Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 8 மார்ச், 2014

பெண்கள் நாட்டின் கண்கள்!

சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டில் பெண்களின் உரிமைகளையும், அவர்களுக்கான சுதந்திரத்தையும் பேசி வரும் இத்தருணத்தில் பெண்களின் நிலையைப் பற்றி ஆராய வேண்டும்.
கடந்த காலங்களில் பெண்களுக்கு எதிராக நடந்த அநியாயங்களையும், அக்கிரமங்களையும் சற்று சிந்தித்துப் பார்த்தால், பெண்களின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கின்றது என்பதை நம்மால் அறிய முடியும். அதில், குறிப்பாக டெல்லியில் மருத்துவ மாணவியில் இருந்து, சமீபத்தில் நடந்த அனைத்து பாலியல் கொடூரங்களையும் பார்த்தால் நாம் பெண் சமூகத்தின் தற்கால நிலையைப் பற்றி அறிய முடியும்.

டெல்லியில் நடந்த சம்பவம் ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வெகுவாக பேசப்பட்டது. இதுவல்லாமல் சிறுபான்மை, பழங்குடியின, ஆதிவாசி பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், இதற்கெதிராக கிளர்ந்தெழ ஊடகங்களும் பத்திரிகைகளும் முன்வருவதில்லை.
அதே போன்று, தமிழகத்தில் கற்புக்கரசிகளாக தங்களை காட்டிக் கொள்ளும் நடிகைகள் டெல்லி மாணவி கற்பழிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தபோது, மெழுகுவர்த்தி ஏந்தி அனுசரித்தவர்கள், இங்கு ஆசிட் வீசி இறந்த வினோதினிக்கு வாய் திறக்காதது அவர்களின் இரட்டை வேடத்தை எடுத்துக்காட்டியது.
பெண்களின் கண்ணியம் பறிக்கப்படுவது என்பது எல்லா மட்டத்தில் இருக்கின்றது. அவர்கள் செல்லும் இடங்கள் எல்லாம், அவர்களை பின்தொடர்கிற ஆண் சமூகம் தங்களுடைய ஆணவத்தை பயன்படுத்துவது அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில்தான் மார்ச் 8 உலக மகளிர் தினம் நம்மைக் கடக்கின்றது.
இன்று நாட்டில் எத்தனையோ தினங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதுவெல்லாம் ஒரு சடங்காக கொண்டாடப்பட்டு வரும் சூழ்நிலையில், பெண்கள் தினம் என்பதும் ஒரு சடங்காக அல்லாமல், அது ஒரு மாற்றத்தின் தினமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
அது, பெண்கள் தங்களின் கடமைகளை உணர்வதன் மூலமும், ஆண்கள் பெண் சமூகத்துக்கு செய்ய வேண்டிய கடமைகள் பற்றி உணர்வதன் மூலமும், இப்படி இருபாலரும் உணரும் போதுதான் அந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
இதுபோன்று, பெண் சமூகத்திற்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருந்த போதிலும், அவர்கள் தங்களுடைய கடமைகளை உணர்ந்ததனால் சாதித்த பெண்களும் உண்டு. அந்த வகையில் அன்னை தெரசா, மேரி க்யூரி என்று எத்தனையோ பெண்களை நாம் கூறலாம்.
பெண் என்பவள் தாய் என்ற வகையில் பெருமை அடைகிறாள். இந்த ஸ்தானம் என்பது மதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். தாய் என்பவள் முதலில் தன்னுடைய கடமை என்ன என்பதை உணர வேண்டும். அப்பொழுதுதான், எதிர்கால சமூகத்தை சிறந்த சமுதாயமாக உருவாக்க முடியும். அவள் தனக்கு பிறக்கும் குழந்தையை நல்ல முறையில் வளர்க்க வேண்டும். அந்தக் குழந்தைக்கு பெண்ணைப் பற்றியும், நாம் அவளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தையும் சிறு வயது முதலே ஊட்டி வளர்க்க வேண்டும்.
அந்தக் குழந்தைக்கு சிறு வயது முதலே சமூக சிந்தனையையும், பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அவ்வாறு கற்றுக் கொடுக்கும் பொழுது எதிர்காலத்தில் சிறந்த சிந்தனையாளராக அந்தக் குழந்தை மாறும். இது பெண்களின் முதல் கடமையாக இருக்கின்றது.
தாய்மை என்பது அவ்வளவு புனிதமானது. ஆனால், இன்று அதற்குக் கூட தன்னுடைய மனோ இச்சைக்கு இரையாகி விடும் சூழல் உருவாகியுள்ளது. சமீப காலங்களில் தாயையே சொந்த மகன் தன்னுடைய ஆசைக்கு பயன்படுத்திய சம்பவங்கள் எல்லாம் நம்மை அதிர்ச்சியடைய செய்கின்றன.
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “மனிதர்களிலேயே நான் அதிகம் கண்ணியப்படுத்துவதற்குரிய நபர் யார்?” என்று மூன்று முறை திரும்பத் திரும்ப கேட்டும் நபியவர்கள் ஒவ்வொரு முறையும் “உனது தாய்தான்!” என்றும், நான்காவது முறையாகத்தான் தந்தையைக் குறிப்பிட்டார்கள் என்றும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது.
இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றால் ஒரு தாயின் முக்கியத்தும் என்ன என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஒரு தாய்க்கும் மகனுக்கும் உண்டான உறவு முறை அவ்வளவு புனிதமானது. ஆனால், இன்று பெண்கள் தங்களுடைய கடமையை மறந்து, பிள்ளைகளை சரியாக வளர்ப்பதில் கவனம் செலுத்த தவறிவிடுகிறார்கள்.
இன்றைய பெண்கள் தொலைக்காட்சியை பயன்படுத்திக் கொண்டு குழந்தைகள் மேல் அக்கறை செலுத்தாமல் உள்ளார்கள். சீரியல் போன்றவைகளை காலையும் மாலையும் பார்த்துக் கொண்டே தங்களுடைய நேரத்தை போக்கி விடுகின்றார்கள். குழந்தையிடம் மனம் விட்டு பேசுவதற்கு கூட நேரத்தை ஒதுக்காமல், குழந்தைகளை வீட்டில் இருந்து அனுப்பி விட்டால் போதும் என்றளவுக்கே இருக்கின்றார்கள்.
இதனால், குழந்தைகளுக்கும் தாய்க்கும் உள்ள உறவுகளில் விரிசல் ஏற்படுகின்றது. இதுதான் வீட்டில் நிகழக்கூடிய அடிப்படை பிரச்னை என்பதை தாய்மார்கள் உணர வேண்டும். அதற்கேற்றவாறு குழந்தைகளை அக்கறையுடன் வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும்போது அவர்களை எதிர்காலத்தில் சிறந்தவர்களாக உருவாக்க முடியும்.
நாட்டிற்கு சிறந்த தலைவர்களை உருவாக்குவதில் பெற்றோர்களின் பங்கு இன்றியமையாதது என்பதை உணர்ந்து குழந்தைகளை வளர்க்க வேண்டும். அவர்களின் மீது முழுமையான அக்கறை எடுத்து, நல்ல பழக்கவழக்கங்களை சொல்லிக் கொடுத்து, சமூகத்தை பற்றிய அக்கறையை ஊற்றி, எதிர்காலத்தில் நாட்டின் மீது அக்கறை கொண்டவர்களாக அவர்களை உருவாக்க வேண்டும்.
அதுவே தாயாக இருந்து பிள்ளைகளுக்கும், இந்தச் சமூகத்திற்கும் செய்யக்கூடிய சிறந்த செயல் ஆகும். அதை தாய்மார்கள் முழுமையாக பூர்த்தி செய்ய இந்த மகளிர் தினத்தில் உறுதி ஏற்க வேண்டும்.
“பெண்கள் இந்த நாட்டின் கண்கள்” என்பார்கள். ஆனால், இந்த நாட்டின் கண்களை குத்தக்கூடிய அவலங்கள் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பெண்களை பணம் சம்பாதிக்கப் பயன்படும் கருவிகளாக பயன்படுத்தும் சூழ்நிலைதான் உள்ளது. அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு, அவர்கள் அதிகாரத்தின் கீழ் உட்படுத்தப்படுகின்றார்கள்.
பள்ளிக்கூடம் சென்று வரக்கூடிய பெண்களில் இருந்து, கல்லூரி சென்று வரக்கூடிய பெண்கள் வரை அவர்களுக்கென்று ஏதாவது ஒரு பிரச்னை இருந்து கொண்டுதான் இருக்கின்றது. ஏன் இவர்களுக்கு எதிரான கொடுமைகள் எல்லாத் தரப்பிலிருந்தும் இருக்கின்றன.
ஆண்கள் பெண்களை தங்களின் இன்பத்திற்கு பயன்படுத்தும் பொருளாக பார்த்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், ஒரு பெண் தனக்கு மனைவியாகிவிட்டால், அவள் தனக்கு அடிமையாகிவிட்டது போன்ற மனநிலை பெரும்பாலான ஆண்களிடம் இருக்கின்றது.
இதுபோன்ற சிந்தனைகளை நாம் மாற்ற வேண்டும். பெண் என்பவள் தனக்கு மனைவியாகி வரும்பொழுது, தன்னுடைய பெற்ற வீட்டின் பழக்கங்களை விட்டு விட்டு, புதிதாக ஒரு வீட்டுக்கு குடியேறுகிறாள். அதுதான் கணவன் என்ற வீடு.
அந்த வீட்டிற்குள் வரும்பொழுது அனைத்துமே அவளுக்கு புதிதுதான். ஒரு மனைவி தன்னுடைய கணவனுக்கு எப்படி உரிமைகளில் கடமைப்பட்டுள்ளாளோ, அதைப்போன்று கணவன்மார்களும் பெண்களின் உரிமைகளில் கடமைப்பட்டுள்ளார்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும்.

நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக