அஸ்ஸாம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. வடகிழக்கு மாநிலத்தில் பாதிக்கபட்டதில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்பதால் ஒரு சிலரை தவிர, ஊடகத்துறையில் உள்ள பெரும்பான்மையினர் இதனை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை.
நடந்து கொண்டிருப்பது இன பிரச்சனையா? அல்லது மொழி பிரச்சனையா? அல்லது மத பிரச்சனையா? என்பது குறித்து மக்களும் இன்னும் தெளிவு பெற்றதாக இல்லை. அஸ்ஸாம் மற்றுமொரு குஜராத்தா இல்லை அதை விட மோசமானதா? என்பது குறித்து அரசியல்வாதிகள் மத்தியில் பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கிறது.
இதுவரை ஏறத்தாழ நூறு பேர் மரணித்துவிட்டனர். நான்கு லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள்.
இங்கு உள்ள பிரச்சனைதான் என்ன? இந்த அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் பற்றி எரியவில்லை, மூன்று மாவட்டங்களில்தான் பிரச்சனை வெடித்துள்ளது. அதிலும் இராணுவம் உடனடியாக களத்திற்கு வராததுதான், இந்த பிரச்சனை எல்லை மீறிய வன்முறையாக மாறுவதற்கு காரணம். ஆனால் அம்மாநிலத்தின் முதல்வர் தருண் கோகாய், இங்கு நடைபெற்று கொண்டிருப்பது “இன பிரச்சனைதான்” என்று கூறியுள்ளார்.
மற்றும் இந்திய தேசத்தில் இருந்தது முஸ்லிம்களை வேறோடு அழித்துவிட வேண்டும் என்ற கொள்கையை கொண்டுள்ளவர்களில் ஒருவரான அத்வானி, “வங்கதேசத்தில் இருந்து இங்கு வந்து சட்டவிரோதமாக குடியேறி இருக்கும் இவர்கள் தான் பிரச்னைக்கு காரணம்” என்று தன் திருவாயில் இருந்து மொழிந்துள்ளார். இதனையே இவர்கள் பன்னெடுங்காலமாக கூறி வருகின்றனர்.
கூட்டணி குழப்பங்கள், உள்கட்சி குழப்பங்கள் என்று திணறி வரும் பா.ஜ.க.விற்கு, இது நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது. பழங்குடி இன குழுக்கள் என்ற போர்வையில் செயல்பட்டு வரும் போடோ பிரிவினை வாத குழுக்கள் இவர்களின் சவாரிக்கு பயன்படுகின்றனர்.
அஸ்ஸாம், மக்கள் தொகையில் நாற்பது சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர். இவர்களை வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்று கூறி அவர்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து வருகின்றனர். தங்களை இந்தியர்கள் என்று நிருபிக்க, இவர்கள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த பொய்யை காரணமாக வைத்தே இந்த அப்பாவி முஸ்லிம்களின் நிலங்களை அபகரித்தும், அவர்களின் உயிர்களை வன்முறை மூலம் பறித்தும் வருகின்றனர்.
இவர்கள் வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்றால் எப்போது வந்தார்கள்? இராணுவம், எல்லை பாதுகாப்பு படை, உளவுத்துறை என அனைவரின் கண்களிலும் மண்ணை தூவி விட்டு இத்தனை பேர் எப்படி ஊடுறுவினார்கள்? என்ற கேள்விகள் எழுவது இயல்புதானே. ஆனால் கிடைக்கும் பதில்கள் ஆச்சர்யமாக உள்ளது. அஸ்ஸாமில் உள்ள தேயிலை தோட்டங்களில் வேலை செய்வதற்காக வங்காளதேசத்தில் இருந்து தொழிலாளர்களை அழைத்து சென்றது, அப்போதைய ஆங்கில அரசு. அவற்றில் பெருன்பான்மையினர் முஸ்லிம்கள். ஏறத்தாள ஒரு நூற்றாண்டிற்கு முன் சென்றவர்களைதான் இன்னும் ஊடுருவல்காரர்கள் என்று கூறுகின்றனர் இந்த குறுமதியினர். இவர்கள் அந்நியர்கள் என்றால் பாகிஸ்தானில் இருந்து வந்த அத்வானி எந்த ரகம்? இதே அளவுகோலை வங்கதேசத்தில் இருந்து வந்த இந்துக்களுக்கும் ஏன் பயன்படுத்தவில்லை?
அப்பாவிகளை அடித்து அதில் பிழைப்பு நடத்தி கொண்டிருக்கின்றன போடோ குழுக்கள். ஆயுதங்கள் தங்கு தடையின்றி அவர்களிடம் புரள்கின்றன. இதற்கு மாநில அரசும் உடந்தை, இந்த போடோ குழுக்கள் அரசிலும் பங்கு வகிக்கிறது. முஸ்லிம்களை பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவதை விட்டுவிட்டு இந்த உண்மையான பிரிவினைவாதிகள் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்தகைய பிரிவினைவாதிகள் முஸ்லிம்களை மட்டும் குறிவைக்கவில்லை, சில வருடங்களுக்கு முன்னர் இதே அஸ்ஸாமில், பீகார் மாநிலத்தை சார்ந்தவர்கள் தாக்கப்பட்டதை நாம் மறந்து விட முடியாது. இதே போன்ற குறுமதியினர் மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவிலும் உள்ளனர். பரந்து விரிந்த நாட்டில் ஒரு பகுதியை சேர்ந்தவர்கள் மற்ற பகுதிகளில் வேலை பார்க்கக் கூடாது என்று கூறுவது வடிகட்டிய முட்டாள்தனம். இவர்களின் முட்டாள்தனத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் இந்திய தேசத்தை துண்டாக்கி விடுவார்கள். அதன் பிறகு “வேற்றுமையில் ஒற்றுமை” என்பது பாட நூல்களில் மட்டும்தான் இருக்கும்.
சிந்தனைக்கு
நன்றி : தூதுஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக