Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 15 ஜனவரி, 2013

கோபத்தை அடக்குபவனே வீரன் - நபி மொழி


நாம் எதனால் கோபப்படுகிறோம்? ஒருவர் செய்வது நமக்கு பிடிக்கவில்லை என்பதால் தானே. அவர் செய்வது நமக்கு தவறு என்பது நமக்கு தெரிந்தவுடன் கோபம் வருகிறது. அல்லது நாம் எதிர்பார்ப்பதை மற்றவர்கள் செய்யவில்லை என்றவுடன் நமக்கு கோபம் வருகிறது. நமது உயிரினும் மேலான உத்தம நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது, கோபத்தை அடக்குபவனே சிறந்த வீரன் என்று. அப்படியென்றால், நாம் கோபத்ததை அடக்க முயற்சி செய்ய வேண்டாமா? இத்தகைய கோபத்தை செயல்முறையில் எப்படி அடக்குவது?

ஒரு குழந்தை சேட்டை செய்கிறது. நாம் முதலில் அதை ரசிக்கத்தான் செய்கிறோம். ஏன்? குழந்தையை நமக்கு பிடிக்கும். அதே விஷயத்தை ஒரு பெரிய ஆள் செய்தால் நமக்கு கோபம் வரும். ஏன்? ஒரு குழந்தையை பார்க்கும் போது நமக்குள் எழும் உள்ளுணர்வு ஒரு பெரிய ஆளை பார்க்கும் போது ஏற்படுவதில்லை. அந்த ஆளை ஒரு அந்நியனாக பார்க்கிறோம். எனவே அவர் செய்வதை நாம் ஏன் பொறுக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. எனவே கோபம் வருகிறது. நம்மால் பல நேரம் அதனை பல காரணங்களால் வெளிப்படுத்தவும் முடியவில்லை. அதனால் நாம் தேவையற்ற அழுத்தங்களுக்கும் உள்ளாகிறோம். கோபத்தை அடக்க இந்த உள்ளுணர்வை நாம் மாற்றுவதே முதல் படி. பெரியவர்களும் அறிந்தோ அறியாமலோ தவறு செய்யக்கூடியவர்கள் தான். நாமும் உட்பட. அல்லாஹ் தன் திருமறை திருக்குரானில் சொல்வது ஆதமின் மக்கள் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்களே. எனினும் அவர்களில் சிறந்தவர் யாரெனில் செய்த தவறில் இருந்து மனவருந்தி மீண்டவராகும். எனவே ஒருவர் செய்யும் அந்த தவறை மன்னிக்க வேண்டும். இந்த மனபக்குவம் வரவேண்டும் என்றால் நாம் ஒரு குழந்தையை பார்ப்பது போல், ஒரு குழந்தையை விரும்புவது போல் அனைத்து மக்களையும் விரும்ப வேண்டும். அனைவரும் நல்லவர்கள் என்று நாம் நினைக்க வேண்டும். தெலைகாட்சியில் வரும் நாடகம் மற்றும் திரைபடங்களை வைத்து பிற மனிதர்களை மதிப்பிடக்கூடாது. அதை தான் நமக்கு தீயது செய்பவர்களை விரும்பு, அவருக்கு நன்மை செய் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். ஒருவர் தவறு செய்யும் போது வெறுமனே பல்லை கடித்து கொண்டு கோபத்தை அடக்க தேவையில்லை. அது நம்மால் எப்பொழுதும் முடியவும் முடியாது. அனைவரையும் விரும்பினால் மட்டுமே மிக எளிதாக கோபத்தை அடக்க முடியும்.

இந்த அழகிய பண்பின் இன்னொரு முகமும் உள்ளது. ஒரு முஃமீன் - இறை நம்பிக்கையாளர் என்பவன் புத்திசாலியாகவே இருப்பான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். பொறுமை என்ற பெயரில் ஏமாறுபவன் ஒரு முஃமீனாக இருக்க முடியாது. எனவே நாம் முதலில் குறிப்பிட்டவாறு, பிறரின் தவறை மன்னித்தபின் அவர் எதற்காக அந்த தவறை செய்தார் என்பதை சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் அனைவருக்கும் சிந்திக்கும் ஆற்றலை கொடுத்துள்ளான். எனவே அனைவராலும் சிந்திக்க முடியும். நாம் அனைவரையும் விரும்பும் போது நாம் கோபத்தையும் மட்டும் கட்டுபடுத்த வில்லை. பதட்டத்தையும் சேர்த்து தான் கட்டுபடுத்துகிறோம். எங்கே நாம் அவனிடம் தோற்று போய் விடுவோமோ என்று எண்ணும் போது தானே பதட்டப்படுகிறோம். மாறாக சத்தியத்தை பேச வேண்டும். அது எதிரே நிற்பவன் கூறினாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் போது நாம் ஏன் பதட்டப்பட வேண்டும்? பிறரை விரும்பும் போது நம்மை போன்று அவர்களையும் சிந்திக்கும் போது நாம் கோபம், பதட்டம், பயம் என அனைத்தையும் விட்டு நீங்கி விடுகிறோம். இத்தகைய கோபத்தையும், பதட்டத்தையும் விட்டு நீங்கினால் தான் ஒருவர் ஏன் தவறு செய்கிறார் என்று சிந்திக்கும் ஆற்றலும் அவகாசமும் நமக்கு கிடைக்கும். அவ்வாறு நடந்த தவறுக்கான காரணத்தை புரிந்து கொண்ட பின்னர் சரியான உபதேசத்தை வழங்கவேண்டும். நபி(ஸல்) ஒவ்வொறு மனிதனுக்கும் தகுந்தாற் போல் உபதேசம் செய்தார்கள் என்றால் தன் முன் வந்து நிற்பவரை சரியாக புரிந்து வைத்திருந்தார்கள். ஆகவே தான் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரே விஷயத்தில் அவரவருக்கு தகுந்தாற் போல் வெவ்வேறு உபதேசங்களை செய்துள்ளர்கள். இப்படி சரியான உபதேசம் செய்யும் போது பெரும்பாலும் அனைவரும் தன்னை மாற்றிக்கொள்வார்கள். அதைத் தான் நாம் முன்னே குறிப்பிட்டவாறே மனிதர்கள் அனைவரும் நல்லவர்களே. இப்போது நமக்கு ஒரு கேள்வி எழும். அனைவரும் நல்லவர்கள் என்றால் ஏன் நித்தம் பல குற்றங்கள் நடைபெறுகிறது? நாம் ஆழமாக சிந்தித்தால், இத்தகைய குற்றங்கள் நடப்பதற்கு அந்த தனி நபர் மட்டுமே காரணமாக மாட்டார். மாறாக அவரை சுற்றியிருக்கும் சமூகமும், அவரது சூழ்நிலை போன்ற பல காரணங்கள் இருக்கிறது. அவரது இடத்தில் நாம் இருந்திருந்தால்.... என்ன செய்திருப்போம் என்ற கேள்வியினை நமக்கு நாமே நீதமாக கேட்டு கொள்ள வேண்டும். மனிதர்கள் செய்யும் சிறு தவறுகளை மன்னிக்க வேண்டும். அது அளவு கடந்து செல்லாத வரை. அப்படி அளவு கடந்து செல்லும் போது அவர் செய்யும் தீமையின் மீது தான் நமக்கு கோபம் வரவேண்டுமே தவிர அந்த நபர் மீது கோபம் வரக்கூடாது. இந்த எண்ணத்தில் மக்களை அணுகுபவர்கள் இயல்பாகவே பயத்தை விட்டு நீங்கியவராக ஆகிவிடுகிறார். இதைத்தான் நபி(ஸல்) அவர்கள் கோபத்தை அடக்குபவனே சிறந்த வீரன் என்று கூறினார்கள். இத்தகைய தகுதியை வளர்த்து கொள்பவர் இயல்பாகவே புத்திசாலியாகவும் மாறிவிடுகிறார். அல்லாஹ்விடம் இந்த அறிவை பெற இறைஞ்சி கேட்பவர்களுக்கு இத்தகைய வாய்ப்புகளை மனிதனுக்கு ஏற்படுத்தி கொடுக்கிறான். மறுமையில் சிறந்த கூலியையும் கொடுக்கிறான். அதே சமயத்தில் இத்துனை முயற்சிகளுக்கு பின்பும் மாற்றாதவர்கள் மீது கோபப்படுவதில் என்ன தவறு? இந்த சிந்தித்து கோபப்படும் நிலையை அடைந்தவன் கோபப்படுகிறான் என்றால் தவறு செய்தவனை திருத்துவதற்காக தானே தவிர இந்த நிலையிலும் அந்த தவறு செய்த மனிதனை வெறுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அப்படி கோபப்படும் பட்சத்தில் அவன் திருந்தாவிட்டாலும் குறைந்த பட்சம் நாம் ஏமாளியாகமல் இருப்போம்.

அன்புடன்
உன் சகோதரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக