தமிழக அரசின் ஏழை பெண்கள் திருமண உதவி திட்டத்தில் விண்ணப்பிக்க புதிய விதிமுறை கடைபிடிக்கப்படுவதால், பயனாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். தமிழக அரசு சார்பில், 10ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்த ஏழை பெண்களுக்கு, மூவலூர் ராமாமிர்த்த அம்மையார் திருமண உதவி திட்டத்தின் கீழ், திருமண நிதிஉதவி வழங்கப்படுகிறது. கடந்த 89ம் ஆண்டு, இத்திட்டம் தொடங்கப்பட்ட போது, ரூ.5,000 வழங்கப்பட்டது.
கடந்த 1996ம் ஆண்டு, திமுக ஆட்சியில், ரூ.15 ஆயிரமும், 2006ம் ஆண்டு, ரூ.20 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டது. தற்போதைய ஆட்சியில், இத்திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு, ரூ.50 ஆயிரம், 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. பயனாளிகள், இதற்கான விண்ணப்பங்களை, முன்பு சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்தில் பெற்று, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கினர்.
அதிகாரிகள், திருமணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பு, விசாரணை நடத்தி, தகுதியானவர்களுக்கு உதவி தொகை வழங்கினர். இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, மண்டல அலுவலகங்களில், திருமண உதவித் தொகை விண்ணப்பங்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு, மாநகராட்சி தலைமை அலுவலகமாகன ரிப்பன் மாளிகையில் மட்டுமே விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இதனால், ஏழை பெண்கள் நீண்ட தூரம் அலைவதுடன், கால விரயத்தால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, இத்திட்டத்தில் விண்ணப்பிக்க புதிய விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. அதில், பயனாளிகள் முதலில், ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பின்னர், அதற்கான ரசீதை கொண்டு வந்து, ரிப்பன் மாளிகை கட்டிடத்தில் உள்ள அலுவலரிடம் கொடுக்க வேண்டும். மீண்டும் அலுவலர் கொடுக்கும் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதன் பின்னர், விசாரணை நடத்தி திருமண உதவி தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்போது, அதில் மணமகன், மணமகள் போட்டோ, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, கல்வி சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், பெற்றோர்களின் படம் உள்பட ஆவணங்களை ஸ்கேன் செய்து இணைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, விண்ணப்பிக்க குறைந்தது ஒன்றரை மணிநேரம் ஆகிறது. இதனால், ரூ.800 முதல் ரூ.1500 வரை இன்டர்நெட் சென்டருக்கு கொடுக்க வேண்டியுள்ளது.
மேலும், ஆன்லைனில் பதிவு செய்ததற்கான ரசீதை ரிப்பன் மாளிகையில் உள்ள அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். அவர் மீண்டும் ஒரு விண்ணப்பம் தருவார். அந்த விண்ணப்பத்தில் மீண்டும், மேற்கண்ட ஆவணங்களை இணைத்து கொடுக்க வேண்டும். அதிலும் திருமணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பு கொடுக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிடுகின்றனர். இதனால், ஏழை பெண்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
குறிப்பாக வடசென்னையில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் கூலி தொழிலாளிகளும், நடுத்தர மக்களாக உள்ளனர். திருமணத்தை குறைந்தது ஒரு மாதம் முதல் 3 மாதத்துக்குள் முடிக்க திட்டமிடுகின்றனர். இதனால், திருமண பணிகளுக்கு இடையே, ஆன்லைனிலும், பின்னர் ரிப்பன் கட்டிடத்துக்கும் சென்று விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதற்கு முன்னர், திருமணத்துக்கு முன், 15 நாட்கள் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம் என்றிருந்தது.
ஆனால், தற்போது ஒரு மாதத்துக்கு குறைவாக இருந்தால், மக்கள் விரட்டியடிக்கப்படுகின்றனர். எனவே, இத்திட்டத்தில் விண்ணப்பிக்க, ஆன்லைன் மூலம் அல்லது நேரடி விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்வது என ஏதாவது ஒரு முறையை கடைபிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக