ஒரு கதை உண்டு. ஒரு தம்பதி புதிதாக ஒரு வீட்டுக்குக் குடிபெயர்ந்தனர். ஜன்னல் வழியாகப் பக்கத்து வீட்டில் காயப்போட்டிருந்த துணிகளைப் பார்த்த மனைவி, "பக்கத்து வீட்டுக்காரிக்குத் துணிகளைச் சரியாகத் துவைக்கத் தெரியவில்லை. அழுக்கைச் சரியாக நீக்காமலேயே துவைத்திருக்கிறாள்’’ என்றாள். தினமும் அவள் இப்படி அடுத்த வீட்டில் உலரும் துணியைப் பார்ப்பதும், இப்படி விமர்சனம் செய்வதுமாகச் சில நாட்கள் கழிந்தன.
பிறகு ஒரு நாள் வழக்கம் போல, பக்கத்து வீட்டில் காயப் போட்டிருந்த துணிகளைப் பார்த்த அந்த இளம் மனைவிக்குப் பெரும் வியப்பு. “அ டடா, இன்று அந்தத் துணிகள் ரொம்ப சுத்தமாக இருக்கின்றன. இப்போதுதான் அவள் துவைப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டிருக்கிறாள்’’ என்றாள். அதற்கு அவள் கணவன் சொன்னது இதுதான்: “இன்று காலை முதன்முறையாக நம் வீட்டு ஜன்னலைத் துடைத்துச் சுத்தப்படுத்தினேன்’’.
பிறரை விமர்சிப்பதற்கு முன்னால், நம்மைப் பற்றி யோசிப்பது நல்லது என்பதை உணர்த்தும் கதை இது. அடுத்து நாம் பேசப் போகும் விஷயங்களுக்கும் இந்தக் கதைக்கும் தொடர்பிருக்கிறது. மின்சாரச் சேமிப்புக்கும் இந்தக் கதைக்கும் அப்படி என்ன தொடர்பு இருக்க முடியும்?
பகலில் டியூப்லைட்?
பலரும் பகலில்கூட வீட்டுக்குள் ஓரிரு அறைகளிலாவது டியூப்லைட்டைப் போட்டு வைப்பது உண்டு. வெளியே சூரியன் சுள்ளென்று காய்ந்துகொண்டிருக்கும். கேட்டால் “அறைக்குள் போதிய வெளிச்சம் இல்லையே. என்ன செய்வது?’’ என்பார்கள்.
வீட்டைக் கட்டும்போதே எல்லா அறைகளிலும் சூரிய ஒளி நுழையும் விதத்தில் கட்டப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். போதுமான அளவு ஜன்னல்களை அமையுங்கள். அவை சரியான கோணத்தில் அமைந்திருந்தால் வெளிச்சம் மட்டுமல்ல, காற்றும் சீராக வரும். அதன்மூலம் மின்விசிறிக் கட்டணத்தையும் குறைக்க முடியும், தென்றல் காற்றையும் சுகமாக அனுபவிக்க முடியும். ஏற்கெனவே கட்டிய கட்டடம் என்றாலும்கூட, அதிக இயற்கை வெளிச்சம் அறைக்குள் பாயும் வகையில் சில மாற்றங்களைச் செய்யலாம். கட்டட இன்ஜினீயரிடம் ஆலோசனை பெறுங்கள்.
ஜன்னல் சுத்தம்
ஜன்னல் கண்ணாடிகளின்மீது படியும் தூசியை அடிக்கடி துடைத்துச் சுத்தம் செய்யுங்கள். இல்லையென்றால் முழு வெளிச்சத்தையும் அறைக்குள் செல்ல விடாமல், ஜன்னலில் உள்ள தூசிப் படலம் தடுக்கும்.
அதுமட்டுமல்ல, ஜன்னலில் எந்த வகையான கண்ணாடி பொருத்தப்பட வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துங்கள். வண்ணக் கண்ணாடிகள், அடர்த்தியான மங்கலான வெள்ளைக் கண்ணாடிகள் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். தெளிவான கண்ணாடிகள் அதிக வெளிச்சத்தை உள்ளே அனுப்பும். மாலை 5.00 மணிக்கே விளக்குகளைப் போட வேண்டிய நிலையை, இது தவிர்க்கும்.
எந்தப் பெயின்ட்?
பெயின்டின் நிறம்கூட மின் கட்டணத்தை அதிகப்படுத்தும் அல்லது குறைக்கும் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை.
அழுத்தமான வண்ணங்களைச் சுவர்களுக்கு அடித்தால், தங்கள் மீது படும் ஒளியில் கணிசமான பகுதியை அவையே விழுங்கிக்கொண்டுவிடும். வெளிர்நிற வண்ணம் என்றால், அது வெளிச்சத்தை அதிகம் பிரதிபலிக்கும். எனவே, வெளிர்நிற வண்ணம் அடிக்கப்பட்ட சுவர்களைக்கொண்ட அறைக்கு, குறைவான மின்சக்தி கொண்ட பல்பே போதுமானதாக இருக்கும்.
மின்விசிறிகள்
மின்விசிறி தொடர்பாக எல்லோருக்கும் எழும் சந்தேகம் இது. மின்விசிறியின் வேகத்தைக் குறைத்தால், மின்சாரம் குறைவாகச் செலவாகுமா என்பதுதான். முன்பு புழக்கத்தில் அதிகமாக இருந்த ரெகுலேட்டர்களைப் பயன்படுத்தினால் (1,2,3,4,5, ON/OFF என்று எழுதப்பட்டிருக்குமே அந்த வகை) மின்விசிறியை எவ்வளவு வேகமாகச் சுழலவிட்டாலும், ஒரே அளவு மின்சாரம்தான் செலவழியும். இப்போது அதிகம் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்களைப் பொறுத்தவரையில், மின்விசிறியின் வேகத்துக்குத் தகுந்த மாதிரிதான் மின்சாரமும் செலவழியும். எலெக்ட்ரீஷியன் ஒருவர் தந்த தகவல் இது. எனவே, தேவைப்படும் அளவுக்கான வேகத்தில் மட்டுமே மின்விசிறியைச் சுழலவிடுவோம்.
நமது பழக்க வழக்கங்களையும் கொஞ்சம் மாற்றி கொள்ள வேண்டும். ஓர் அறைக்குள் நுழையும்போதே அங்குள்ள லைட், ஃபேன் ஆகிய இரண்டு சுவிட்சுகளையுமே ஆன் செய்யும் வழக்கம் பலருக்கு உண்டு. இதைத் தவிர்க்க வேண்டும். போதிய காற்றோட்டம் இருக்கும்போது, மின்விசிறி எதற்காகச் சுற்ற வேண்டும்? தவிர ஏ.சி. வேலை செய்யும்போது, மின்விசிறி அவசியமா?
அறையை விட்டு வெளியேறும்போது மின் சாதனங்களை ஆஃப் செய்ய வேண்டும் என்பதில் கட்டாயம் கவனம் செலுத்துங்கள்.
தேவை கவனம்
எந்த வகை மின்சாதனங்கள் அதிக மின்சாரத்தைச் செலவழிக்குமோ, அவற்றின்மீது அதிகக் கவனம் செலுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு நம் வீட்டிலுள்ள எல்லா மின்சாதனங்களும் இயங்குகின்றன என்று வைத்துக் கொள்வோம். அப்போது டியூப்லைட்டைவிட, குமிழ் பல்பு அதிக மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும்.
வழக்கமான குமிழ் பல்புகளைக் காட்டிலும் 10 மடங்கு அதிகமாக சி.எஃப்.எல் பல்புகள் நீடித்து உழைக்கின்றன. குறைந்த மின்சக்தியில் அதிக ஒளியைத் தருகின்றன. இப்போது எல்.இ.டி. விளக்குகளும்கூட குறைந்த மின் செலவில் பிரகாசமான வெளிச்சத்தைத் தருகின்றன. சிறிதளவு கூடுதல் பணத்தைச் செலவழித்தால், நீண்ட நாளைக்குப் பயன்தரும் இந்த விளக்குகளை வாங்கிவிடலாம்.
சி.எஃப்.எல் விளக்கைவிட மின்விசிறிக்குக் கொஞ்சம் அதிக மின்சாரம் தேவைப்படும். டி.வி. செட்டுக்கு இன்னும் அதிகம். ஃபிரிட்ஜ் மேலும் அதிக மின்சாரத்தைச் செலவழிக்கும். ஏ.சி., கீஸர் ஆகியவற்றுக்கு உச்சகட்ட மின்சாரம் அவசியம்.
அறைக்கு ஏற்ற ஏ.சி. மாடலைத் தேர்ந்தெடுங்கள். தானாக டீஃப்ராஸ்ட் ஆகும் ஃபிரிட்ஜ்களுக்கு அதிக மின்சாரம் தேவைப்படும். அடிக்கடி ஃபிரிட்ஜின் கதவைத் திறந்து மூடுவதால், வெப்பக் காற்று உள்ளே நுழையும். பொருள்களைக் குளிர்நிலையில் வைத்திருக்க அதிக மின்சாரம் தேவைப்படும்.
கூடுதல் புரிதலுக்கு...
மின்சாதனங்களை வாங்கும்போது அவற்றைப் பராமரிப்பது மற்றும் பயன்படுத்துவது தொடர்பாக ஒரு சிறு கையேட்டைக் கொடுப்பார்கள். பலரும் அதைப் பிரித்துப் பார்ப்பதுகூட இல்லை. அந்த வழிமுறைகளின்படி பராமரிக்கப்பட்டால், மின் செலவை நிறைய குறைக்க முடியும்.
எல்லாவற்றுக்கும் மேலாக வீட்டில் மின் இணைப்பு நன்றாக இருக்க வேண்டும். தரமற்ற ஒயர்கள், அல்லது மின் பாகங்கள் போன்றவற்றால் ஆபத்து அதிகம் என்பதுடன், மின் செலவும் அதிகமாக வாய்ப்பு உண்டு.
வீட்டிலுள்ள எல்லா மின் சுவிட்சுகளையும் ஆஃப் செய்துவிட்டு மின்சார மீட்டரைக் கொஞ்ச நேரம் கவனியுங்கள். அதிலுள்ள சக்கரம் அப்போதும் மெதுவாகச் சுற்றிக் கொண்டிருந்தால், வீட்டில் எங்கோ மின்சாரம் கசிகிறது என்று அர்த்தம். அல்லது உங்களுக்குத் தெரியாமல் உங்கள் பக்கத்துப் போர்ஷன்காரரோ, பக்கத்து வீட்டுக்காரரோ உங்கள் மின் இணைப்பிலிருந்து தன் வீட்டுக்குக் கனெக் ஷன் கொடுத்திருக்கிறார் என்று அர்த்தம். கவனித்துச் சரி செய்துகொள்ளுங்கள்.
இப்படி வீட்டைக் கட்டும்போது சில விஷயங்களில் கவனம் செலுத்தினாலும், வீட்டில் குடிபுகுந்த பின்பு கூடுதலாகச் சில விஷயங்களில் கவனம் செலுத்தினாலும் மின்சாரத்தைச் சேமித்து நாட்டுக்கு உதவலாம். மின் கட்டணத்தைக் குறைத்து நம்முடைய பட்ஜெட்டையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
ஜி.எஸ்.சுப்ரமணியன், எழுத்தாளர் தொடர்புக்கு: aruncharanya@gmail.com
நன்றி தமிழ்திஇந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக