பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா?
நம்முடைய இஸ்லாமிய மார்க்கமானது இரண்டு விஷயங்களை அடிப்படையாக கொண்டது.
நபி(ஸல்) அவர்கள் கூறுவதாவது.
”உங்களிடம் நான் இரண்டை விட்டுச் செல்கிறேன். அதை நீங்கள் பின்பற்றும் காலமெல்லாம் வழிதவறமாட்டீர்கள். (அவை) அல்லாஹ்வின் வேதமும், என்னுடைய (சுன்னத்) வழிமுறையுமாகும். அறிவிப்பவர் : இமாம் மாலிக் நூல்-முஅத்தா..
இரண்டாவதாக கூறப்பட்ட நபி(ஸல்) அவர்களின் (சுன்னத்) வழிமுறைநடைமுறை விஷயம்தான், பெண்கள் பள்ளிவாசலுக்குச் வந்து அல்லாஹ்வை வணக்கி வழிபடுவதுவாகும். இதற்கு நபி(ஸல்) அவர்கள் அணுமதியளித்துள்ளவிஷயங்களை காண்போம்.
நபி(ஸல்) அவர்கள், இஷாவை ஒருநாள் தாமதப்படுத்தினார்கள் ‘பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்.’ என்று உமர்(ரழி) அவர்கள் கூறியதும், நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள்.அறிவிப்பவர் : ஆயிஷா(ரழி). புகாரி : 864.
இந்த ஹதீஸிலிருந்து பெண்கள் தம் குழந்தைகளுடன் பள்ளிவாசலுக்கு இஷா தொழவந்தார்கள் எனவும், நபியவர்களின்வருகை தாமதித்த வேளையில் வந்திருந்த பெண்களும், குழந்தைகளும் உறங்கிவிட்டார்கள் என்பதும் அறியமுடிகிறது.
அதாவது, நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில், பெண்கள் பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக வந்துள்ளார்கள் என்பது உறுதியாகிறது. மேலும், பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதை நபியவர்களும், உமர்(ரழி) போன்ற நபி தோழர்களும் அறிந்து, அதற்கேற்றபடி பெண்களின் பேரில் கவனம் கொண்டவர்களாக இருந்திருக்கின்றார்கள்.
ஆனால், இன்று பெண்கள் பள்ளிவாசலுக்கு வரும் சுன்னத்தான இச்செயல் பரவலாக நடைமுறையில் இருக்கின்றதா என்று பார்த்தால்,’இல்லை’ என்றுதான் சொல்லவேண்டும். சில பள்ளிவாசல்களைத் தவிர, பெரும்பாலானபள்ளிவாசல்களில் பெண்களின் வருகை மறுக்கப்பட்டு வருகிறது. மேலும், பெண்களை பள்ளிவாசலுக்கு வருவதை தடுக்கக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள், பெண்களை’தர்கா’க்களுக்கு செல்லுவதை பிரியமாக அனுமதிக்கின்றார்கள். இன்னும், சினிமா தியேட்டர்களுக்கு குடும்ப சகிதமாக சென்று வருவதைஅனுமதித்து, இதை பகிரங்கமான அன்னிய ஆண்களிடமும், நண்பர்களிடமும் பேசி மகிழ்கின்றார்கள். இப்படி தர்காவுக்கும் அனாச்சாரக்கூடங்களுக்கும் பிரவேசிக்கும் பெண்களின் செயலை இவர்கள் தவறாக கருதுவதாக தெரியவில்லை. ஆக இவர்கள், இஸ்லாம் எதை அனுமதித்துள்ளதோ அதை தடுக்கின்றார்கள்; எதை இஸ்லாம் தடுக்துள்ளதோ அதனை அனுமதிக்கின்றார்கள் என்பது தெளிவாகிறது.
இதைப்பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறுவதாவது.
”ஒன்றை செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்திருந்தால் அதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். ஒன்றை உங்களுக்கு நான் கட்டளையிட்டால் முடிந்த அளவுக்கு செய்யுங்கள்.”
அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரழி).புகாரி: 7288.
இஸ்லாமியர் என்று நம்மை கூறிக்கொள்ளும் நாம், இவைகளை சிந்திக்க வேண்டாமா? குறிப்பாக, நமது பெண்கள் சிந்தனை பெறவேண்டாமா?
நபி(ஸல்) அவர்கள் காட்டியுள்ள ஏராளமான வழிகாட்டுதல்களில், பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவது குறித்தநபிமொழிகளிலிருந்து ஆதாரங்களைஇங்கு பார்ப்பொம்.
நபி(ஸல்) அவர்கள் கூறுவது,
”உங்களது மனைவியர் பள்ளிவாசல் செல்ல அனுமதி கேட்டால், அதை மறுக்கவேண்டாம்.” புகாரி : 873.
”உங்களிடம் இரவில் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்ல அனுமதி கேட்டால், அவர்களுக்கு அனுமதி வழங்குங்கள்’. புகாரி : 865.
உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்கு செல்ல அனுமதி கேட்டால் அவர்களை தடுக்காதீர்கள்.” புகாரி : 5238.
இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டியிருக்க அதை மக்களுக்கு மறைப்பதும், மறுப்பதும், தடுப்பதும், நபி(ஸல்) அவர்களை எதிர்க்கும் செயலாகாதா? எதிர்க்கும் செயலை நியாயம்என்பதா? சிந்தியுங்கள். சகோதரிகளே உங்கள் உரிமை பரிபோவதை சிந்தியுங்கள்.
இன்றைய காலத்தில், நாம் ஒவ்வொருவரும் தமக்கிருக்கும் பொருளாதாரதகுதியைவிட மேலானதாகவும், தேவைகளைவிட அதிகமானதாகவும் ஆடைகள் வைத்திருக்கின்றோம். ஆடைகளில் மேலாடை, கீழ் ஆடை, உள்ளாடை என்றுபலவித ஆடைகளுக்கு மேல் போர்த்திக்கொள்ள இன்னொரு ஆடை என்கிற அளவுக்கு நமது வாழ்வின் தரம் நாகரீகம் உயர்ந்துள்ளது. ஆனால், நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் போதிய ஆடைகளில்லாமல் வேஷ்டியை மட்டும் தம் கழுத்திலிருந்து கட்டியிருந்தார்கள். இப்படிப்பட்ட ஆடை அணித்தவர்களாக ஆண்களும், பெண்களும் பள்ளிவாசலில் தொழ நிற்கையில், ஆண்களுக்குப் பின் தொடர்ந்து பின்வரிசையில் பெண்கள் தொழுதார்கள். மக்கள் குறைந்த ஆடையுடன் இருக்கும் சந்தர்பத்தை காரணம் காட்டி பெண்களை தொழுகைக்கு வரவேண்டாம் என்று ஒருபோதும் நபி(ஸல்) அவர்கள் சொல்லவில்லை. மாறாக, நபி(ஸல்) அவர்கள் பெண்களை பார்த்து கூறியதாவது.
”ஆண்கள் சுஜூதிலிருந்து எழுந்து அமர்வது வரை நீங்கள் உங்கள் தலையை சுஜூதிலிருந்து உயர்த்த வேண்டாம்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஅது. புகாரி: 362.
அதாவது ஆண்களின் ஆடை குறைவால் சுஜூதில் ஆண்களின் மறைவிடங்கள் முழுமையாக மறைக்கப் படாமலிருக்க வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்த நபியவர்கள், ஆண்களுக்குப் பின் தொழும் பெண்களை சுஜூதிலிருந்து தாமதித்து எழவைத்து பெண்களது பார்வைகளை மாற்றினார்கள். ஆடை குறைவை காரணம் காட்டி, பெண்களை வீட்டில் தொழுமாறு கட்டளையிடவில்லை. பெண்களை பள்ளிவாசலுக்கு வருவதை அனுமதித்துள்ளார்கள் என்று தெளிவாக அறியமுடிகிறது.
இன்னும், அறிவது, ஆண்களுக்குப் பின் வரிசையில் தொழும் பெண்களுக்கும் இடையில் திரையிடச் சொல்லி நபியவர்கள் கட்டளையிடவில்லை. நம்முடைய காலத்தில், அல்லாஹ் அருளிய பொருளாதாரத்தின் மேண்மையால், நாம் வசதியுடன் வாழ்கின்றொம். ஆடையாலும், இடவசதியாலும் மேம்பட்ட நாம், நமது பள்ளிவாசலில் பெண்களுக்கு தனி இடம் கொடுத்து அனுமதிக்கலாமே!
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாவது.
”நான் தொழுகையை நீட்டும் எண்ணத்துடன் தொழுகையில் நின்றேன். அப்போது குழ்ந்தையின் அழுகுரல் கேட்டதும் அந்த குழந்தையின் தாய்க்கு சிரமம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக என் தொழுகையை சுருக்கிக் கொண்டேன்.”
அறிவிப்பவர் : அபூகத்தாதா அல் அன்சாரி(ரழி). புகாரி: 868
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் பள்ளிவாசலுக்கு தொழவந்தார்கள் என்பதை அறிந்திருந்த நபி(ஸல்) அவர்கள், தாய்மார்களைப் பார்த்து கைகுழந்தையுடன் பள்ளிவாசலுக்கு தொழ வந்ததை கண்டிக்காமலும், தடுக்காமலும் இருந்திருக்கின்றார்கள். மெலும், தாய்மார்களின் வருகையை ஊக்கப்படுத்தும் விதமாக தம் தொழுகையைசுருக்கி தொழவைத்தார்கள். தாய்மார்களே தெளிவு பெறுவீராக! இன்னும், ஃபஜிர் தொழுகையில் பெண்கள் கலந்து கொண்டது பற்றிய செய்தியை பார்ப்போம்.
”நபி(ஸல்) அவர்கள் ஃபஜிர் தொழுகையை இருட்டில் தொழுவார்கள். மூமினான பெண்கள் இல்லம் திரும்புவார்கள். இருட்டின் காரணத்தால் அவர்கள் யாரென அறியப்படமாட்டர்கள். அவர்கள் ஒருவர் மற்றொருவரை அறியமாட்டார்கள்.”
அறிவிப்பவர் : ஆயிசா (ரழி). புகாரி: 872.
இருட்டில் ஆண்களும், பெண்களும் ஒருவேளை கலந்து விடுவார்கள் என்ற அச்சம் பெற்றவராக நபியவர்கள், பெண்களை பள்ளிவாசலுக்கு வருவதை தடுக்கவில்லை. மாறாக, அழகிய யோசனையாக, தொழுகை முடிந்ததும் பெண்கள் பள்ளிவாசலை விட்டு வெளியேறியதும், பின்னர் ஆண்கள் செல்லும்படி செய்துள்ளார்கள்.
அறிவிப்பவர் : உம்மு சலமா (ரழி). புகாரி: 837.
தொழுகையில் இமாம் மறதியின் காரணத்தால் தவறு ஏற்படுகையில், பின் தொடர்ந்து தொழுபவர்கள் செய்யவேண்டியவைகளைப் பற்றி புகாரியில் இடம்பெற்ற ஒரு ஹதீஸை காண்போம்.
இமாம் மறந்து விட்டால், இமாமுக்கு நினைவூட்ட ‘தஸ்பீஹ் கூறுதல் ஆண்களுக்கும், கைதட்டுதல் பெண்களுக்கும் உரியதாகும்’.
அறிவிப்பவர் : அபூஹூரைரா(ரழி). புகாரி: 1203.
இந்த செய்திகளின் மூலம், பெண்கள் பள்ளிவாசலில் தொழு அனுமதி வழங்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், இமாமுக்கு உதவி செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவு. தாய்மார்களே தெளிவு பெறுங்கள்.
மேற்கண்ட பல்வேறு அறிவிப்பிலிருந்து பெண்கள் பள்ளிவாசல் வந்து தொழலாம் என்று தெரிகிறது. அதே நேரத்தில் பெண்கள் பள்ளிவாசல் வரும்போது கடைபிடிக்க வேண்டிய சில கட்டுப்பாடுகளைப் பற்றிய பல அறிவிப்புகள் உள்ளன. பள்ளிவாசல் வருகையின் போது பெண்கள் நறுமணம் பூசிக்கொள்ளுவதும், அலங்கரித்துக் கொள்ளுவதும், சலங்கை ஒலி எழுப்புதலும் தடை செய்யப்பட்டுள்ளது. சுருங்கக்கூறின், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இருந்தால் மாத்திரமே பள்ளிவாசலுக்கு அவர்களை அனுமதிக்க வேண்டும். பெண்களாக சுய கட்டுப்பாடு இல்லாதபோது அல்லது பாதுகாப்பு அளிக்க இயலாத நிலை, இப்படிப்பட்ட சூழ்நிலைகளிருப்பின் பெண்கள் தத்தமது இல்லங்களில் தொழுதுக்கொள்வது மேலானதாகும். உம்மு ஹுமைது அஸ்ஸா இதிய்ய(ரழி) அவர்கள் அறிவித்துள்ள ஒரு ஹதீஸு அஹமது தப்ரானியில் இடம் பெற்றது,பள்ளிவாசலில் நீ தொழுவதை விட வீட்டில் தொழுவதே மேல்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், என்பதாகும்.
நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஜும்ஆ தொழுகைகள், மழைத் தொழுகைகள் (புகாரி:1029), கிரகணத்தொழுகைகள் (புகாரி:1235), பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருப்பது (புகாரி:309, 310, 311) போன்ற அனைத்து வணக்கங்களிலும் பெண்கள் கலந்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.
இவையனைத்துக்கும் கிரீடம் சூட்டுவது போல நபி இப்ராஹீம்(அலை) அவர்களால் கட்டப்பட்ட ஆலயமான காஃபத்துல்லாஹ்மக்காவில், தடைகளோ, கருத்து வேறுபாடோ எதுவும் யாருக்கும் இருந்ததில்லை.
அதைபோலத்தான், இறையச்சத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட அல்லாஹுடைய எல்லா பள்ளிவாசல்களிலும் பெண்கள் தொழுதுக்கொள்ளலாம். அவ்வாறு பெண்கள் பள்ளிவாசலில் தொழுவதற்கு எந்த தடையும் கிடையாது என்பதை பல ஹதீஸுகளிலிருந்து அறிந்ததோடு இல்லாமல், நாம் புனித மக்காவின் பைதுல்லாஹ்விலும், மதீனாவிலிருக்கும் மஸ்ஜித் நபவி பள்ளியிலும் நடைமுறையிலிருப்பதை கண்கூடாக கண்டு விளங்கிக் கொள்ளவேண்டும்.
எனவே, நபி(ஸல்) அவர்களின் சுன்னத்துகளை பேணும் விதமாக பெண்களை பள்ளிவாசலுக்கு அனுமதிக்க வேண்டும். வசதிகள் இல்லாத பள்ளிவாசல்களில் பெண்களுக்கு வசதி செய்து தரவேண்டும்.குறைந்த பட்சம், ஜும்ஆ போன்ற தொழுகைக்களுக்காவது வசதி செய்து தரவேண்டும்.
அல்லாஹ்வின்அருட்கொடையால், பெண் தாஃயீக்கள் பலர் நம்மிடையே உருவாகியுள்ளார்கள்.அவர்களைபயன் படுத்திக்கொண்டு, தொழுகைக்கு வரும் பெண்களிடயே மார்க்க விஷயங்களை பரப்பிட பள்ளிவாசலை பயன் படுத்திக்கொள்ளுங்கள்.வருங்கால சந்ததியை உருவாக்கும் தாய்மார்கள் வந்து போகும் பள்ளிவாசலில் நூலகம் அமைத்து, நல்ல சந்ததி உருவாக்க பெண்களுக்கு ஊக்கமளியுங்கள்.இன்னும் பல இபாதத்துகளுக்கு பள்ளிவாசலை பெண்களுக்கு திறந்துவிடுங்கள்.
மாறாக, எப்படியாகிலும் பெண்கள் பள்ளிவாசல் வருவதை தடுத்து விடவேண்டும் என்று கருத்துக்கு ஆதரவு திரட்டும் வண்ணம் பெண்களின் ஹிஜாப் ஆடை விளக்க ஹதீஸுகளையும், மஹ்ரம் விளக்க ஹதீஸுகளையும் முன்வைத்து பேசாதீர்கள். இன்னும், ’பெண்களில் அதிமானோரை நரகத்தில் கண்டேன்’ என்ற நபி(ஸல்) அவர்களின் சொல் ஒன்றை மையமாக வைத்து பெண்களை இழிவு படுத்தி, பெண்களை ’பாவி’களாக வருணித்து, பாவிகள் பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என்றும் விளக்கமளிக்காதீர்கள். இப்படிப்பட்ட பரப்புரையின் மூலம் நஷ்டமடைவதும், இழிவுபடுத்தப்படுவதும் பெண்களைத்தான்.இதை நம்மைப்பெற்ற தாய்மார்கள், சகோதரிமார்கள், மனைவிமார்கள் புரிந்திட வேண்டும். மஹ்ரமையும், ஹிஜாபையும் பள்ளிவாசல் விஷயத்தில் சுட்டிக் காட்டும் அறிஞர்கள், வேற்று ஆடவருடன் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் நம் சகோதரிகளை தடுத்ததுண்டா?.பேருந்து பயணத்தில் உங்கள் தாய்மார்களை இடியில்லாமல் உங்களால் அழைத்துச்செல்ல முடியுமா? விசுவாசிகளே! உண்மைகளை விளங்கி, தெளிவு பெற்றவர்களாக பெண்களை பள்ளிவாசலுக்கு அனுமதியுங்கள்.பெண்களை தடுக்காதீர்கள்.
குர்ஆனையும், நபிவழி சுன்னத்தையும் பின்பற்றுவதால், நாம் வழிதவறவே மாட்டோம்.இன்ஷா அல்லாஹ், நமது நல்ல பல அமல்களால் இறைவனிடம் அதிக நன்மைகளை பெறுவோம் என்பதில் யாதொரு சந்தேகமுமில்லை.அல்லாஹ் அக்பர்.
மின்னஞ்சல் மூலமாக
Asalamu alaikum
பதிலளிநீக்குபெண்களாக சுய கட்டுப்பாடு இல்லா , பாதுகாப்பு அளிக்க இயலாத நிலை, இப்படிப்பட்ட சூழ்நிலை பெண்கள் தத்தமது இல்லங்களில் தொழுதுக்கொள்வது மேலானதாகும். உம்மு ஹுமைது அஸ்ஸா இதிய்ய(ரழி) அவர்கள் அறிவித்துள்ள ஒரு ஹதீஸு அஹமது தப்ரானியில் இடம் பெற்றது,பள்ளிவாசலில் நீ தொழுவதை விட வீட்டில் தொழுவதே மேல்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், என்பதாகும்
ONE IS PERMISSION AND ANOTHER ONE IS BEST ,WHICH ONE YOU WILL CHOOSE.DEFINATLLY BEST.
SO NO ONE CAN STOP LADIES TO PRAY IN MASJID. BUT THATS IS NOT BEST, MOHD(SAL) SAID" BEST TO PRAY IN YOUR NEARBY MASJID,EVEN THAT BEST TO PRAY IN YOUR HOME , EVEN THAT BEST TO PRAY IN YOUR ROOM.