புதுடெல்லி:தனியாக ஹஜ்ஜிற்கு செல்லும் பெண்களுக்கு துணையாக செல்லும் மஹ்ரம் முறையை (திருமணமுடிக்க இஸ்லாம் தடுத்துள்ள உறவினர்) மத்திய ஹஜ் கமிட்டியும், மத்திய அரசும், அமிக்கஸ் க்யூரியும் (நீதிமன்றத்திற்கு உதவும் நடுநிலையாளர்) விவாதித்து கருத்தொற்றுமை உருவாக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹஜ் மஹ்ரத்தில் பெண்களுக்கும் இடம் அளிக்கவேண்டும் என்று மத்திய ஹஜ் கமிட்டி கோரிக்கை விடுத்தது. ஹஜ்ஜிற்கு செல்ல கணவர் விண்ணப்பித்த பிறகு அவருடைய மனைவியோ, வேறு பெண் உறவினர்களுக்கோ ஹஜ்ஜிற்கு செல்லவேண்டுமென்றால் அவரையும் மஹ்ரத்தில் சேர்க்கவேண்டும் என்று ஹஜ் கமிட்டிக்காக வாதாடிய வழக்கறிஞர் காலித் அர்ஷ்த் வலியுறுத்தினார்.
இதனிடையே, ஹஜ் மஹ்ரம் பால் ரீதியான பாகுபாடு என கேரள அரசு வாதிட்டது. 400 மஹ்ரம் இடங்களில் பால் ரீதியான பாகுபாடு கூடாது என்றும், பெண்களையும் மஹ்ரத்தில் சேர்க்கவேண்டும் எனவும் கேரள அரசின் வாதமாகும். கேரளத்தின் கருத்தை அமிக்கஸ் க்யூரியிடம் தெரிவித்தால் போதும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.
ஹஜ் கமிட்டிகளின் செயல்பாடுகள் குறித்து மத்திய-மாநில ஹஜ் கமிட்டிகளுக்கு கேள்விகளை அனுப்பிய போதும் ஹஜ்ஜிற்கான வேலைகள் மும்முரமாக நடப்பதால் டிசம்பர் மாதம் பதிலளிக்கப்படும் என்று மத்திய ஹஜ் கமிட்டி தெரிவித்ததாக அமிக்கஸ் க்யூரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சவூதி அரேபியாவில் தங்குமிட செலவும், பயணச் செலவும்தான் ஹஜ் கட்டணம் அதிகரிக்க காரணம் என்றும் அமிக்கஸ் க்யூரி சுட்டிக்காட்டினார்.
இவ்வழக்கில் ஏர் இந்தியா மற்றும் விமானப் போக்குவரத்துறை அமைச்சரையும் கட்சிதாரர்களாக சேர்ப்பதுக் குறித்து பரிசீலிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. ஏர் இந்தியாவின் ஷெட்யூல் துல்லியமாக கிடைக்கவில்லை என்று அமிக்கஸ் க்யூரி தெரிவித்தார். அப்பொழுது நீதிபதிகள், “ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்கும் நிறுவனம் அல்லவா?” என்று கிண்டலாக கேட்டனர். அமிக்கஸ் க்யூரியின் கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு மத்திய ஹஜ் கமிட்டிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மஹ்ரம் தொடர்பான விசாரணை திங்கள் கிழமை நடைபெறும்.
ஏர் இந்தியா மற்றும் விமானப் போக்குவரத் துறை அமைச்சரை வழக்கில் கட்சிதாரர்களாக சேர்ப்பது குறித்து அடுத்த விசாரணையின் போது பரிசீலிக்கப்படும் என்று இவ்வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளான அஃப்தாப் ஆலம், ரஞ்சன் பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறியது.
ஹஜ்ஜிற்கு செல்லும் மனைவிக்கு துணையாக கணவரும், கைம்பெண்கள் மற்றும் சகோதரர்கள் இல்லாத பெண்களுக்கு துணையாக இரத்தபந்தமுள்ள திருமண முடிக்க இஸ்லாம் தடுத்துள்ள உறவினர் செல்லலாம் என்பது ஹஜ் கமிட்டியின் கொள்கையாகும். இவ்வகையில் மஹ்ரம் ஒதுக்கீட்டில் ஆண்களுக்கு 400 இடங்கள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. மஹ்ரம் ஒதுக்கீட்டில் ஆண்களை மட்டுமே சேர்க்கவேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக