Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 7 நவம்பர், 2014

பள்ளியில் பாஸ்… கல்லூரியில் ஃபெயில்: ஏன் இந்த நிலை?

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில், கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்பட்ட பருவத் தேர்வுகளின் முடிவுகள், நமது கல்விமுறை குறித்த பல கேள்விகளை எழுப்புகின்றன.
மொத்தம் 7.02 லட்சம் பேர் எழுதிய அந்தத் தேர்வில் 3.47 லட்சம் பேர் மட்டுமே தேர்வாகி உள்ளனர். இது வெறும் 49.49 சதவிகிதம் தான். பாதிக்குப் பாதி பேர் தேர்ச்சி பெறவில்லை. இது மிகவும் அதிர்ச்சி அளிப்பது ஒருபுறம் என்றால், இதற்கு நேர் எதிராக கடந்த சில ஆண்டுகளாக நமது பள்ளிக்கூட தேர்வு முடிவுகள் மேல்நோக்கியதாக இருக்கின்றன.
100க்கு 100 மதிப்பெண் எடுப்போரும், அதிக மதிப்பெண் எடுப்போரும் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளனர். தேர்ச்சி விகிதமும் வெகுவாக கூடியிருக்கிறது. ஆனால் அங்கிருந்து கல்லூரியில் வந்து சேரும் அதே மாணவர்கள், இங்கு மட்டும் தேர்வில் தோல்வி அடைவது ஏன்?
இந்தக் கேள்விக்கு இரண்டு கோணங்களில் விடை தேடலாம். ஒன்று, நமது பள்ளிக்கல்வியின் தேர்ச்சியை சந்தேகிப்பது. தனியார் பள்ளியாக இருந்தாலும், அரசுப் பள்ளியாக இருந்தாலும் தற்போது தமிழகப் பள்ளிகளைப் பொருத்தவரை கல்வியின் தரம் என்பது இரண்டாம் பட்சமாகி விட்டது. தேர்ச்சி அடைய வேண்டும், அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற இரண்டும்தான் அங்கு பிரதான நோக்கம். ஆகவே பிள்ளைகளை மனப்பாடம் செய்ய வைத்து மதிப்பெண் எடுக்க வைத்துவிடுகிறார்கள்.
அரசுப் பள்ளிகளின் நிலைமையோ இன்னும் மோசமாக உள்ளது. 8ஆம் வகுப்பு வரையிலும் ஃபெயில் போடக்கூடாது என்ற வாய்மொழி உத்தரவு அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டப் பிறகு, ‘எப்படி இருந்தாலும் பாஸ்தான். அப்புறம் என்ன பெரிய படிப்பு?’ என்ற எண்ணம் ஆசிரியர்களுக்கும் வந்துவிட்டது, மாணவர்களுக்கும் வந்துவிட்டது. இதனால் வகுப்பறையில் தரமான கல்வி என்ற எண்ணம் வேகமாக குறைந்து வருகிறது.
தேர்ச்சி விகிதத்தில் தனியார் பள்ளிகளுடன் போட்டிப் போட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அரசுப் பள்ளிகள், மாணவர்கள் தோல்வி அடைந்ததாக காட்டிக்கொள்வதை விரும்புவது இல்லை. இதனால் கட்டாய ‘ஆல் பாஸ்’ என்ற நிலை இருக்கிறது. இத்தகையப் பின்னணியில் 10 முதல் 12ஆம் வகுப்பு வரை தட்டுத் தடுமாறிப் படித்து கல்லூரிக்கு வரும் மாணவர்கள், அந்த புதிய உலகத்தைப் பார்த்து மிரண்டு போகின்றனர்.
பள்ளிக்கூடத்தைப் போல் அல்லாமல் இங்கு புரிந்துகொண்டு படிக்க வேண்டிய நிலை அவர்களுக்கு தொந்தரவாக இருக்கிறது. பயன்படுத்தப்படாமல் உறைந்துகிடக்கும் மூளையின் செல்கள் உயிர்ப்பெற்று எழுந்துவரும் அவஸ்தையை அனுபவிக்கிறார்கள். அத்தனை ஆண்டு காலம் ஒரு வகையான மனப்பாட கல்விக்குப் பழகிவிட்டு, திடீரென மாறுவதற்கு அவர்களால் இயலவில்லை. பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகித வீழ்ச்சியை இந்தக் கோணத்தில் இருந்து பார்ப்பது அவசியமாகிறது.
இரண்டாவது, கல்வியின் தரம் குறைந்தததற்கு பொறியியல் கல்லூரிகளின் பாத்திரம் என்ன என்பதையும் விவாதிக்க வேண்டும். மாநிலம் முழுக்க எக்கச்சக்க பொறியியல் கல்லூரிகள் நிறைந்துள்ள நிலையில், அவற்றின் தரம் மிகவும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
நமது கண்பார்க்க ஒரு பொட்டக்காட்டில் கட்டடம் எழுப்பி கல்லூரி என்று பெயர் வைக்கிறார்கள். அந்தப் பக்கமாக போய்வரும் பேருந்துகள், அந்தக் கல்லூரியின் பெயரைச் சொல்லி மாணவர்களை இறக்கி விடுகின்றன. அந்த பஸ் ஸ்டாப்பின் பெயர் ஓர் அடையாளம் ஆகிறது. அப்பகுதியின் ரியல் எஸ்டேட் விலை அதிகரிக்கிறது. மாணவர்களின் வருகையை கணக்கில்கொண்டு சில கடைகளும், விடுதி அறைகளும் முளைக்கின்றன. இவ்வாறாக புறச்சூழலின் சந்தை மதிப்பை அதிகரித்துக்கொள்ளும் பொறியியல் கல்லூரிகள், மாணவர்களுக்கு வழங்கும் கல்வியின் மதிப்பையும், தரத்தையும் மேம்படுத்துவதில் எந்த அக்கறையும் செலுத்துவது இல்லை. பல பொறியியல் கல்லூரிகளில் முறையான ஆய்வகங்கள் கூட இருப்பது இல்லை
இதுபோன்ற தரக்குறைவான கல்லூரிகளும், தங்கள் பங்குக்கு கல்வியின் தரத்தை கீழே இழுக்கின்றன. மொத்தத்தில் தமிழக மாணவர்களை சோதனைச் சாலை எலிகளைப் போல மாற்றி, பகடை ஆட்டம் ஆடுகின்றன கல்லூரிகளும், பள்ளிகளும். இதன் பாதிப்பு இப்போது தெரியாது. எதிர்காலத்தில்தான் தெரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக