Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்


மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்

புகழ் அனைத்தும் இறைவனுக்கே!

மறுமை நாள் கியாமத் நாள் நியாயத் தீர்ப்புநாள்.இப்படி முஸ்லிம்களிடம் அறியப்பட்டுள்ள-உலகம் அழிந்து மறு உலகம் என்று அறியப்பட்டுள்ள – நாள் பற்றியும், அதற்கு முன் ஏற்படும் அடையாளங்கள் பற்றியும் இங்கே தொகுத்து வழங்கி உள்ளேன்.

1400 ஆண்டுகளுக்கும் முன்பே இவை நடக்கும் என்று சிலவற்றைச் சொன்னார்கள் நபி (ஸல்) அவர்கள். அவர்கள் கூறிச்சென்ற அடையாளங்களில் பல நடந்து முடிந்து விட்டன. அவர்களின் முன்னறிவிப்பு நடந்ததிலிருந்து அவர்கள் ஒர் ' இறைத்தூதர் தான்' என்பது நிரூபணமாகி உள்ளது.

நடந்தது போக இனியும் நடக்கும் என அவர்கள் கூறியுள்ள சில அடையாளங்கள் நிச்சயம் நடந்தே தீரும். இதில் சந்தேகமே இல்லை. அவை நிகழ்ந்து முடிந்ததும் மறமை நாள் வந்து விடும்.

மறுமை நாளில் நல்லவன், தீயவன் யார்? யார்? என இறைவன் விளக்கி, சொர்க்கம், நரகம் யாருக்கு எனத் தீர்ப்பு வழங்குவான். அதுவே நிரந்தர வாழ்வும் கூட.

மறுமை வராது என்று நம்பவோர் ஒரு புறம், வருவதை நம்பினாலும் இப்போது வராது என்று நம்புவோர் ஒரு புறம் என, மறுமை பற்றிய சந்தேகிப்பேர் வழிகளுக்கு மறுமை வரும் அதற்கு முன் சில அடையாளங்கள் நிகழும் என்பதையே இந்த நூலில் விவரிக்கப்படுகிறது.

இந்த அடையாளங்கள் ஏற்படும் காலங்களில் நாம் வாழ நேரிடலாம், இயலாமலும் போகலாம். இந்த அடையாள நிகழ்வின் போது (ஈமானிய) இறை விசுவாசத்தில் குழப்பம் ஏற்படும் என்பதை அறிவதால், அக்காலத்தை அடையும் முஸ்லிம்கள் முழுமையான ஈமானுடன் மரணிக்க நாம் பிராத்திக்க வேண்டும்.

எல்லாவற்றையும் விட மறுமைக்கான அறுவடை நிலமாக இவ்வுலக வாழ்க்கை அடைந்திட வேண்டும். இதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

அன்புடன்

கே.எம்.முஹம்மது மைதீன் உலவி 


1-மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்

அல்லாஹ், வானவர், வேதம், நபிமார்கள், மறுமைநாள், விதி ஆகிய ஆறின் மீதும் முழுமையான நம்பிக்கை கொள்வது ஒவ்வொரு முஸ்லிம்; மீதுள்ள கடமையாகும். இதில் ஒன்றை நம்பி, ஒன்றை எற்க மறுத்தாலும் ஒருவன் இறை நம்பிக்கையாளனாக முடியாது.

இந்த ஆறின் மீதும் முழுமையான நம்பிக்கை உள்ள ஒருவனே இறை நம்பிக்கையானன் என்ற பெயர் பெறலாம். இஸ்லாம் எனும் வட்டத்திற்குள் இருக்கலாம். இதில் எந்த ஒன்றை மறுத்தாலும் அவன் 'இறை நம்பிக்கையாளன் இல்லை' என இஸ்லாம் அறிவிக்கிறது.

மக்காவில் வாழ்ந்த இணைவைப்போர், அல்லாஹ்வை நம்பி இருந்தனர். இறை மறுப்பாளர்கள், நரகத்திற்குரியவர்கள் என அறிவிக்கப்பட்ட அபூஜஹல், அபூலஹப், உத்பா, ஷைபா போன்றோர் 'அல்லாஹ்'வையும் கடவுள் என நம்பினர் என்பதை திருக்குர்ஆன் மூலமே நாம் அறியமுடிகிறது.

அவர்களைப் படைத்தது யார்? என அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்று தான் கூறுவார்கள்... (அல்குர்ஆன் 43:87)

வானங்களையும், பூமியையும் படைத்தது யார்? ஏன அவர்களிடம் நீர் கேட்டால், 'அல்லாஹ்' என்று தான் பதில் கூறுவார்கள்.. (அல்குர்ஆன் 31:25. 39:38)

வானங்களையும், பூமியையும் படைத்து, சந்திரனையும், சூரியனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால், 'அல்லாஹ்தான்' என பதில் கூறுவார்கள்.. (அல்குர்ஆன் 29:61).

வானிலிருந்து மழையைப் பொழியச் செய்து, காய்ந்த பூமியை உயிர்ப்பித்(து விளையச் செய்)தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்தான்' என்று பதில் கூறுவார்கள் .. (அல்குர்ஆன் 29:63).

அல்லாஹ்வை நம்பியிருந்தனர் மக்காவாசிகள். ஆனாலும் அவர்களில் பலர் 'இறை மறுப்பாளர்கள்' என அறிவிக்கபட்டனர். காரணம், அவர்கள் கொண்ட நம்பிக்கையில் உள்ள குறைபாடுதான். அல்லாஹ்வை நம்பினார்களே தவிர, அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்கக்கூடாது என்ற உண்மையை மறந்து விட்டனர். விளைவு! 'இறைமறுபாளர்கள்' 'நரகத்திற்குரியவர்' என்று அறிவிக்கப்பட்டனர். எனவே ஈமான் எனும் நம்பிக்கை முழுமை பெற்றதாக அமைய வேண்டும்.

நம்பிக்கை கொள்ளப்பட வேண்டிய 'மறுமைநாள்' பற்றிய எச்சரிக்கை திருமறைக் குர்ஆன் நெடுகிலும் உள்ளது. இறைமறுப்பாளர்கள், இணை வைப்பேர் இதை நம்பிக்கை கொள்வதில் குறை வைத்துவிட்டனர் என்பது பெரிய ஆச்சரியம் அல்ல. ஆனால் முஸ்லிம்களும் கூட இதில் முழு நம்பிக்கை இல்லாவர்களாக உள்னர் என்று கருதும் அளவுக்கே வாழ்கின்றனர்.

மறுமை நாள் மீதான நம்பிக்கை அவசியமானது. கட்டாயமானது என ஒரு சிலர் விளங்கி இருந்தாலும், அதற்காக தங்களை தயார் படுத்திக் கொள்வதும் இல்லை. 'எப்போதோ வரும் ஒன்று, இப்போதே நாம் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்?' என்ற எண்ணம் மேலோங்கியதே இதற்குக் காரணமாகும்.

ஒரு சிலர் இஸ்லாமியச் சட்டங்களை பின்பற்றுதில் அல்லது அதை நம்புவதில் முழு ஈடுபாட்டைக் காட்டினாலும், மறுமை நம்பிக்கை மீது மட்டும் ஏனோ தானோவென்றே உள்ளனர். இதனால் தங்களின் ஈமானை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

அல்லாஹ்வை நம்புங்கள் என்று வலியுறுத்திய நபி (ஸல்) அவர்கள் அதே அளவிற்கு 'மறுமையை நம்புங்கள்' என்றும் வலியுறுத்தினார்கள். 'இவ்வுலகத்துடன் நம் வாழ்வு முடிந்திடவில்லை, மரணத்திற்குப்பின் பின் இன்னுமொரு வாழ்வு உண்டு' என்ற உண்மையை நபி (ஸல்) அவர்கள் போதித்துக் கொண்டே இருந்தார்கள்.

2-இறந்த பின் வாழ்வா?

இந்த கேள்வி எவருக்கும் எழத்தான் செய்யும். இறந்து மண்ணோடு மண்ணாய்ப் போய் விடுகிறோம். சிலரோ இறந்தபின் எரியூட்டப்பட்டு சாம்பலாய் போய் விடுகின்றனர். ஆதி மனிதர் முதல், உலகம் அழியும் போது உள்ள மனிதர்கள் வரை மீண்டும் எழுப்புவது என்பது இயலாத காரியம் என்று தங்களுக்குத் தாங்களே விவாதம் செய்து கொள்கின்றனர்.

இன்னும் சிலர் இக்கேள்விக்கு பதில்காண இயலாமல், 'உலகிற்கு அழிவில்லை' என்று முடிவு செய்து விடுகின்றனர். ஒரு சில கடவுள் நம்பிக்கையாளர்கள், 'தங்களின் செயல்களில் நன்மைக்கான பயனையோ, தீயவைகக்களுக்கான தண்டனையையோ நாம் அடையத்தான் வேண்டும். ஆனால் இதற்காக 'மறுஉலகம்' என்று காத்திருக்க வேண்டியதில்லை. நாம் இறந்த பிறகும் பிறப்பு தொடரும். நல்லவனாக இருப்பின் நல்ல பிறவியாகவும், கெட்டவனாக இருப்பின் கெட்டப் பிறவியாகவும் பிறப்போம். இதுதான் தீர்வு என்று கூறி 'மறுபிறவி' தத்துவத்தை போதிக்கின்றனர்.

இதே மாதிரியான சந்தேகமும், கேள்வியும் நபி (ஸல்) அவர்களின் காலத்து மக்களுக்கும் இருந்தது என்பதை பின்வரும் வசனம் கூறுகிறது.

அவன்தான் வானங்களையும், பூமியையும், ஆறுநாட்களில் படைத்தான். அவனது அர்ஷ், தண்ணீர் மீதுள்ளது. உங்களில் எவர் நற்செயல் செய்வதில் சிறந்தவர்? என்பதை உங்களில் சோதிப்பதற்காக இவ்வாறு படைத்தான். மேலும் 'மரணத்திற்குப் பின் நீங்கள் எழுப்பபடுவீர்கள்' என நீர் கூறினால், 'இது தெளிவான சூன்யமே தவிர வேறில்லை' என இறைமறுப்பாளர்கள் கூறுகின்றனர் (அல்குர்ஆன் 11:7).

மேலும், அவர்கள் 'நாம் இறந்து விட்டோம். மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்டோம். இதன் பின்னரும் எழுப்பப்படுவோமா? நம்முன்னோர்களும் எழுப்பப்படுவார்களா? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் (அல்குர்ஆன் 56:47-48).
இறந்தபின்பும் வாழ்வுண்டு!

இறந்த பின் இனி வாழ்க்கை இல்லை என்போருக்கும், அல்லது மறுபிறவி தான் உண்டு புதிய வாழ்வு என்பதில்லை என்போருக்கும் பதில் கூறும் வகையில், 'இறந்தபின் மீண்டும் உயிர்ப்பித்து புதியதோர் வாழ்வுண்டு. அந்த வாழ்வின் நாளே நிரந்தரம். அந்த வாழ்வின் காலமே மறுமை நாளாகும்' என்று அல்லாஹ், மிகத் தெளிவாக அறிவிக்கிறான்.

மறுமை நாள் மீது சத்தியம் செய்கிறேன். நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.(மக்கிப்போய் விட்ட) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்க மாட்டோம் என மனிதன் எண்ணுகிறானா, அப்படி அல்ல! அவனின் விரல் நுனிகளையும் சரியாக அமைக்க நாம் ஆற்றல் உள்ளவர்கள் தாம்(அல்குர்ஆன் 75:1-4).

நிச்சயமாக முன்னோரும், பின்னோரும் குறிப்பிட்ட நாளில் ஒரு நேரத்தில் எல்லோரும் ஒன்று கூட்டப்படுவீர்கள் என, (நபியே) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 56:49-50).
3-மறுமை எப்போது வரும்?

'இறந்தபின் வாழ்வுண்டு' என்ற உண்மையை மக்களுக்கு எடுத்துக்கூறும் பணியில் தீவிரமாக இருந்த நபி (ஸல்) அவர்களிடம் அந்த மக்கள், 'மறுமை நாள் வரும் என்கிறீர்களே! அது எப்போது வரும்? என்றும் கேள்வி கேட்கத் துவங்கினர்.

(நபியோ) மறுமையின் நிகழ்வுநேரம் பற்றி உம்மிடம் அவர்கள் 'அது எப்போது வரும்?' என்று கேட்கிறார்கள். அந்த நேரம் பற்றிக் குறிப்பிட உமக்கு என்ன இருக்கிறது? உமது இறைவனிடமே அதன் முடிவு உள்ளது. நிச்சயமாக நீர், அதைப் பயப்படுவோருக்கு நீர் எச்சரிக்கை செய்பவர்தான்' (அல்குர்ஆன் 79:42-45).

மறுமை நாள் எப்போது ஏற்படும் என்ற ரகசியத்தை அல்லாஹ் தன் கையில் வைத்திருப்பதாக கூறுகின்றான். 'அது வரும்' என்பதைக் கூறும் பொறுப்பில் நபி (ஸல்) அவர்கள் இருந்தார்களே தவிர, அந்த நாள் வரும் காலம் பற்றி அவர்கள் கூறவில்வைல. கூறும் அதிகாரமும் அவர்களுக்கு இல்லை.
காரணம் என்ன?

மறுமை நிச்சயம் வரும் என்ற நிலையில், அது வருகின்ற நாளை தெளிவாக அறிவித்திருக்கலாமே! அறிவிக்கத் தயங்குவது ஏன்? என்ற சந்தேகம் வரலாம்.

நிச்சயமாக அந்த (மறுமையின் நிகழ்வு) நேரம் வரக்கூடியதாக உள்ளது. உயிரினம் அனைத்தும், தான் செய்ததற்கு ஏற்ப கூலி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக அந்த நாளை நான் ரகசியமாக வைத்துள்ளேன் (அல்குர்ஆன் 20:15).

மறுமை நாள் வரும் எனக் கூறும் இறைவன், 'அது எப்பொது வரும்?' என்பதை மட்டும் ஏன் மறைத்து வைத்துள்ளான் என்பதற்கு சரியான காரணத்தை இந்த வசனத்தில் தெளிவு படுத்துகிறான்.

ஆம்! இந்த நாளில் இன்ன நேரத்தில் அது வரும் என்பது முன்கூட்டியே அறிவிப்பு செய்யப்பட்டிருந்தால், மனிதர்களின் வாழ்வில் பெரும் குழப்பமே எஞ்சியிருக்கும். இன்ன நேரத்தில் மரணம் வரும், மறுமை வரும் என்ற செய்திகளை அல்லாஹ் மறைத்து வைத்திருப்பதால் தான் உலகம் ஓரளவு அமைதியாக உள்ளது.

மறுமை வருமா? என்ற சந்தேகம் ஒரு புறம், எப்போதுவரும்? என்ற சந்தேகம் ஒரு புறம் என, அவர்களின் நிலை குழப்பதில் இருந்தது. அது வெகு சீக்கிரம் எரும் என அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் அறிவிக்கின்றனர்.

நிகழப்போகும் (மறுமையின்) வேதனை பற்றி கேள்வி கேட்பவன் கேட்கிறான். இறை மறுப்பாளர்களுக்கு (அது ஏற்படும் போது) அதைத் தடுப்பவர் எவரும் இருக்கமாட்டார். உயர் வழிகளைப் பெற்ற அல்லாஹ்வின் மூலம் (அது ஏற்படும்). ஒரு நாள் வானவர்களும் (ஜிப்ரீல் எனும்) ஆன்மாவும் அவனிடம் உயர்வார்கள். அந்நாளின் அளவு, ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குச் சமமாக இருக்கும். எனவே நீர் அழகிய பொறுமையுடன் இருப்பீராக! அவர்களோ அதை (மறுமையை) வெகு தூரமாகக் காண்கிறார்கள். நாமோ அதைச் சமீபமாகக் காண்கிறோம் (அல்குர்ஆன் 70:1-7).

'. . . இரண்டு நபர்கள் (விற்பனைகுரிய ) துணிகளை விரித்து (ப்பார்த்து)க் கொண்டிருப்பார்கள். அதனை அவர்கள் விற்பனை செய்திருக்க மாட்டார்கள். சுருட்டிக் கூட வைத்திருக்கவும் மாட்டார்கள். அதற்குள் மறுமை சம்பவித்து விடும். மேலும் ஒரு மனிதர் மடி கனத்த தமது ஒட்டகத்தி(ல் பால் கறந்து அப்போதுதா)ன் பாலுடன் (வீடு) திரும்பி இருப்பார். அதற்குள் மறுமை ஏற்பட்டு விடும். ஒருவர் தமது நீர் தொட்டியை (அப்போதுதான்) கல் வைத்து பூசி இருப்பார். இன்னும் அதில் நீர்கூட இறைத்திருக்கமாட்டார். அதற்குள் மறுமை வந்து விடும். உங்களில் ஒருவர் தமது உணவை (அப்போதுதான்) வாயருகில் கொண்டு சென்றிருப்பார். அதைச் சாப்பிட்டிருக்க மாட்டார், அதற்குள் மறுமை வந்துவிடும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.. அறிவிப்பவர்:அபூஹீரைரா(ரலி)
, நூல்: (புஹாரி 6506).

மறுமை நாள் வெகு தூரத்தில் இல்லை. சமீபத்தில் உள்ளது. அது நிகழ்வும் கூட சில வினாடித் துளிகளில் நடந்து முடிந்து விடும் என்பதை இந்த வசனம்-ஹதீஸ் மூலம் அறியலாம்.
மறுமை வரும் அதை அறிவது எப்படி?

மறுமை எப்போது வரும்? என்ற கேள்விக்கு அல்லாஹ் 'வரைவில் வரும்' என்று பதில் கூறினாலும், மறுமை வரும் என்பதை எப்படி அறிந்து கொள்வது? என்ற கேள்வி கூடவே எழத்தானே செய்யும். இதற்கும் அல்லாஹ் பதில் கூறவே செய்கிறான்.

'அவ்வாறல்ல, அவர்கள் அதை விரைவில் அறிவார்கள். மேலும் வெகு சீக்கிரத்தில் அதை அறிவார்கள்'(அல்குர்ஆன் 73:4-5).

'மறுமை நாள் வரும். வரப்போகிறது என்பதை அறிந்து கொள்வார்கள்'. அது வரும்முன், வரப்போகிறது என்பதற்கான சில சான்றுகள் உங்கள் முன் நிகழும். அந்தச் சான்றுகளை வைத்தே அது வரப் போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம் என்ற கருத்திலேயே, விரைவில் அறிவார்கள் என்று கூறுகிறான்.
4-மறுமை வருவதற்கான சில அடையாளங்கள்!

மறுமை நாள் வரும் முன் சில அடையாளங்கள் நிகழும். அந்த அடையாளங்கள், மறுமை நாள் நெருங்கிட்டது என்பதற்கானச் சான்றுகளாக அமையும். இந்த சான்றுகள் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனிலும் குறிப்பிடுகின்றான். நபி (ஸல்) அவர்கள் மூலமாகவும் அறிவிக்கிறான்.

மறுமை அடையாளங்களில் சிறிய அடையாளங்களும் உண்டு. பெரிய அடையாள்களும் உண்டு. சில அடையாளங்கள் நடந்து முடிந்துள்ளன. அந்த அடையாளங்களை நாமும் கண்டு, அனுபவித்துள்ளோம். சில அடையாளங்களோ வெகு விரைவில் ஏற்பட உள்ளன. மறுமை அடையாளங்கள் பற்றி இனி அறிவோம்.

சிலை வணக்கம் செய்வர் முஸ்லிம்கள்!

எனது சமுதாயத்தில் உள்ள சில கோத்திரத்தினர் இணைவைப்பர்களுடன் சேராத வரை – அவர்களின் சிலைகளை வணங்காதவரை மறுமை நாள் ஏற்படாது. மேலும் எனது சமுதாயத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். அனைவரும் தம்மை அல்லாஹ்வின் தூதர்கள் என்று வாதிடுவார்கள். நான் நபிமார்களின் முத்திரையாவேன். நிச்சயமாக எனக்குப்பின் எந்த நபியும் கிடையாது என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளார் : ஸவ்பான் (ரலி) நூல் : திர்மிதீ, அபூ தாவூத்.

தங்களை முஸ்லிம்கள் எனக் கூறிக் கொள்ளும் சிலர், இன்றும் கூட சிலை வணக்க வழிபாடுகிளில் ஈடுபாடு கொள்வதைக் காணலாம். குழந்தை இல்லாத முஸ்லிம் பெண்களில் சிலர். தங்களுக்கு குழந்தை வேண்டி, கோவில்களில் தொட்டில் கட்டிவிடும் நிகழ்ச்சியைக் காண்கிறோம். கோவில் விழாக்களில் முழு அளவில் பங்கெடுக்கும் சில முஸ்லிம்களும் உண்டு. ஓரிறைக் கொள்கைப்படி வாழ வேண்டியவர்கள், சிலை வணக்கத்திலும் ஈடுபடுவது மறுமை நாளின் அடையாளமாகும்.
5-அறியாமை பெருகும்

'மறுமை நாளுக்கு முன் ஒரு காலகட்டம் வரும். அப்போது அறியாமை நிலவும். கல்வி அகற்றப்படும். 'ஹர்ஜ்' பெருகிவிடும். ஹர்ஜ் என்பது கொலையாகும்' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), அபூ மூஸா (ரலி) நூல்-புகாரீ 7063.

முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் இல்லாத பல வசதிகளை இன்று நாம் அடைந்திருக்கிறோம். ஆனால் முன்னோர்களிடம் இருந்த நற்செயல்கிளில்பல, நம்மிடம் இல்லை என்பதை ஏற்கத்தான் வேண்டும். அறிவுள்ள நடவடிக்கை என்பது நம்மிடம் குறைந்து காணப்படுவது நம்மிடம் அறியாமையும் குடியேறிவிட்டது என்பதற்கானச் சாலச் சான்றாகும். அறிவாளிகள் என்று அறியப்படுவோரிடம் அறிவு கெட்ட செயல்கள் மலிந்துள்ளதைக் காணும் போது. மறுமை நாள் மிக அருகில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
6-விபச்சாரம், குடி அதிகரிக்கும்!

'கல்வி உயர்த்தப்படுவதும், அறியாமை மேலோங்குவதும், விபச்சாரம் பெருகுவதும், மதுபானம் அருந்தப்படுவதும், ஐம்பது பெண்களுக்கு ஓர் ஆண் நிர்வகிக்கும் அளவுக்கு பெண்கள் அதிகமாகி ஆண்கள் குறைவதும் மறுமை நாளின் அடையாளங்களாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அனஸ் இப்னு பாலிக் (ரலி) நூல் - புகாரீ, முஸ்லிம், அஹ்மத், நஸயீ.

மறுமை நாளின் அடையாளங்களாக விபச்சாரமும், குடியும் பெருகும் என் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுவது இன்று உண்மையாகி உள்ளது. விபச்சார விடுதிகளை அரசே அங்கீகாரம் செய்து 'ரெட்லைட் ஏரியா' என ஒரு பகுதியை ஒதுக்கி விபச்சாராம் நடைபெற அனுமதிக்கிறது. நட்சத்திர ஹோட்டல் என்ற பெயரிலும் 'ஹை-லெவல்' விபச்சாரமும் அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளது.

குடியைச் சொல்ல வேண்டியதே இல்லை. குடியைத் தடுக்க வேண்டிய அரசு, குடிபானங்களில் அரசு அங்கீகாரம் பெற்றவை என முத்திரையிட்டு விற்பதைக் காணலாம். அரசே மதுபானக் கடைகளின் ஏகபோக உரிமையாளர்களாக இருப்பது தான் ஆச்சரியம். எப்படியோ, நபி (ஸல்) அவர்கள் கூறிய அடையாளம் உண்மை படுத்தப்பட்டது. இதன் மூலம் மறுமை விரைவில் வரும் என்பது உறுதியாகிறது.

'கொலை' அதிகரித்தல்!

'மறுமை நாளுக்கு முன்பாகக் கொலைகள் மலிந்த ஒரு காலகட்டம் வரும். அப்போது, கல்வி மறைந்து போய் அறியாமை வெளிப்படும்' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் - புகாரீ 7066).

அநியாயமாக ஓர் உயிரைப் பறிக்கும் கொலைபாதகச் செயலை செய்யும் முன் பலமுறை யோசித்தது அந்தக் காலம். இப்போதோ கொலை செய்வதற்கு என கூலிப் படைகள் உண்டு. கையை வெட்ட ஒரு கூலி, காலை எடுக்க ஒரு கூலி, உயிரைப்பறிக்க ஒரு கூலி என 'பேரம்' பேசி கொலை செய்யும் கும்பல் அதிகரித்து விட்டது.

தங்களுக்கு பிடிக்காத நாடுகளில் உயிர் பலிகள் சர்வ சாதாரணமாக நடைபெற, பெரிய நாடுகள் ஏற்பாடு செய்கின்றன. இதனால் குண்டு வெடிப்பும், அணுச்சோதனையும், ரசாயன ஆயுதப் புரட்சியும் மனிதர்களின் அன்றாட நடவடிக்கைகளாக மாறி விட்டன. இதுவும் மறுமைநாள் நெருங்கி விட்டது என்பதற்கு அத்தாட்சிகளாக உள்ளன.

காலம் சுருங்கும்!

காலம் சுருங்கும் வரை மறுமை நாள் ஏற்படாது. ஒரு வருடம், ஒரு மாதம் போன்றும், ஒரு மாதம் ஒரு வாரம் போன்றும், ஒரு வாரம் ஒரு நாள் போன்றும், ஒரு நாள் ஒரு மணி போன்றும், ஒரு மணி நேரம் என்பது உலர்ந்த பேரீச்ச மர இலை எரியும் நேரம் போன்றதாகவும் இருக்கும் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் அஹ்மத்.

(மறுமை நாள் வரும் முன்) காலம் சுருங்கி விடும். செயல்பாடு குறைந்து போகும். மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்படும். குழப்பங்கள் தோன்றும். ஹர்ஜ் (கொலை) பெருகிவிடும் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல் - புஹாரி 7061.

காலம் சுருங்கி உள்ளது உண்மைதான். ஒரு காலத்தில் ஒரு ஊருக்குப் பயணம் எனில் பலமாதம், பலவாரம், பல மணிநேரம் என செலவழித்து ஒட்டகை-குதிரை என பயணம் புறப்பட வேண்டும். ஆனால், ஒரு மாத காலம் பணம் செய்து போய் சேர வேண்டிய காலத்தை, சிலமணி நேரங்களில் போய் சேரும் அளவுக்கு விமான வழிபோக்குவரத்து மூலம் காலத்தைச் சுருக்கி விட்டோம்.

செய்திகள் பரிமாற பறவை, மிருகம் போன்வற்றைப் பயன்படுத்தி சில வாரங்களுக்குப் பின் அச்செய்தியை சேர்க்க படாதபாடு பட்ட மனித இனம், இன்று ஈமெயில், இன்டர்நெட் என செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக் கொள்வது, காலம் சுருங்கி விட்டது, மறுமை வரப்போகிறது என்பதை உணர்த்துகிறது.

7-குழப்பங்கள் மலியும்

விரைவில் குழப்பங்கள் சில தோன்றும். அப்போது அவற்றுக்கிடையே (மௌனமாக) உட்கார்ந்திருப்பவன், (அதற்காக) எழுந்து நிற்பவனைவிடவும், அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன், நடப்பவனை விடவும், அதற்காக நடப்பவன்-அவற்றில், ஈடுபவனை விடவும் சிறந்தவன் ஆவான். எவர் இதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறாரோ, அவரை அவை அழிக்க முயலும். அப்போது ஒருவர் ஒரு புகலிடத்தையோ, பாதுகாப்பிடத்தையோ பெற்றால், அவர் அதன் மூலம் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல் - புஹாரி 7081.

குழப்பம் ஏற்படும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் சொல்லித்தருகிறார்கள். குழப்பநிலை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் குழப்பமே மிகைத்து நிற்கிறது. நபித்தோழர்களின் காலத்திலேயே, ஆட்சியதிகராப் போட்டி துவங்கியது முதல் இன்று வரை குழப்பம் இருக்கவே செய்கிறது.

மேலும் குழப்ப நிலைகள் தோன்றும் என்பதும் உறுதியாகிறது. அந்த குழப்பத்தின் போது மனிதன் தன்னை விலக்கிக் கொள்வதே சரியான செயலாகும். குழப்பம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது, இருக்கும் என்பதை கவனிக்கும் போது, மறுமை நாள் மிக நெருக்கத்தில் வர உள்ளது என்பது உறுதியாகிறது.
தனிமையே விருப்பமாகும்

மக்களுக்கு ஒரு காலம் வரும். அப்போது ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வங்களிலேயே ஆடுதான் சிறந்ததாக இருக்கும். குழப்பங்களில் இருந்து தமது மார்க்க (விசுவா)த்தைக் காப்பாற்ற அந்த ஆட்டை ஓட்டிக் கொண்டு அவர் மலை உச்சிக்கும், மழைத் துளிகள் விழும் (கணவாய், பள்ளத்தாக்கு) பகுதிகளுக்கும் சென்று வாழ்வார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்: அபுஸயீத் அல் குத்ரி (ரலி), நூல் - புஹாரி 6495.

குழப்பம் மலிந்து ஈமானை பாதுகாத்திட வழி இருக்காதா? என எண்ணும் நிலை வரும். அப்போது தன் ஈமானைப் பாதுகாக்க ஒரு முஸ்லிம் தன் ஆட்டை ஓட்டிக்கொண்டு, மக்களை விட்டும் தனியே போய் இருக்கும் அளவுக்கு சூழல் அமையும்.

இப்போது இந்த நிலை வந்துவிட்டது. நமக்கேன் வம்பு? என்று எண்ணும் நிலை உருவாகி, தனிமையே நல்லது என்றாகிவிட்டது. இதுவும் மறுமைநாள் நெருங்கி விட்டதற்குச் சான்றாகும்.

வாழும் ஆசை அற்றுப் போய் விடும்

ஒரு மனிதர், மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்ரை)க் கடந்து செல்லும் போது, அந்தோ நான் அவரின் இடத்தில் (மண்ணறைக்குள்) இருந்திருக்க வேண்டாமா? என்று (ஏக்கத்துடன்) சொல்லும் காலம் வராத வரை மறுமை நாள் வராது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல் - புஹாரி 7115.

தனிமையை விரும்பும் மனிதன் இறுதியில், மரணித்து விட்டால், இந்த குழப்பத்திலிருந்து தப்பிக்கலாமே! என்று கருதும் அளவுக்கு குழப்பம் மலிந்து போய் இருக்கும். அப்படி ஒரு சூழல் உருவாகிக் கொண்டு வருவதை உணர முடிகிறது.

எதிர்காலத்தில் இது அதிகமாகலாம். குழப்ப நிலை ஏற்பட்டு, தனிமை என்றாகி இறுதியில் மரணித்தால் நலம் என்று எண்ணும் அளவுக்கு குழப்பம் ஏற்படுவதும் மறுமை றாளின் அடையாளமாகும்.
8-தகுதியற்றவனிடம் ஆட்சி இருக்கும்

நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் மறுமை நாளை எதிர்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் நம்பகத்தன்மை பாழ்படுவது என்றால் என்ன? இறைத்தூதர் அவர்களே! என்று கேட்டார் (ஆட்சியும் அதிகராமும் என) பொறுப்பு, தகுதியற்றவனிடம் ஒப்படைக்கப்படும் போது மறுமை நாளை எதிர்பார்த்துக்கொள் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல் - புஹாரி 6496.

தகுதியற்றவனிடம் ஆட்சியும் அதிகாரமும், நீதி நிர்வாகமும் ஒப்படைக்கப்படும் அவலம் தற்போது ஏற்பட்டுவிட்டது என்பதை எவரும் மறுக்க மாட்டார். இறையச்சமும், நேர்மையும் உள்ள ஒருவனே அதிகாரம் பெற்றவனாக இருக்க வேண்டும். இன்றோ, தகுதி இல்லாத நபர்கள் எல்லாம் ஆட்சியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படும் நிலையைக் காண்கிறோம். இதுவும் மறுமை நாள் சமீபித்து விட்டது என்பதற்கான அடையாளமாகும்.

9-மோசமான ஆட்சியாளர்கள் வருவர்.

ஹஜ்ஜாஜ் ஆளுநர் மூலம் நாங்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் பற்றி நாங்கள் இப்னு மாலிக் (ரலி) அவர்களிடம் முறையிட்டோம். அப்பேது, அவர்கள் நீங்கள் பொறுமையாக இருங்கள். உங்களிடம் உள்ள இந்த காலத்திற்குப்பின், இதனையும் விட மிக மோசமான காலம் வராமல் இருக்காது. இது உங்களின் இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை தொடரும். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள் அறிவிப்பளர்: சுபைர் இப்னு அதீ (ரஹ்) நூல்-புஹாரி - 7068.

எனது உயிரை தன்கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக, உங்கள் இமாமை நீங்கள் கொன்று, சண்டை செய்து கொண்டு உங்களின் உலகத்தை உங்களில் கெட்டவர் ஆட்சி செய்யும்வரை மறுமை நாள் வராது என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி) நூல்-இப்னுமாஜா.

காலம் செல்லச்செல்ல ஆட்சியாளிடம் மோசமான நடவடிக்கை பெருகும். நல்ல ஆட்சியாளரைக் காண்பது அரிதாகும். மறுமை நாள் வரை இது தொடரும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய நிலையை நாம் கண்கூடாகக் காண்கிறோம். மோசமான ஆட்சியாளர்கள் ஆளும் நிலை தொடர்கிறது. இதுவும் மறுமை நாள் மிகமிக அருகில் வந்து விட்டதற்கான அத்தாட்சியாகி விட்டது.
10-போர் மூளும்

மயிர்களால் ஆன செருப்புகளை அணிந்துள்ள ஒரு சமுதாயத்தவருடன் நீங்கள் போர் செய்யாத வரை மறுமை நாள் வராது. உறுதியான கேடயம் போன்ற முக அமைப்புள்ள ஒரு கூட்டத்தாருடன் நீங்கள் போர் செய்யாத வரை மறுமை நாள் ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல் - புஹாரி, திர்மிதி, முஸ்லிம்.

தகுதியற்றவனிடம் ஆட்சி தரப்பட்டு, அவனும் மோசமான செயல் உடையவனாக அமையும் போது, அவனது நடவடிக்கைகள் முழுக்க முழுக்க முஸ்லிம்களுக்கு எதிராகவே இருக்கும். இதன் காரணமாக முஸ்லிம்கள் தாக்கப்படும் அவலம் நீடிக்கும் முஸ்லிம்களும் போர் புரியும் நிர்பந்தத்திற்கு ஆளாவார்கள்.

இந்தப் போரின் உச்சக்கட்டமாக நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸில் குறிப்பிடும் சமூகத்தவருடன் போரிடும் காலம் வரும், அப்போது மறுமை நாள்வரும் அடையாளமாக அது அமையும்.

இப்போதும் கூட முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் பலவற்றில் முஸ்லிம்களுக்கு எதிரான சூழ்ச்சிகள் தொடர்நது கொண்டே இருக்கின்றன. இதனால் சில முஸ்லிம்கள் அந்த நாடுகளில் ஆயுதம் தாங்கி போர் புரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதையும் விட கொடுமை ஒரே வாதத்தை வைத்தே இருதரப்பார் சண்டை போடுவார்கள் என்பதுதான்.

ஒரே வார்த்தையை முன் வைக்கின்ற இரு குழுவினர் ஒருவருடன் ஒருவர் போரிட்டுக் கொள்ளாதவரை மறுமை நாள் வராது என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல் - புஹாரி 3608.
11-ஆண்களின் எண்ணிக்கை குறையும்.

எனக்குப் பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபிமொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன் என்று சொல்லி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூற நான் கேட்டுள்ளேன்.

கல்வி அகற்றப்படுவதும், அறியாமை வெளிப்படுவதும், மது (அதிகமாக) அருந்தப்படுவதும், விபச்சாரம் பகிரங்கமாக நடைபெறுவதும், ஐம்பது பெண்களுக்கு ஒரே ஆண் நிhவாகியாக இருப்பான் என்ற அளவுக்கு ஆண்கள் (எண்ணிக்கை) குறைந்து, பெண்கள் (எண்ணிக்கை) அதிகமாவதும் மறுமை நாளின் அடையாளமாகும். இவை ஏற்படாதவரை மறுமை நாள் வராது என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) நூல் - புஹாரி 6808.

பயணங்களில் ஏற்படும் விபத்து, போர் கால மரணம் என மரணத்தை அதிகம் அனுபவிப்பது ஆண்கள்தான். இதனால் ஆண் இனம் அழிக்கப்பட்டு வருவது என்பது உண்மை. வரதட்சணை போன்ற காரணங்களுக்காக குழந்தைப் பருவத்திலேயே பெண்கள் கொலை செய்யப்பட்டாலும், இன்றும் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களே அதிகம் உள்ளனர். காலப்போக்கில் இன்னும் கூடுதலாக பெண்களின் எண்ணிக்கை பெருகி ஆண்களின் எண்ணிக்கை குறையும். இதனால் ஐம்பதுக்கு ஒன்று என்ற கணக்கில் பெண்-ஆண் விகிதாச்சாரம் அமையும்.

அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவித்து, முஸ்லிமில் பதிவு செய்யப்படுள்ள ஹதீஸில் ஓர் ஆணை நாற்பது பெண்கள் இச்சைக் கொண்டு பின் தொடர்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உள்ளது. இதிலிருந்து பெண்களின் நிலை எந்த அளவுக்கு மோசமாகும் என்பதையும் புரியலாம். இதுபோன்ற நிலை ஏற்படும் போது மறுமை நாள் நெருங்கி விட்டது என்று உணரலாம். இப்போதே ஆண்கள் குறைந்து போவதற்கான அறிகுறியும் தென்படத்துவங்கி விட்டது.

தாய்க்கு எஜமானியாக மகள் இருப்பாள்

(மறுமை நாளின் அடையாளமாக) ஒரு பெண். தன் எஜமானியைப் பெற்றெடுப்பாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: உமர் (ரலி) முஸ்லிம் நூலில் உள்ள நீணட ஹதீஸல் ஒரு பகுதி)

எத்தனையோ ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாலும் இறுதியில் நிர்பந்தம் காரணமாக தன் மகளின் கீழ்வாழும் நிலை ஏற்படும். அப்போது அவள் தன் தாயிடம் எஜமானி போல் நடந்து கொள்வாள்.

பெண் ஒருத்தி, தன் மகளின் ஆதிக்கத்தின் கீழ் வாழும் நிலை உள்ளது என்பதை எவரும் மறுக்க இயலாது. இதுவும் மறுமைநாள் சமீபத்தில் உள்ளது என்பதை உறுதிபடுத்துகிறது.

சாதாரண மனிதன் உயர் நிலையை அடைவான்.

'ஆடுகள் மேய்க்கும் ஏழைகள், நிர்வாணமாகத் திரிவோர், செருப்பணியாதவர்கள் மிக உயர்ந்த மாளிகைகளை எழுப்புவதும், மறுமை நாளின் அடையாளங்களாகும' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

'செருப்பணியாத, நிர்வாணமாகத் திரிவோர், மக்களின் தலைவர்களாக ஆவதும், மறுமைநாளின் அடையாளங்களாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி).

(இந்த இரண்டும் முஸ்லிம் நூலில் இடம்பெறும் ஹதீஸின் ஒரு பகுதியாகும்.).

'அற்பனுக்குப் பிறந்த அற்பன் இவ்வுலகிலேயே பாக்கியசாலியாக ஆகாதவரை மறுமைநாள் ஏற்படாது' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: ஹுபைதா இப்னு யமான் (ரலி) நூல்-திர்மிதீ, அஹ்மத்.
செல்வம் பெருகும்.

இப்பூமி தனது ஈரல் துண்டை தங்கம், வெள்ளியை தூண்களைப் போல் வாந்தியெடுக்கும் (வெளிப்படுத்தும்) ஒரு திருடன் வந்து 'இதற்காகத் தான் என் கை வெட்டப்பட்டது' என்பான். கொலைக்காரன் வந்து, 'இதற்காத்தான் நான் கொலை செய்தேன்' என்பான். உறவுகளைப் பிரிந்து வாழ்பவன் வந்து, 'இதற்காகத்தான் என் உறவுவினர்களைப் பகைத்தேன்' என்பான் (இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் என) அவர்களை அழைத்தாலும் அவற்றில் எதனையும் எடுக்க மாட்டார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம், திர்மிதீ.

செல்வத்தை அதிகப்படுத்திட திருடியவனும், அதற்காக கொலை செய்தவனும், இதற்காக உறவினர்களைப் பகைத்து வாழ்ந்தவனும், 'கண்முன் தங்கப் புதைலே குவிந்து கிடந்தாலும், அதை எடுக்க முன் வர மாட்டார்கள். அவர்களிடம் அந்த அளவுக்கு செல்வம் பெருகி நிற்கும். இனி தேவை இல்லை என்று கூறும் அளவுக்கு பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றிருப்பார்கள். இப்படி சொத்தை அதிக அளவில் பெற்றவர்கள் ஒரு சிலர் மட்டுமல்ல, அனைத்து மக்களும் செல்வந்தர்களாக இருப்பார்கள்.

'நீங்கள் தர்மம் செய்யுங்கள். மக்களிடையே ஒரு காலம் வரும். தன் தர்மப் பொருளை எடுத்துக் கொண்டு செல்வான், ஆனால் அதை வாங்குவோர் எவரும் இருக்கமாட்டார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஹார

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக