கடந்த சில ஆண்டுகளாக இந்திய உயர்கல்வியானது, பல மாற்றங்களுக்கு உட்பட்டு வருகிறது. பாரம்பரிய அமைப்பு முறையிலிருந்து, தனியார் பங்களிப்பில் தொடங்கி, வெளிநாட்டு பல்கலைகள் உள்ளே நுழைவது வரை, இந்த மாற்றமானது, பல நிலைகளைக் கொண்டது. இந்த மாற்றம் வெகு வேகமாக நடந்து வருகிறது.
அதேசமயத்தில், இத்தகைய மாற்றங்களின் மீது விமர்சனங்களும் எழுகின்றன. நாள்தோறும் பெருகிவரும் பல தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம், கட்டமைப்பு வசதிகள், அவை வழங்கும் படிப்புகளின் தரநிலைகள் ஆகியவைப் பற்றியும், அத்தகைய கல்வி நிறுவனங்களால், கல்வியானது முற்றிலும் வணிகமயமாய் மாற்றப்படுவதும் குறித்து பல விமர்சனங்கள் உள்ளன.
இந்த வகையில் உயர்கல்வியை பரப்புவதில் பல சவால்கள் உள்ளன. நவீன, தொடர்புடைய மற்றும் சமகாலத்திய பாடத்திட்டத்தை மேம்படுத்தல், தரத்தை மதிப்பிடுவது, ஏற்றுக்கொள்ளும் நெறிமுறைகள், கொள்கைகள் மற்றும் நிர்வாகக் கூறுகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல சவால்கள் உள்ளன.
கல்விக்கான முதலீடு
சிறந்த அமைப்பு ரீதியான கல்வியின் மூலம், தொழில்நுட்பம் மற்றும் அறிவு ஆகியவற்றை ஒரு சமூகம் பெறுவதே, அதன் மேம்பாட்டிற்கான வழியாகும். கல்வித்துறையில் போதுமான முதலீடு இல்லாமல் போவதானது, ஒரு சமூகத்தின் பெரும் பின்னடைவுக்கு காரணமாக ஆகிவிடுகிறது. இந்த நூற்றாண்டில், அபரிமித தொழில்நுட்ப வளர்ச்சியினால், சமூகத்தின் வாழ்க்கை முறையே மாறிவிட்டது. அறிவின் விஸ்தாரம், அடைத்துவைக்க முடியாதவாறு, நாடுகளின் எல்லைகளுக்குள் முடங்காமல், தங்குதடையின்றி பரவிக் கொண்டுள்ளது.
இன்றைய நிலையில், கல்விக்காக ஒருவர் வெளிநாடு செல்வது மட்டுமே வழக்கமான ஒன்றாக இருக்கவில்லை, மாறாக, கல்வியே எல்லை கடந்து சென்று கொண்டிருப்பதும் வழக்கமான ஒன்றாக இருக்கிறது. கடல் கடந்த வளாகங்கள் மற்றும் இணைப்புகள் என்பதன் மூலம், வெளிநாட்டு பல்கலைகள், இந்தியாவிற்கு வரத் துவங்கியுள்ளன.
சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படும் நபர்களாக நமது பட்டதாரிகள் உருவாக, உயர்கல்வியில் அதிகளவு முதலீடு தேவைப்படுகிறது. அதேசமயம், இந்தியாவில், உயர்கல்வியை சர்வசேதமயப்படுத்துவது இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது என்று கூறலாம்.
வெளிநாட்டு பல்கலைகள் இந்தியாவில் நிறுவப்படுவதில் இருக்கும் சில நடைமுறை ஆபத்துகளாக கீழ்கண்டவை தெரிவிக்கப்படுகின்றன,
* அதிகளவிலான கட்டணம்
* சரியற்ற படிப்புகள்
* சேர்க்கை முறையில் நடைபெறக்கூடிய ஊழல்கள்
* கொள்கைகள் மற்றும் செயல்படுவதில் ஏற்படும் வேறுபாடுகள்
போன்றவை.
மாணவர் சேர்க்கை வீழ்ச்சி
இந்தியாவைப் பொறுத்தவரை இருக்கும் ஒரு பெரிய சவால் என்னவெனில், உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதுதான். இந்தியா மக்கள்தொகையில் மட்டுமல்ல, பரப்பளவிலும் பெரிய நாடு என்பதை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. வளர்ந்த நாடுகளில் 85%க்கும் மேற்பட்டோர் உயர்கல்வியில் சேர்கிறார்கள் என்றால், இந்தியாவிலோ, அந்த எண்ணிக்கை வெறும் 12% என்ற அளவில் உள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது என்னவெனில், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கிறார்கள். அதேசமயம், உயர்கல்வி நிறுவனங்களோ, தங்களின் கவனத்தை நகர்ப்புறங்களில் மட்டுமே செலுத்துகின்றன.
ஊரகப் பகுதிகளில் வாழும் 65% மக்களின் உயர்கல்வித் தேவைகளை நிறைவுசெய்ய, வெறும் 20% கல்வி நிறுவனங்களே அப்பகுதிகளில் அமைந்துள்ளன. ஆனால், 30% முதல் 35% வரை மக்கள் தொகையைக் கொண்ட இந்திய நகர்ப்புறங்களில் அல்லது வளரும் நகரங்களில், 80% உயர்கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளது. இங்குதான் பிரச்சினையே!
தனியார் பல்கலை வளர்ச்சி
உயர்கல்விக்கான தேவை அதிகரித்து வரும் நிலையிலும், அரசு பல்கலைகளின் தரம் தொடர்ச்சியாக குறைந்து வருவதாலும், பல தனியார் உயர்கல்வி முதலீட்டாளர்களின் §வையை அதிகப்படுத்தியுள்ளது. ஆனால் தனியார் உயர்கல்வி மையங்களின் விதிமுறைகள், அவற்றின் வளர்ச்சி விகிதத்தை தக்கவைப்பதில் தவறிவிட்டன. இதன்மூலம், தரம் மற்றும் சமூக நலன் ஆகிவற்றைப் பற்றிய கவலைகள் ஏற்படுகின்றன.
சில தனியார் உயர்கல்வி நிறுவனங்களைப் பற்றி இங்கே காணலாம்,
* சிம்பயோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகம் - பூனே
இக்கல்வி நிறுவனத்தின் 4 வளாகங்களில், மொத்தம் 11,000 முழுநேர மாணவர்கள், 75 நாடுகளிலிருந்து வந்து படிக்கிறார்கள்.
* ஜேகே லக்ஷ்மிபத் பல்கலை - ஜெய்ப்பூர்
பல்வேறான துறைகளில், இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்கிவரும் இக்கல்வி நிறுவனம், தென்கொரியாவின் ஹன்யாங் பல்கலையுடன் கூட்டும் வைத்துள்ளது.
* அமிட்டி பல்கலை - நொய்டா
இங்கே, பி.எச்டி நிலைவரை, 80,000 மாணவர்கள் கற்கிறார்கள். 3500 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இந்தியாவில் 4 பல்கலைகளும், துபாய், சிங்கப்பூர், மொரீஷியஸ், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் மொத்தம் 6 வளாகங்களும் இப்பல்கலைக்கு உள்ளன.
* விஐடி - வேலூர்
இப்பல்கலை, தமிழ்நாட்டிலேயே, சிறந்த உள்கட்டமைப்பு வசதியோடு செயல்படும், ஒரு சிறந்த தொழில்நுட்ப பல்கலையாகும்.
இத்தகைய தனியார் உயர்கல்வி நிறுவனங்கள், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல வளாகங்களை அமைத்து, அதன்மூலம் மாணவர் சேர்க்கையை அதிகரித்து, உயர்கல்வி தேவையை நிறைவுசெய்யும் முயற்சியில் ஈடுபடுகின்றன.
2011ம் ஆண்டின் Ficci அறிக்கை இவ்வாறு கூறுகிறது, "இந்தியாவில் அதிகரித்து வரும் இளைஞர் எண்ணிக்கை, குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி, நடுத்தர வர்க்கத்தினர், தங்களுடைய பிள்ளைகளின் கல்விக்கு அதிகம் செலவுசெய்ய தயாராக இருப்பது போன்ற காரணிகள், உயர்கல்விக்கான தேவையை இந்நாட்டில் அதிகரித்துள்ளது."
தனியார் பல்கலைகளின் நோக்கமும் பங்களிப்பும்
இந்தியாவில், கல்வித்துறையில் தனியாரின் பங்களிப்பும், செல்வாக்கும், கடந்த 1991ம் ஆண்டில் நுழைக்கப்பட்ட தாராளமயமாக்கல் கொள்கைக்குப் பிறகுதான் வலுப்பெற்றன மற்றும் அதிகரித்தன. அதன்பிறகு, மேலாண்மை, பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற படிப்புகளின் முக்கியத்துவத்தில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டன.
கடந்த 2008ம் ஆண்டின்படி, நாட்டிலுள்ள 113 நிகர்நிலைப் பல்கலைகளில் 80 பல்கலைகள், தனியாரால் நிர்வகிக்கப்படுபவை. இவற்றில் பல, அரசின் கொள்கைகளின்படி உருவாக்கப்பட்டவை. இந்திய அரசைப் பொறுத்தவரை, தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற வரையறையை தெளிவாக வகுப்பதில் காலம் தாழ்த்தியே செயல்பட்டு வந்துள்ளது.
இந்தியாவில், உயர்கல்வியை நெறிப்படுத்தும் அமைப்பான யு.ஜி.சி, ஒரு புதிய விதியைஅறிவித்துள்ளது. அதன்படி, உலகில் முதல் 500 இடங்களுக்குள் வரும் சிறந்த பல்கலைகளுடன் மட்டுமே, இந்திய பல்கலைகள் கூட்டு வைத்து செயல்பட வேண்டும் என்பதாகும். மேலும், UGC அமைப்பால், A grade அளிக்கப்பட்ட இந்திய பல்கலைகள் மட்டுமே, முதல் 500 சிறந்த வெளிநாட்டு பல்கலைகளுடன் கூட்டு வைத்துக்கொள்ள முடியும் என்றும் யு.ஜி.சி விதிமுறைகள் கூறுகின்றன.
வெளிநாட்டு பல்கலைகள், இந்தியாவில் கிளை வளாகங்களை அமைப்பதற்கு அனுமதி கொடுக்கும் சட்டம், நாடாளுமன்றத்தில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
இந்தியாவின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்கள்
சில முக்கிய ரேங்கிங் சர்வேயின்படி, டெல்லி பல்கலைக்கழகம், பல்வேறான சிறப்பம்சங்களுக்காக, இந்தியாவின் முதல்தர பல்கலையாக வகைப்படுத்தப்படுகிறது. அதற்கடுத்து, பனாரஸ் இந்து பல்கலையும், கல்கத்தா பல்கலையும், ஜவஹர்லால் நேரு பல்கலையும் வருகின்றன.
அலிகார் முஸ்லீம் பல்கலை, ஒஸ்மானியா பல்கலை, சென்னை பல்கலை, அலகாபாத் பல்கலை, ஹைதராபாத் பல்கலை, ஜாமியா மிலியா இஸ்லாமியா, பாண்டிச்சேரி பல்கலை, மைசூர் பல்கலை, ஆந்திரா பல்கலை, மகாராஜா சயாஜிராவ் பல்கலை போன்றவை அடுத்தடுத்த இடங்களில் வருகின்றன.
மேலும், சர்வேக்களின்படி, கூடுதல் முக்கியத்துவம் பெற்ற கல்வி நிறுவனங்களில், குவஹாத்தி பல்கலை, ராஞ்சி பல்கலை, வடகிழக்கு மலையக பல்கலை மற்றும் மங்களூர் பல்கலை போன்றவை அடங்குகின்றன. அதேசமயத்தில், கொச்சின் பல்கலை, உத்கல் பல்கலை, பாட்னா பல்கலை, பெங்களூர் பல்கலை மற்றும் கேரளா பல்கலை போன்றவை தங்களின் முக்கியத்துவத்தை சற்று இழந்துள்ளன.
அரசு பல்கலைகளை தவிர்த்து பார்த்தால், டெல்லியின் குருகோபிந்த் சிங் இந்திரப்பிரஸ்தா பல்கலையானது, தனது வளாகங்களில் மற்றும் இணைப்பு கல்லூரிகள் மூலமாக வழங்கும் பரவலான படிப்புகள் மூலம் பிரபலமடைந்து விளங்குகிறது. இதன்மூலம், தரமான உயர்கல்வி நிறுவனங்களை நாடும் மாணவர்கள் மத்தியில், இப்பல்கலை பெயர்பெற்ற ஒன்றாக திகழ்கிறது.
தரம் தொடர்பான சிக்கல்கள்
உலக பொருளாதார தளங்களில் ஏற்படும் மாற்றங்கள், கல்வித் துறையையும், குறிப்பாக உயர்கல்வித்துறையையும் பாதிக்கின்றன. கல்வியின் விளைவு மற்றும் வேலை பெறுகின்ற திறன் ஆகிய 2 அம்சங்களிலும் தரம் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இன்றைய நிலையில், ஒரு வரைமுறைப்படுத்தப்பட்ட கல்வி அமைப்பிற்கான வியூகங்களை வகுக்கையில், மாணவர்கள், பெற்றோர்கள், எதிர்கால வேலைவாய்ப்பு நிறுவனங்கள், அரசு மற்றும் நிதியளிக்கும் நிறுவனங்கள் ஆகியோரின் நலன்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
பல்வேறு நிலைகளில் தரத்தை உறுதிசெய்வதானது, கல்வி நிறுவனங்கள் மற்றும் தேசிய ஏஜென்சிகள் ஆகிய இரண்டின் பொறுப்பிலும் உள்ளது. மாணவர்களின் சிறப்பான கல்வி நிலைய செயல்பாடானது, கல்வி நிறுவனங்களில், அவர்களுக்கு போதுமான சுதந்திரம் கொடுக்கப்படாததாலும், ஆராய்ச்சி மற்றும் இதர விஷயங்களில் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இல்லாததாலும் பாதிக்கப்படுகிறது. சரியான கல்விச் சூழல் அமையாததே இவற்றுக்கு காரணம்.
விதிமுறைகள் இல்லாமை
கடந்த 2005ம் ஆண்டு நாடாளுமன்றத்தில், தனியார் பல்கலைகள் நிறுவுதலை முறைப்படுத்தும் சட்டம் கொண்டுவரப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் மற்றும் பல தனியார்களின் எதிர்ப்பால் அச்சட்டம் கிடப்பில் போடப்பட்டது. தேசிய மற்றும் மாநில அளவில், தனியார் கல்வி நிறுவனங்களுக்கான நெறிமுறைகள் வலுவாக இல்லாதது, அவைகளின் தரம் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. மோசமான உள்கட்டமைப்பு, குறைவான மற்றும் போதுமான தகுதிகள் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் அபரிமித கட்டணம் போன்றவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளன.
உயர் தொழில்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் AICTE செயல்பாடுகளும், பல சமயங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகின்றன. உயர்கல்வியில் முறைகேடுகளை தடுக்கும் சட்டத்தை, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தாலும், இன்றைய நிலையில், நிலைமையை சரியாக்க, ஒரு சிறந்த வரைமுறை அமைப்பு தேவை என்பதே உண்மை.
இ-லேர்னிங்
உயர்கல்விக்குரிய போதுமான உள்ளகட்டமைப்பு மற்றும் ஆசிரியர்கள் இல்லாத இந்தசூழலில், ஒரு அருமையான மாற்று வழி இன்று உள்ளது. வகுப்பறை கற்பித்தலுக்கு மாற்றாக, தகவல் தொழில்நுட்ப புரட்சியின் உதவியால், இ-லேர்னிங் என்ற அம்சம் கிடைத்துள்ளது.
இம்முறையில், teleconferencing, email, audio conferencing, television lessions, radio broadcasts, interactive radio conselling, interactive voice response system போன்ற தொழில்நுட்ப அம்சங்களின் உதவியால், பூகோள மற்றும் அரசியல் எல்லைகளைக் கடந்து, உயர்கல்வியை அனைவரும் பெற முடியும். எனவே, இதுதொடர்பாக, அரசு விரிவான ஒரு முடிவை எடுக்க வேண்டியுள்ளது.
கல்வி வல்லரசு
"இந்தியா ஒரு கல்வி வல்லரசு" என்ற நிலையை அடைய, நாட்டிலுள்ள பட்டதாரிகளின் எண்ணிக்கையை, அடுத்த சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதன்விளைவாக, பல்கலைக்கு படிக்க செல்வோரின் எண்ணிக்கையை, தற்போது இருக்கும் 12% என்ற நிலையிலிருந்து, 2025ம் ஆண்டில் 30% என்ற இலக்கிற்கு உயர்த்த வேண்டியுள்ளது. இதன் விளைவாக நாட்டின் மாணவர் மக்கள் தொகை பன்மடங்கு பெருகும்.
-- தகவல் மின்னஞ்சல் மூலமாக
--
------------------------------ ------------------------------ --------
Mohamed Meeran . F.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக