Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 6 செப்டம்பர், 2012

எங்கள் எதிர்காலத்தை காத்திடுங்கள். முதல்வருக்கு 'கூடங்குளம் குழந்தைகள்' கடிதம்


இன்று சென்னை வந்துள்ள இடிந்தரை கூடங்குளம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்று எழுதி கொண்டு வந்துள்ளனர். அக் கடிதம் வருமாறு 

செப்டம்பர் 6, 2012 “
"கூடங்குளம் குழந்தைகள்” 
கூடங்குளம், 
இடிந்தகரை மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் திருநெல்வேலி மாவட்டம்

மாண்புமிகு தமிழக முதல்வர்
தமிழக அரசு செயின்ட் ஜார்ஜ் கோட்டை
சென்னை
மதிப்பிற்குரிய அம்மா: வணக்கம்.

நாங்களும் எங்கள் பெற்றோரும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக கடந்த ஓராண்டு காலத்தை தாண்டிப் போராடி வருகிறோம். எங்களுக்கு எந்தவிதமான அடிப்படைத் தகவல்களும் தராது, எங்கள் கருத்துக்களைக் கேட்காது, எங்களுக்கு எந்தவிதமான பேரிடர் பயிற்சியும் தராது, ரஷ்ய நாட்டிடம் இருந்து இழப்பீடு கூட வாங்கித் தராது இந்திய அரசு எதேச்சாதிகாரமாக இந்த அணு உலைகளை நிறுவி வருகிறது. 

சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்தபோதே, இந்திய அணுசக்தித் துறை கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்ப அனுமதி வழங்கியது. இந்நிலையில் அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் திறமையாக, தன்னிச்சையாக செயல்படவில்லை என்று மத்திய தலைமை தணிக்கைக் குழு மிக மோசமான அறிக்கை ஒன்றை அரசுக்கு அளித்திருப்பதையும் தங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறோம். 

இந்தக் குறைபாடுகளுடைய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் தான் நியமித்த ஃபுகுஷிமா விபத்து ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளைக் கூட கூடங்குளம் திட்டத்தில் இன்னும் நிறைவேற்றவில்லை. தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியமும் கடலில் வெளியிடப்படும் கழிவு நீரின் வெப்ப அளவு 45 டிகிரி வரை இருக்கலாம் என்று அனுமதி கொடுத்து விட்டு, பின்னர் சென்னை உயர்நீதி மன்றம் எதிர்ப்பு தெரிவித்தவுடன் அந்த எண்ணை மாற்றி வேறு அறிக்கைத் தருகிறோம் எனச் சொல்லி 36 டிகிரி ஆக குறைத்து புதிய அறிக்கை கொடுத்திருக்கிறது. 

இயற்கை வளங்களை, மனித வாழ்வை அதிகாரிகளின் அறிக்கைகளால் நிர்வகிக்க முடியாது என்பதை தாங்கள் அறிவீர்கள். எங்கள் கடலுக்குள் மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்டுள்ள அனைத்து கழிவுகளையும், வெப்ப நீரையும், கதிர்வீச்சுக் கழிவுகளையும் கொட்டும்போது, எங்கள் கடல் செத்துப் போகும், எங்கள் மக்களுக்கு தொழில் இல்லாமலாகிப் போகும், ஊட்டச்சத்துக் கிடைக்காது, நாங்கள் நோய்களாலும், குறைப் பிரசவங்களாலும், ஊனங்களாலும் அழிந்து போவோம்.

இந்திய அரசாங்கமும், அணுசக்தித் துறையும் இப்படி மக்களுக்கு எதிராக இயங்குவதும், சனநாயகத்தை மிதித்தழிக்க முயற்சிப்பதும், நீதிமன்றத்தை ஏமாற்றுவதும் இளங்குழந்தைகளான எங்களுக்கு தவறானப் பாடங்களை கற்றுத் தருகின்றன. மேலும் அறவழியில், மென்முறையில் போராடுகின்ற எங்கள் பெற்றோர் மற்றும் ஊரார் சுமார் 1,42,561 பேர் மீது ஏறக்குறைய 271 பொய் வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. 

குழந்தைகளாகிய நாங்கள் இந்த கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் எங்கள் எதிர்கால நல்வாழ்வுக்கு, பாதுகாப்புக்கு, உடல்நலத்துக்கு, எங்கள் பெற்றோரின் நோயற்ற வாழ்வுக்கு, தமிழகத்தின் இயற்கை ஆதாரங்களைப் பேணுவதற்கு ஏற்புடையவை அல்ல என்று உறுதியாக நினைக்கிறோம். எங்கள் உணர்வுகளைப் புறந்தள்ளி இந்த அணுமின் நிலையத்தில் எரிபொருளை நிரப்பக் கூடாது, இந்தத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 

இந்திய அணுமின் நிலையங்களில் உற்பத்தி விகிதம் வெறும் 40 சதவிகிதமாக இருக்கும் நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2,000 மெகாவாட் மின்சாரம் ஒருபோதும் வரப்போவதில்லை என்பதை நாம் அறிவோம். எனவே 2,000 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்குக் கேட்டு நாம் மத்திய அரசால் உதாசீனப்படுத்தப் படுவதைவிட, தங்களின் சூரிய சக்தித் திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த ஆவன செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். 

தமிழகத்திலுள்ள வேலையற்ற பொறியியல் பட்டதாரிகள், பிற இளைஞர்கள், ஒய்வு பெற்றோர், தொண்டூழியர்கள் அனைவரையும் சேர்த்து போர்க்கால அடிப்படையில் மின்சாரத் திட்டங்களை அமுல்படுத்துவதற்கு, சீரமைப்பதற்கு தங்களுக்கு உதவிட எங்கள் பகுதி மக்கள் அணியமாய் இருக்கிறோம். 

இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி தரக் கூடாது, அந்நாட்டு விளையாட்டு வீரர்கள் இங்கே வந்து விளையாடக் கூடாது என்றெல்லாம் நல்ல முடிவுகள் எடுக்கும் தாங்கள், இந்தியத் தமிழர் நலனையும், நமது இயற்கை வளங்களையும், எதிர்காலத்தையும் பேணிக் காத்திட ஆவன செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தாங்கள் சாமான்ய தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்தீர்கள், தங்களின் ஆட்சிக் காலம் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்கு அடிகோலியது என்ற நற்பெயரைப் பெற வேண்டும் என அன்போடும், பணிவோடும் தங்களை கேட்டுக் கொள்கிறோம். 

தங்கள் உண்மையுள்ள,
கூடங்குளம் குழந்தைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக