்கு திரும்பிச் சென்று நிலவரம் அறியச் சென்ற நண்பர்கள் யாரும் மீண்டும் மௌலான அவர்களைச் சந்திக்க திரும்பி வரவேயில்லை. அவர்களின் நிலை என்ன என்பதை அறிய இயலாத மௌலானா ஒருநாள் நள்ளிரவில் தம் தாயை சந்திக்க மலையை விட்டு இறங்கி வீட்டுக்கு செல்கின்றனர். அங்கு அவரது தாய் அவரைக் கண்டதும் ஆரத்தழுவி உணவளித்து மகிழ்ந்தார். பின்பு தமது குடும்பத்தில் முக்கிய நபர்கள் அனைவரையும் போலிசார் பிடித்துச் சென்றுவிட்டனர். நீ இங்கிருந்தால் உன்னையும் பிடித்துச் சென்றுவிடுவர். எனவே இனி வீட்டிற்கு வராமல் எங்கேயாவது சென்றுவிடு என்று கண்ணீர்மல்கக் கூறினார்.
'நீ எங்கிருந்தாலும் மார்க்க கல்வி பயின்று ஏதாவது ஒரு அநாதைக் குழந்தையை தத்தெடுத்து உணவளித்து கல்வி புகட்ட வேண்டும்' என்று வேண்டுககோள் விடுத்து விடைகொடுத்து அனுப்பினார். அதுவே மௌhனா அவர்கள் தன் தாயாரை சந்திக்கும் கடைசி சந்திப்பாக அமைந்தது.
மார்க்கக் கல்வி பயிலுதல்
காவல்துறையும் ஆங்கில ஏகாதிபத்தியமும் தன்னை விடாமல் தேடுவதை அறிந்த மௌலானா தன் தலைமறைவு வாழ்க்கையை தொடர்ந்தார். அந்த மலைத் தொடர்களிலேயே பதுங்கி பதுங்கி தமிழகத்தைச் சேர்ந்த துவரங்குறிச்சி என்ற கிராமத்தில் தரையிறங்கி அங்கிருந்த பள்ளிவாசலில் சிலநாள் தங்கியிருந்தார். அவருடன் வந்த சில நண்பர்கள் திருச்சிவரை அவருடன் நடந்தே வந்து அவரை மட்டும் விட்டுவிட்டு பிரிந்து சென்றுவிடுகின்றனர்.
திருச்சியிலிருந்து தஞ்சை சென்று பாம்பாட்டிற்கு பள்ளி வாசலில் தங்குகிறார். அங்கு மௌலானா அவர்களுக்கு சிலர் பண உதவி செய்ய 1921-ல் இரயில் மூலம் சென்னை சென்று பெரம்பூர் பாரக்ஸ் ஜமாலியா அரபிக் கல்லூரியில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் மார்க்கம் பயின்றார். அக்கல்லூரி உதவியுடன் டெல்லி சென்று ரஹ்மானியா அரபிக்கல்லூரியிலும் ஃபதேப்பூர் அரபிபக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். பின்பு உத்திரபிரதேசத்திலுள்ள இந்தியாவின் புகழ்மிக்க தேவ்பந்து தாருல் உலூம் அரபிக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார்.
அரபி, இந்தி, உருது, தமிழ், ஆங்கிலம் என பலமொழி புலமைப்பெற்றார்.
டெல்லியில் பயிலும்போது மௌலானா முஹம்மது அலி, சௌகத் அலி, டாக்டர் அன்சாரி, அபுல்கலாம் ஆசாத் போன்றோரின் மேடைப் பேச்சுக்களால் கவரப்பட்டு தேசிய உணர்வு மேலிட்டுக் கதராடைகளை அணிய ஆரம்பித்தார். தனது இறுதிநாள் வரை கதராடை மட்டுமே அணிந்து வந்திருக்கிறார்.
தமிழகம் திரும்புதல்
1929-ல் தேவ்பந்த் அரபிக் கல்லூரியில் பட்டம் பெற்று சென்னை திரும்பினார். அப்போது சென்னையில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த சைபுல் இஸ்லாம் எனும் பத்திரிக்கையின் ஆசிரியர் ஜனாப் ஷேக் தாவூத் அவர்களின் உதவியால் தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் ஹாஜி கூ.அ.அப்துல் மஜீத் அவர்கள் நடத்தி வந்த காஸிமியா அரபிக் கல்லூரியில் ஆசிரியராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். படிப்படியாக அக்கல்லூரியின் தலைமை உஸ்தாதாக உயர்த்தப்பட்டார். அக்கல்லூரியின் நிறுவனர் சௌக்கார் முஹம்மது காசிம் அவர்கள் உயர்நிலைப் பள்ளி ஒன்றையும் நிறுவி கட்டணம் ஏதும் பெறாமலே மாணவர்களுக்கு ஈருலக கல்வி வழங்கி வந்தார். அவரின் மரணத்திற்கு பின் 1934ல் கல்லூரி சரிவர இயங்க முடியாததால் கல்லூரியிலிருந்து வெளியேறி பலரிடமும் ஆலோசனை பெற்று தானே ஈருலக கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதென முடிவு செய்தார். அங்கு பணியாற்றிய போது கிடைத்த ஊதியத்தின் சேமிப்பை வைத்தே இப்பணியை செய்வது என்றும் முடிவு செய்தார்.
கல்வி சாலைக்கு இடம் தேர்வு
அந்நாட்களில்அந்நாட்களில் கல்வியில் மிகவும் பின்தங்கிய பகுதியாக இருந்த அரியலூர், பெரம்பலூர், துறையூர் ஆகிய ஊர்களில் தமது கல்விப் பயணத்தைத் துவக்க ஆய்வு செய்து பெரம்பலூரிலேயே தாம் கல்விப் பணி அமைய வேண்டுமென முடிவு செய்கிறார். அப்போது பெரம்பலூரில் ஓரே ஒரு பள்ளிவாசல் மட்டுமே இருந்தது. அதன் பொறுப்பாளர்களை சந்தித்து தனது பணிக்கு ஒத்துழைப்பு வேண்டினார். முதலில் எதிர்ப்பு காட்டியவர்கள் நாளடைவில் மதரஸா துவக்க பள்ளிவாசல் அருகிலுள்ள ஒரு கூரை வீட்டில் பணிதுவங்க அனுமதி அளித்தனர். அதே வேளையில் உணவு மற்றும் ஊதியம் ஏதும் ஊர்மக்கள் சார்பில் தங்களுக்கு வழங்கப்படமாட்டாது என்ற நிபந்தனையும் விதித்தனர்.
கல்விப் பணித் துவக்கம்
1934-ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி இறைவன் அருளால் பள்ளிவாசலுக்கு சொந்தமான கட்டிடத்தில் மத்ரஸா ஸிராத்துல் முஸ்தகீம் என்று பெயரிட்டு தமது தியாக வரலாற்றின் புதிய அத்தியாயத்தை துவக்கினார்.
வறுமையின் கொடுமை
தமிழகம் முழுவதும் வறுமை தலைவிரித்தாடிய காலமது. இவர் மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஒரு கோணிப்பையை தோளில் போட்டுக் கொண்டு சுற்றுவட்டார முஸ்லிம் கிராமங்களுக்கு சென்று அவர்கள் தரும் பயிறு, கொள்ளு, கம்பு, கேழ்வரகு போன்றவற்றை திரட்டி தானே சுமந்து நடந்தே கொண்டுவந்து தமது கல்வி சாலையில் சேர்ப்பார். மாணவர்களுக்காக பல வேலைகளில் இவரே உணவு சமைத்தும் இருக்கிறார். அவர்களுக்கு உணவளிக்கும் முன் தான் பரிசோதித்த பின்னரே வழங்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. பிள்ளைகளுக்கு எதை வழங்கினாரோ அதைத்தான் அவரும் உண்டு வந்தார். இவரது காலடி படாத கிராமமே மாவட்டத்தில் இல்லை என கூறலாம். இவர் இவ்வாறு சிரமத்துடன் சுமைகளை சுமந்து வருவதை அறிந்த திருமாந்துறையைச் சார்ந்த பஸ் முதலாளி ராமரெட்டியார் அவர்கள் அவருடைய தேவகி பஸ் டிரான்ஸ்போர்ட்டில் மௌலானா அவர்களை சாலையில் எங்கு செல்வரைதக் கண்டாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிக் கொண்டு டிக்கெட் எடுக்காமல் அழைத்துவர வேண்டுமென்று பஸ் ஊழியர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அந்த அளவிற்கு இவரின் தியாகம் மாற்று மதத்தினரின் மனதையும் தொட்டிருந்தது. ஒருசேர மக்களுக்கு மார்க்கக் கல்வி, உலகக் கல்வி என்று பிரிக்காமல் இரண்டடையும் ஒருசேர மக்களுக்கு வழங்கிய பெருமை இவருக்கு உண்டு.
1941-ம் ஆண்டு மதரஸாவின் எத்தீம்கானா தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இன்று தமிழகத்தில் அரசு அங்கீகரித்த மிகப்பெரிய எத்தீம்கானா இதுதான். 1958-ல் இதனை வக்புவாரியத்தில் பதிவு செய்கிறார்.
சமூக நல்லிணக்கம்
எல்லா மதத்தையும் சேர்ந்தவர்களையும் சமமாக பாவித்த மௌலானா அவர்கள் கிருத்தவதரை தலைமையாசிரியராகவும் பார்ப்பன சமூகத்தைச் சார்ந்த ஒருவரை கணக்காளராகவும் நியமித்திருக்கிறார்.அனைத்து சாதி மாணவர்களுக்கும் கல்வி வழங்கிய பெருமை இவரையே சேரும். இதனை அறிந்த பின்னரே கிருத்துவ மிஷினரி பள்ளிகூடங்கள் பெரம்பலூரில் துவக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து சமூக மக்களும் மரியாதையோடு போற்றும் மகானாக இப்பகுதியில் வாழ்ந்து வந்தார். பலர் இவரது காலில் விழ முற்படும்போது தடுத்து அறிவுரைக்கூறி அனுப்புவார்.
பட்டங்கள் ஏற்காத பண்பாளர்
தனது மாணவர்களை காலையில் எழுப்பி தொழுகைக்க தயார் செய்வதிலிருந்து குளிக்க வைப்பதுவரை நேரடியாக இவரே செய்து வந்தார். அவரே மத்ரஸா ஆசிரியராக இருந்து மாணவர்களின் அரபி உச்சரிப்புகளை சரிசெய்வார். மாணவர்களை முன் நிற்க வைத்து தொழ வைக்கச் சொல்லி பயிற்சியும் அளிப்பார். திறமையான மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கி கௌரவிப்பார்.
அங்கு படித்துவிட்டு பாதியில் நின்று வெளியே சென்று ஆலிம் பட்டம் பெற்றுவந்த பழைய மாணவர்களை கண்ணியப்படுத்தும் நோக்கில் தமது கரங்களாலேயே உணவு பரிமாறி அவர்கள் உண்டு மகிழ்வதை கண்டு தானும் மகிழ்வார். மத்ரஸாவில் பணியாற்றும் ஊழியர்களின் சிறப்பம்சங்களைக் பாராட்டும் அதே வேளையில் கண்டிப்புக்கும் பெயர் போனவர்.
அவரது சேவைகளையும் தொண்டுள்ளத்தையும் உணர்ந்துள்ள மக்கள் நடமாடும் வலி என்ற பட்டம் வைத்து அழைத்தையும் மறுத்து அவ்வாறு அழைக்க வேண்டாம் என்று கூறியவர். தனது வாழ்நாள் முழுமையும் எளிய வாழ்க்கை மேற்க்கொண்ட இவர் இறுதிநாள் வரை தரையில்தான் படுத்தார். மெத்தை. தலையணை போன்றவற்றை உபயோகப்படுத்தவில்லை.
இறுதிப் பயணம்
கடைசிவரை திருமணம் செய்துக் கொள்ளாமல் மக்கள் பணியிலேயே திளைத்திருந்தார். அவர் நடத்தி வந்த கல்வி நிறுவனத்தை மேம்படுத்துவது நிலைப்படுத்துவது என்ற குறிக்கோள் ஒன்றையே இலட்சிய வேட்கையாக கொண்டு இறுதி மூச்சுவரை வாழ்ந்தார். தனது முதுமைக் காலத்தில் ஆஸ்துமா நோயினால் மிகவும் சிரமப்பட்டார்.
மௌலானா முஹம்மது பின் அலவி 1988-ல் தமது 93-வது வயதில் நவம்பர் 22-ல் இவ்வுலகைவிட்டு மறுவுலகம் சென்றார்கள். (இன்னாலில்லாஹி....) மிகப் பெரிய அத்தியாயம் நிறைவுற்றது.
கட்டுரையாளர்:
இ.தாஹிர் பாட்சா (அரும்பாவூர் - பெரம்பலூர் மாவட்டம்)
மின்னஞ்சல் மூலமாக
அஹமது சுல்தான்
Ivar "Moulana Printing Press" enra ssthabanathaiyum nadathi vanthar enru ninaikkiran
பதிலளிநீக்கு